ஸதகா, ஜகாத் கொடுப்பது


ஸதகா, ஜகாத் கொடுப்பது
x
தினத்தந்தி 20 Aug 2019 10:22 AM GMT (Updated: 20 Aug 2019 10:22 AM GMT)

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ஸதகா கொடுப்பது மற்றம் ஜகாத் வழங்குவது குறித்த தகவல்களை காண்போம்.

இஸ்லாமியப் பார்வையில் நிதியுதவி வழங்கும் திட்டம் இரண்டு. ஒன்று ‘ஸதகா’ எனும் ‘தர்மநிதி’. மற்றொன்று ‘ஜகாத்’ எனும் ‘பொது நிதி’.

இந்த இரண்டு விதமான நிதி உதவிகளையும் இஸ்லாம் உடல் சார்ந்த இறை நம்பிக்கையின் பட்டியலில் சேர்த்துள்ளது. வெளிப் படையாக பார்க்கும் போது இவ்விரண்டுமே பொருள் சார்ந்த வணக்கமாகவும், பொருள் சார்ந்த இறைநம்பிக்கையாகவும் காட்சியளிக்கிறது.

அவ்வாறு இருந்தும் இவ்விரண்டையும் உடல் சார்ந்த இறைநம்பிக்கையின் வரிசையில் இணைத்ததற்கு முக்கியமான காரணம், பொருள் சம்பாதிப்பதற்கு அடிப்படையே உடல் உழைப்புதான்.

இவ்வாறு உடல் உழைப்பு மூலம் பொருளீட்டுவதினாலும், அதன்மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து தானதர்மம் செய்வதினாலும், கடமையான ஏழை வரியான ஜகாத்தை வழங்குவதினாலும், இவ்விரண்டையும் உடல் சார்ந்த இறைநம்பிக்கையில் இஸ்லாம் இணைத்திருக்கிறது.

‘ஸதகா’ என்பது ‘உபரியான தர்மம்’. இதில் பொருள் சார்ந்த பங்களிப்பு குறைவாகத்தான் இருக்கும். அறம் சார்ந்த, உடலுழைப்பு சார்ந்த பங்களிப்பு அதிகமாக இருக்கும்.

பசித்தவனுக்கு உணவு, தாகித்தவனுக்கு தண்ணீர், உடுக்கை இழந்தவனுக்கு உடை, வருமானம் இல்லாதவனுக்கு பணம், உதவி தேவைப்படுவோருக்கு உதவி என்று பிறரின் தேவைகளுக்கு ஏற்பத் தேவைப்படும் பொருட்களை வழங்குவதே ‘ஸதகா’ எனும் தர்மம் ஆகும்.

ஜாபிர் (ரலி) கூறுகிறார்: ‘நன்மையான ஒவ்வொன்றுமே தர்மம் ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (புகாரி)

‘உங்களுடைய சகோதரரைப் பார்த்து நீங்கள் புன்னகை புரிவதும் தர்மம். நீங்கள் நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதும் தர்மம். வழி தவறியவருக்கு வழிகாட்டுவதும் தர்மம். பார்வையற்றோருக்கு வழிகாட்டுவதும் தர்மம். கல், முள், எலும்பு போன்றவற்றை நடைபாதையிலிருந்து அகற்றுவதும் தர்மம். உங்களது வாளியிலிருந்து உங்களது சகோதரனின் வாளியில் தண்ணீர் நிரப்புவதும் தர்மமே, என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூதர் (ரலி), நூல்: திர்மிதி)

‘மனிதர்கள் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தம்முடைய ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவர் மற்றவரை தமது வாகனத்தின் மீது ஏறி அமர உதவுவதும், அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றிவிடுவதும் தர்மம் ஆகும். இன்சொல்லும் தர்மம் ஆகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தர்மம் ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), புகாரி)

‘உன் மனைவியின் வாயில் ஒரு கவளம் உணவை ஊட்டுவதும் தர்மமே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஸஃதுபின் அபிவக்காஸ் (ரலி), புகாரி)

