அனைவரையும் ஆட்கொண்ட அற்புத அவதாரம்


அனைவரையும் ஆட்கொண்ட அற்புத அவதாரம்
x
தினத்தந்தி 20 Aug 2019 11:16 AM GMT (Updated: 20 Aug 2019 11:16 AM GMT)

தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்ட மகாவிஷ்ணு இதுவரை எடுத்துள்ள ஒன்பது அவதாரங்களில் பூலோகத்தில் மனித பிறவியாக அவதரித்த அவதாரங்கள் மூன்று மட்டுமே.

23-8-2019 கிருஷ்ண ஜெயந்தி

ராமாவதாரத்தில் ஸ்ரீராமனாகவும் கிருஷ்ணாவதாரத்தில் ஸ்ரீகிருஷ்ணராகவும், பரசுராம அவதாரத்தில் பரசுராமராகவும் அவதரித்து, மக்களோடு மக்களாக வாழ்ந்து காட்டி, மக்களுக்கு வாழ்க்கையை உணர்த்தினார். இதில் ராமாவதாரத்தைவிட கிருஷ்ணாவதாரம் மூலம் அவர் சொன்ன செய்திகளும் வாழ்வியல் கருத்துக்களும் ஏராளம்.

கிருஷ்ணாவதாரம்:

ஒருசமயம், தர்மத்துக்கு விரோதமாக பல அநியாயங்கள் செய்த கம்சனை அழிக்கும்படி, பிரம்மாவிடம் முறையிட்டாள் பூமாதேவி. அதை ஏற்ற பிரம்மா, தக்க சமயத்தில் திருமால், கிருஷ்ணாவதாரம் எடுத்து தர்மத்தை நிலைநிறுத்துவார் என, பூமாதேவிக்கு வாக்குறுதி அளித்தார். அதன்படி மகாவிஷ்ணுவை வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது குழந்தையாக பிறக்கச்செய்து தன் வாக்குறுதியை நிறைவேற்றினார். தன்னுடைய சகோதரி தேவகியின் மகன் மூலமே தனக்கு அழிவு ஏற்பட இருப்பதை உணர்ந்த கம்சன், வசுதேவரையும், தேவகியையும் கொல்ல முயன்றான்.

அதனை தடுத்த வசுதேவர் தனக்கும் தேவகிக்கும் பிறக்கும் பிள்ளைகளை அவனிடமே ஒப்படைப்பதாக வாக்களித்தார். அதன்படியே தேவகிக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் வரிசையாகக் கொன்றான், கம்சன். தேவகி ஏழாவது முறையாக கருவுற, திருமாலின் திருவிளையாடல் நிகழ்கிறது. தேவகியின் வயிற்றில் உருவாகிய ஏழாவது சிசுவை, வசுதேவரின் முதல் மனைவி ரோகிணியின் வயிற்றுக்கு இடமாற்றுகிறார்.

அப்படி மாற்றப்பட்ட குழந்தை ரோகிணியின் வயிற்றில் பலராமனாக பிறக் கிறது. (மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரம்). தேவகி எட்டாவதாக கருவுற, திருமால் அவள் வயிற்றில் கருவாகி, ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று கண்ணனாக ஜனித்தார். பிறந்தவுடனேயே பேசிய அந்த தெய்வக்குழந்தை, தன்னை நந்தகோபன் மனைவி யசோதையிடம் விட்டுவிட்டு, அவளுக்குப் பிறந்துள்ள பெண் குழந்தையை எடுத்து வந்து கம்சனிடம் ஒப்படைக்கும்படி வசுதேவரிடம் கூறுகிறது. அதன்படியே செய்த வசுதேவர், குழந்தைகளை இடமாற்றுகிறார். யசோதை தேவகி இருவருமே மயக்க நிலையில் இருந்ததால் குழந்தைகள் மாறிய விஷயம் அவர்களுக்குத் தெரியாது.

அந்தப் பெண் குழந்தையைக் கொல்ல கம்சன் வந்தான். அது வானில் எழுந்து, எட்டு கைகளிலும் ஆயுதம் ஏந்தி, “துர்க்கையான என்னை, உன்னால் கொல்ல முடியாது. உன்னைக் கொல்லக்கூடியவன் ஏற்கனவே கோகுலத்தில் பிறந்து விட்டான்!” என்று சொல்லி மறைந்தது.

கிருஷ்ணரின் பால்யகாலம்:

அரச குலத்தில் பிறந்தாலும் விதி நிமித்தமாக இடையர்கள் குலத்தில் வளர்ந்தார். மாடுகளை ஊர் ஊராக ஓட்டிச்சென்று மேய்த்து உழைத்து ஓர் மாடுமேய்ப்பவனாக வாழ்ந்தார். தீயவர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகிக்கொண்டிருந்த ஆயர்பாடி மக்களுக்கு அவர் பாதுகாப்பாக இருந்தார். அவர்களுக்கு இன்னல் விளைவித்த பூதங்கள், படைகள் என சகலத்தையும் அடக்கினார். தனது சகோதரர் பலராமனுடன் சேர்ந்து தாய்மாமன் வடிவில் இருந்த முதல் எதிரியான கம்சனை கொன்றார். ஆயினும் மன்னராக விரும்பாமல் தாய்வழி தாத்தா உக்கிரசேனரிடம் ஆட்சியை கொடுத்துவிட்டு மறுபடியும் ஆயர்பாடிக்கு காவலானார். அவர் போரிட்ட இடமெல்லாம் வெற்றி கிட்டின. அவர் சென்ற இடமெல்லாம் நியாயங்கள் அரங்கேறின. தர்ம நீதிகள் கிடைக்காத இடங்களில் அவரே தர்மத்தினை ஏற்றி வைத்தார். எந்த ஆயுதத்தையும் ஏந்தாமல் முழுக்க முழுக்க மதி யூகத்தால் யுத்த வியூகத்தை வகுத்து அவர் சாதித்த இடம் மகாபாரத போர்க்களம்.

