முன்னின்று காக்கும் முதன்முதற் கடவுள்


முன்னின்று காக்கும் முதன்முதற் கடவுள்
x
தினத்தந்தி 29 Aug 2019 11:26 AM GMT (Updated: 29 Aug 2019 11:26 AM GMT)

மனிதர்கள் முதல் தேவர்கள் வரை, யாராக இருந்தாலும் எந்தவொரு காரியத்தை ஆரம்பிக்கும்போதும், அது இடையூறின்றி இனிதே நடந்து முடிய விநாயகரை வழிபடுவது ஐதீகமாகும்.

பூஜை, ஹோமம் உள்ளிட்ட சகல சுப காரியங்களை நடத்தும்போது முதலில் விநாயகர் பூஜையைச் செய்த பின்னர்தான் மற்ற தேவதைகளுக்குப் பூஜைகள் செய்யப்படும். எதையும் எழுதுவதற்கு முன்பாக முதலில் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குவது நமது பாரம்பரியமாக உள்ளது. முக்காலத்துக்கும் வழிகாட்டும் பிள்ளையார், கணங்களுக்கெல்லாம் அதிபதியாக விளங்குபவர். நற்காரியங்கள் அனைத்துக்கும் அவரே ஆதாரம். அவரை வழிபடுவதால் ஞானம், ஆனந்தம், வெற்றி ஆகிய அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

விநாயகர் சதுர்த்தி நாளில், அதிகாலையில் நீராடி, வீட்டில் பூஜை நடைபெறும் இடத்தைச் சுத்தப்படுத்தி, மாக்கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். மண்ணால் பிள்ளையார் விக்கிரகம் செய்து வைத்து, அருகம்புல், வெள்ளெருக்கு மாலை சாத்தி, சந்தனம், குங்குமம் திலகமிட்டு அலங்கரிக்கலாம். நைவேத்தியமாக மோதகம், அப்பம், அவல், பொரி கடலை, தேங்காய்ப்புட்டு, பொங்கல், எள்ளுருண்டை, தேன், சர்க்கரை, தினை மாவு, பால், மா, வாழை, கரும்பு, நாவற்பழம், விளாம்பழம், இளநீர் ஆகியவற்றை தாம்பூலத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

விநாயகர் துதிப் பாடல்களைப் பாடி, தூபம், தீபம் ஆகிய உபசாரங்கள் செய்ய வேண்டும். விநாயகர் வழிபாடு முடிந்தபின்னர் குறிப்பிட்ட ஒரு நாளில் விநாயகர் விக்கிரகத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலையில் சேர்க்கலாம். விநாயகர் சதுர்த்திஅன்று அவரை வழிபடுவதால், சந்திரனின் அனுக்கிரகம் கிடைப்பதுடன், கேது, சனி ஆகிய கிரகங்களால் ஏற்படும் தோஷங்களும் நீங்கும். அதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும், அறிவு பிரகாசிக்கும், குடும்ப ஒற்றுமை ஏற்பட்டு, பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன.

சூரியனுக்குரிய நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரத்தில் வீட்டிலும், ஆலயத்திலும் விநாயகரை வழிபட்ட பின், அம்பிகைக்கு ஏழு நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டால், ராகு, கேது தோஷங்கள் நீங்கி, தடைபட்ட கல்யாணம் வீட்டில் நடக்கும். பிள்ளைச் செல்வம் இல்லாத தம்பதியருக்கு, பிள்ளை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கையுடன் கடைப்பிடிக்கப்படுகிறது.

விநாயகரும்.. மரங்களும்..

பிள்ளையார் அமர்ந்து அருள் தரும் ஐந்து மரங்கள், பஞ்ச பூதங்களை குறிப்பிடும் மரங்களாக மிகவும் சிறப்பு பெற்றவையாக ஆன்றோர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, அரச மரம் ஆகாய தத்துவமாகவும், வாத நாராயண மரம் வாயு தத்துவமாகவும், வன்னி மரம் அக்னி தத்துவமாகவும், முழுநெல்லி மரம் நீர் தத்துவமாகவும், ஆல மரம் நில தத்துவமாகவும் குறிப்பிடப்படுகின்றன. அந்த மரங்களின் அடியில் அருள்பாலிக்கும் பிள்ளையாரை வணங்கி வழிபட்டால் நினைத்த காரியங்கள் யாவும் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை.