‘செவிடருக்கும், வாய்பேச முடியாதவருக்கும் அவர்கள் விளங்கும் வரைக்கும் கேட்க வைப்பதும் தர்மமே. அநீதி இழைக்கப்பட்டவன் உதவி தேடும் போது அவனுக் காக விரைந்து செல்வதும் தர்மமே. பலவீனமானவருக்காக உதவிபுரிய உனது கையை உயர்த்துவதும் தர்மமே, என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூதர் (ரலி), நூல்: அஹ்மது)

மேற்கூறப்பட்ட நபிமொழிகளில் பலவிதமான தர்மகாரியங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று கூட பொருளாதாரம் சம்பந்தப்பட்டது கிடையாது. இஸ்லாத்தின் பார்வையில் தர்மம் என்பது 90 சதவீதம் அறம், நல்லறம் சம்பந்தப்பட்டவையாகும்.

‘நீங்கள் எதைச் செலவு செய்தாலும் அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்’. (திருக்குர்ஆன் 2:272)

‘தர்மம் செய்வது இறைவனின் கோபத்தை தணிக்கும். தீய மரணத்தை தடுக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), திர்மிதி)

‘கஞ்சத்தனமும், தீயகுணமும் ஒரு இறைநம்பிக்கையாளரிடம் ஒன்று சேராது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஸயீத் (ரலி), நூல்: திர்மிதி)

இந்த நபிமொழிகளின் அடிப்படையில் இறைநம்பிக்கையாளர் உபரியான தான, தர்மம் செய்பவராகவும், கடமையான தர்மமாக உள்ள ஜகாத்தை நிறைவேற்றுபவராகவும் இருக்க வேண்டும்.

இதுவரை உபரியான தர்மங்கள் குறித்து பார்த்தோம். இனி கடமையான ஜகாத் குறித்து பார்ப்போம்.

ஜகாத் என்பது இஸ்லாமியச் சின்னம். இந்த ஜகாத் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் கடமையாக்கப்பட்டது. அதே ஆண்டில்தான் ரமலான் நோன்பும் கடமையாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகவும், ஐம் பெரும் கடமைகளில் ஒன்றாகவும் அமைந்திருக்கிறது.

கிட்டத்தட்ட திருக்குர்ஆனில் 82 இடங்களில் தொழுகையுடன் ஜகாத்தையும் இணைத்து கூறப்பட்டிருக்கிறது.

‘தொழுகையைக் கடைப்பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள்’. (திருக்குர்ஆன் 2:43)

ஜகாத் கடமையாகுவதற்கு சில தகுதிகள் உள்ளன. அவை: இறை விசுவாசியாக இருக்க வேண்டும், சுதந்திரமானவராக இருக்க வேண்டும், புத்தி சுவாதினமுள்ளவராக இருக்க வேண்டும், பருவ வயதை அடைந்திருக்க வேண்டும், 87 கிராம் தங்கமோ அல்லது 612 கிராம் வெள்ளியோ இருக்க வேண்டும். பணமாக இருந்தால் 612 கிராம் வெள்ளியின் மதிப்பில் ரொக்கம் இருக்க வேண்டும், பொருளின் மீது முழு அதிகாரம் படைத்திருக்க வேண்டும், இத்தகைய பொருளாதாரம் குறைவில்லாமல் ஒரு வருடம் முழுவதும் பரிபூரணமாக சேமிப்பில் இருக்க வேண்டும்.

இத்தகைய ஏழு பண்புகளும் ஒருவரிடம் பரிபூரணமாக அமைந்து விட்டால், அவர் ஆண்டுக்கு ஒருமுறை ரமலான் மாதமோ, அல்லது வேறு மாதங்களிலோ கடமையான ஜகாத்தை நூற்றுக்கு இரண்டரை சதவீதம் இறைவன் சுட்டிக்காட்டும் எட்டு வகையினருக்கு வழங்கிட வேண்டும்.