மகாபாரத போர்:

56 தேசங்கள் பங்கேற்ற அந்த பாரதப்போரில் சூத்ரதாரியான கிருஷ்ணனோ அப்பாவி தேரோட்டியாக வந்தார். 18-ம் நாள் பெரும்போரில் கிருஷ்ணரால் சூழப்பட்ட கவுரவர் படை கூட்டணி வீரர்கள் மொத்தமாக வராமல் ஒவ்வொன்றாக வந்தனர். பெரும் பலசாலிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருந்தது. அதை குறிவைத்து பலசாளிகளை சாய்த்தார். அநியாயம் அழிந்தது. நியாயம் வென்றது. பேரழிவு ஏற்பட்டபோதிலும் பாண்டவர்களை காப்பாற்றி, அவர்கள் வம்சத்தினை தொடர வைத்தவர் அவரே.

கிருஷ்ணர் தன் அவதார நோக்கத்தை நிறைவேற்றி முடித்தபோது அவருக்கு திருதராஷ்டிரனின் மனைவி காந்தாரி 39 ஆண்டுகளில் உன் யதுகுலவம்சம் அழியும் என்பதாய் விட்ட சாபமும், ராமாவதாரத்தில் தன்னால் கொல்லப்பட்ட வாலி விட்ட சாபமும் நினைவுக்கு வந்தது. ராமாவதாரத்தில் தன்னால் கொல்லப்பட்டு இப்பிறவியில் ஜரா என்ற பெயருடன் வேடனாக பிறந்த வாலியின் மூலமாக தன்னுடைய முடிவை தேடினார்.

பிரபாசபட்டினத்தின் ஹிரண்யநதி கரையோர காட்டில் குரா மரத்தடியில் அமர்ந்திருந்த போது, காட்டுமுயலை துரத்திவந்த வேடன் தவறுதலாக விட்ட அம்பை பாதத்தில் தாங்கி உயிர்துறந்தார். அவர் உயிர் வைகுண்டம் சென்றுவிட உடல் சந்தன கட்டையாக மாறி ஹிரண்யநதி நீர் வழியாக பயணித்து கடலுக்குச் சென்று மேற்கு கடற்கரையில் ஒதுங்கிற்று. அந்த இடமே இன்றைய குருவாயூர் ஆகும்.

துவாரகையில் கண்ணனாக உதித்து குருவாயூரில் கிருஷ்ணராக குடிகொண்ட இந்த சிறப்பு வேறு எந்த அவதாரத்திற்கும் இல்லை. அதனால்தான் கிருஷ்ணர் யுகங்கள் கடந்தும் நிலைத்து நிற்கிறார். அவர் இருக்குமிடத்தில் அமைதியும், ஆனந்தமும், பாதுகாப்பும் இருக்கும் என்பதே அவர் வாழ்வு சொல்லும் பாடம்.

கிருஷ்ணர் வாழ்ந்த ஆதாரம்:

குஜராத்திலுள்ள துவாரகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆராய்ச்சியில் மூழ்கிய நகரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது மகாபாரதத்திலும் பாகவதத்திலும் கூறப்பட்டுள்ள துவாரகை நகரை ஒத்துள்ளது. மேலும் அங்கே கண்டெடுக்கப்பட்ட சங்குகள், நாணயங்கள் போன்றவை மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒத்துள்ளன. இதனால் ஆதாரப்பூர்வமாக கிருஷ்ணன் என்ற மன்னன் வாழ்ந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர் கள் கருதுகின்றனர்.

துளசி மாலை அணிவது ஏன்?:

விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு. துளசி மாலையை விரும்பி சூடும் கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன். ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன். குளிர்ந்த மேனியவன். எனவே தான், கண்ணன் துளசிமாலை அணிந்து கொள்வான். வீடுகளின் பின்பக்கத்தில் துளசிமாடம் அமைப்பதும் இதனால்தான். பூச்சிகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் வீட்டிற்குள் நுழையாமல் தடுப்பதற்கும் துளசிமாடம் அமைத்து அதனை வழிபட்டார்கள்.

கோவிந்தா:

வைணவத் தலங்களுக்கு சென்றால் கோவிந்தா என்ற குரல் ஆங்காங்கே எதிரொலிப்பதை கேட்கலாம். கோவிந்தா என்ற சொல்லுக்கு ‘பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்’, ‘பூமியை தாங்குபவன்’ என்று பொருளாகும். வழிபாடு செய்யும் போது, கோவிந்தா என்று அழைத்து வழிபட்டால் கூடுதல் பலன்களைப் பெறலாம்.

கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு. இதை ‘கோ இந்தா’ என்றும் பிரிக்கலாம். ‘கோ’ என்றால் ‘பசு’ ‘இந்தா’ என்றால் ‘வாங்கிக்கொள்’ என்று பொருள்படும். கோவிந்தா, கோவிந்தா, என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம். எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள். பசுக்களுடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணனின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.

நெய்வாசல் நெடுஞ்செழியன்

Next Story