வில்வ மரத்தடியில் அமர்ந்துள்ள விநாயகரை, சதுர்த்தி நாளில் வழிபட்டு விட்டு, ஏழைகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தானமாகக் கொடுத்து, வில்வ மரத்தை வலம் வந்தால் கணவன் - மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகி அவர்கள் அமைதியாக வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

ஆலயங்களில் உள்ள அரச மரத்தடியில் அருள்பாலிக்கும் விநாயகரை, பூசம் நட்சத்திர நாளில், நெய் தீபமேற்றி வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு அது கிடைக்கும் என்பதும் ஐதீகமாக உள்ளது. ஆல மரத்தடியில் உள்ள விநாயகரை வலம் வந்து, வணங்கினால் கடுமையான நோய்கள் அகலும். வேப்ப மரத்தடி விநாயகரை வலம் வந்து வழிபட்டால், மனதுக்குப் பிடித்த வாழ்க்கைத் துணை அமையும்.

நெல்லி மரத்தடியில் உள்ள பிள்ளையாரை வழிபட்டால், வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் சந்தோஷமாக இருப்பார்கள். பெண் குழந்தை வேண்டுபவர்களும் நெல்லி மரத்தடி விநாயகரை வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும். மா மரத்தடியில் அமர்ந்துள்ள விநாயகரை, சதுர்த்தி நாளில் வழிபட்டு, மூன்று அல்லது ஐந்து சுமங்கலிகளுக்கு உணவும், வஸ்திர தானமும் செய்தால் வியாபாரம் சிறப்பாக நடக்கும். நாவல் மரத்தடியில் இருக்கும் பிள்ளையாரை வழிபட்டு, இனிப்புகள் மற்றும் வெண்ணெய் தானம் செய்தால் குடும்ப ஒற்றுமை மேம்படும். கணவன் - மனைவியிடையே அன்பு அதிகரிக்கும்.

இலுப்ப மரத்தடியில் உள்ள விநாயகரை நெய் தீபம் ஏற்றி வழிபட்டு, சிறுமிகளுக்கு மஞ்சள் வஸ்திர தானம் செய்தால் காரிய வெற்றியும், அதிர்ஷ்டமும் கிடைக்கும். சந்தன மரத்தடியில் உள்ள பிள்ளையாரை வணங்கி வரும் மாணவர்கள், விளையாட்டு வீரராக உருவாகலாம். வியாபாரிகள் லாபம் பெறுவார்கள். நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக நடந்தேறும் என்பதாக பலரும் குறிப்பிட்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய்பிறை சதுர்த்தி நாட்களில் 16 கன்னிப் பெண்களுக்கு ரவிக்கைத் துணி, வளையல், மஞ்சள், குங்குமம் கொடுத்து வன்னி மரத்தடி விநாயகரை வணங்கினால், திருமணத் தடை நீங்கும். வன்னி மரத்தடி விநாயகருக்கு அவல், பொரி, பொட்டுக்கடலை படைத்து, அந்தப் பிரசாதத்தை 108 குழந்தைகளுக்கு வழங்கினால், தொழிலில் லாபம் கிடைக்கும்.

விநாயகர் தரும் பலன்

விநாயகர் சதுர்த்தி நாளில் கீழ்க்கண்ட பொருட்களில் பிள்ளையாரை அமைத்து வழிபட்டால், பல நன்மைகளை அடையலாம் என்பது ஆன்மிக சான்றோர்களின் கருத்தாகும்.

மஞ்சள் பிள்ளையார் - திருமணத் தடை நீங்கும்

மண் பிள்ளையார் - ராஜ பதவி கிடைக்கும்

புற்றுமண் பிள்ளையார் - வியாபாரம் பெருகும், லாபம் கிடைக்கும்

வெல்லப் பிள்ளையார் - சவுபாக்கியம் உண்டாகும்

உப்புப் பிள்ளையார் - எதிரிகள் வசியமாவர்

வேப்பமரப் பிள்ளையார் - ஜெயம் உண்டாகும்

வெள்ளெருக்கு பிள்ளையார் - ஞானம் கிடைக்கும்

பசுஞ்சாணப் பிள்ளையார் - எண்ணிய காரியம் கைகூடும்

பச்சரிசி மாவுப் பிள்ளையார் - விவசாயம் பெருகும், விளைச்சல் அதிகரிக்கும்

வெண்ணெய் பிள்ளையார் - வியாதிகள் அகலும்.

Next Story