இறைவன் சுட்டிக்காட்டும் அந்த எட்டு வகையினர் வருமாறு:

‘ஸகாத் எனும் நிதிகள் 1) வறியவர்கள், 2) ஏழைகள், 3) நிதியை வசூலிக்கும் ஊழியர்கள், 4) எவர்களுடைய இதயங்கள் (இஸ்லாத்தின் பால்) ஈர்க்கப்படுகின்றனவோ அத்தகைய (சகோதர சமுதாயத்த)வர்கள், 5) அடிமைகள் விடுதலை செய்வதற்கும், 6) கடனாளிகள், 7) இறைவனின் பாதையில் (அறப்போராட்டத்தில்) உள்ளவர்கள், 8) வழிப் போக்கர்கள் ஆகியோருக்கு உரியவை. இது இறைவன் விதித்த கடமையாகும். இறைவன் (யாவும்) அறிபவன்; மிக்க ஞானமிக்கவன்’. (திருக்குர்ஆன் 9:60)

மேற்கூறப்படும் எட்டு வகையினரில் இந்த காலத்தில் அடிமைகள் என்பது கிடையாது. அடிமை கலாசாரத்தை இஸ்லாம் முற்றிலும் ஒழிக்க பாடுபட்டது. செல்வந்தர்கள் தமது ஜகாத் நிதியை அடிமைகளை விடுதலை செய்வதற்கு பயன்படுத்திட அழகான வியூகம் அமைத்துக் கொடுத்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.

மேலும் சகோதர சமுதாயத்தில் நலிந்தவர்களுக்கும் ஜகாத் நிதியை பயன்படுத்தலாம் என்று சிபாரிசு செய்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இவ்வாறு கொடுப்பதினால் அங்கே சமூக நல்லிணக்கம், மத நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்த வாய்ப்பை ஜகாத்தின் மூலம் நனவாக்கும்படி இஸ்லாம் கண்ட கனவு நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

பொருளாதாரத்திலும் மனிதனிடம் ஏற்றத்தாழ்வு இருந்து விடக்கூடாது. பொருளாதாரம் செல்வந்தர்களிடம் மட்டுமே சுற்றிவராமல், ஏழைகளிடமும் செல்வச் சுழற்சியும், மறு மலர்ச்சியும் ஏற்பட ‘ஸகாத்’ எனும் ஏழைவரியான நலத்திட்டங்களையும், ‘ஸதகா’ எனும் தர்மநிதியையும் இஸ்லாம் செயல்படுத்தி, செல்வத்தை பரவலாக்கியது.

இஸ்லாம் ஒரு நடுநிலையான மார்க்கம். ஏழைகளை வாழ வைக்கும் மார்க்கம். தொழிலாளர்களை வாழவைக்கும் மார்க்கம். கடமையான ஸகாத்தை நிறைவேற்றாதவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு என இஸ்லாம் எச்சரிக்கிறது.

“இறைவன் யாருக்கேனும் செல்வத்தைக் கொடுத்து, அவன் அதற்கான ஸகாத்தை நிறைவேற்ற வில்லையாயின், மறுமை நாளில் அச்செல்வம், கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனது கழுத்தில் சுற்றிக் கொண்டு, தனது இரு விஷப் பற்களால் அவனது தாடையைக் கொத்திக்கொண்டே ‘நான்தான் உனது செல்வம்; நான் தான் உன் புதையல்’ என்று கூறும்” நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறிவிட்டு திருக்குர்ஆனிலுள்ள (3:180) வசனத்தை ஓதிக்காட்டினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), புகாரி)

‘ஸகாத் நிதி (ஸகாத் அல்லாத) பொருளாதாரத்துடன் கலந்துவிடுமானால் அந்த பொருளாதாரம் அழிந்துவிடும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), பைஹகீ)

மவுலவி அ.செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.

Next Story