ஆன்மிகம்

சிறப்பான வாழ்வு அருளும் முத்துக்குமாரசுவாமி + "||" + Muttukkumarasami is Bless the best life

சிறப்பான வாழ்வு அருளும் முத்துக்குமாரசுவாமி

சிறப்பான வாழ்வு அருளும் முத்துக்குமாரசுவாமி
சிவபெருமானின் நெற்றிக்கண் தீப்பொறியில் இருந்து அவதரித்தவர் சிவக்குமாரன். பார்வதிதேவியால் ஞானப் பால் ஊட்டி வளர்க்கப்பட்ட சக்தி மைந்தன் முருகப்பெருமான். அந்தக் குமரன், குன்றிருக்கும் இடத்தில் எல்லாம் குடியிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.
தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகரில் இருந்து வடக்கு திசையில் 8 கிலோமீட்டர் தொலைவில் பண்பொழி (பைம்பொழில்) என்ற ஊர் உள்ளது. இங்கு இயற்கை அழகு கொஞ்சித் தவழும் மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடர்களின் சிறிய குன்றில் திருமலை முத்துக்குமார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு மூலவராக இருந்து முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். இவரை ‘முத்துக்குமாரசுவாமி’ என்றும், ‘குமாரசாமி’ என்றும் அழைக்கின்றனர்.

இந்த முருகப்பெருமான் நான்கு கரங்களுடன் மேல்நோக்கிய வலது கையில் சக்தி ஆயுதம், இடது கையில் வச்சிராயுதம் தாங்கியும், கீழ்நோக்கிய வலது கையில் அபயக்கரம், இடது கையில் சிம்ம கர்ண முத்திரையும் காட்டி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். தேவார வைப்புத் தலமான இந்தக் கோவில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 520 அடி உயரத்தில் உள்ளது. கோவிலுக்கு செல்ல சுமார் 600 படிக்கட்டுகள் ஏற வேண்டும். அந்த படிக்கட்டுகள் ஸ்கந்த கோஷ்டப் பித்ருக்கள் வசிக்கும் தேவ படிக்கட்டுக்கள் எனச் சொல்லப்படுகிறது. ஆகையால், இந்த தலத்திற்கு வந்து முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால், நம் சந்ததிகளுக்கு நல்ல சிறப்பான வாழ்வு அமையும். நல்ல வாரிசுகள் உருவாகும் என்பது ஐதீகம்.

தல வரலாறு

முன்னொரு காலத்தில் திருமலைக் கோவிலில் ஒரு வேல் மட்டும் இருந்தது. அந்த வேலுக்கு, பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் அபிஷேகம் மற்றும் பூஜைகளைச் செய்து வந்தார். ஒருநாள் நண்பகல் பூஜையை முடித்து விட்டு, ஓய்வுக்காக ஒரு புளிய மரத்தடியில் அர்ச்சகர் படுத்திருந்தார். அப்போது, முருகப்பெருமான் அவரது கனவில் எழுந்தருளி, “பட்டரே! இந்த மலை எனக்குச் சொந்தமானது. நான் இங்கிருந்து சற்று தொலைவிலுள்ள கோட்டைத்திரடு என்ற இடத்தில் சிலை வடிவில் இருக்கிறேன். நீ அங்கு சென்று எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியை தோண்டிப் பார். அதற்குள் சிலை இருக்கும். அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபடு” என்றார்.

அதன்படியே பந்தளத்தை ஆண்ட அரசருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, குறிப்பிட்ட இடத்தில் இருந்து முருகப்பெருமான் சிலையை எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினார்.

இத்தலத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு, பார்வதிதேவி தன் வாயால் அருளிச் செய்த ‘தேவி பிரசன்ன குமார விதி’ப்படி எட்டுக்கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இக்கோவிலில் மற்ற கோவில்கள் போன்று பள்ளி யறையில் சுவாமியைப் பாதுகை செய்வது இல்லை. மூலவருக்குப் பால், பழம், ஊஞ்சலுடன் சயனப் பூஜை மட்டுமே செய்யப்படுகிறது.

திருமலையின் வெளிப்பிரகாரத்தில் வடமேற்குப் பகுதியில் தனிக் கோவிலாகத் திருமலைக்காளி கோவில் இருக்கிறது. இங்கே காளியம்மன் வடதிசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார். இந்த ஆலயம் முருகப்பெருமானின் பிரதிஷ்டை நடைபெறுவதற்கு முன்பே இருந்த ஆலயம் என்கிறார்கள். இந்தக்காளி திருமலையின் காவல் தெய்வமாக பார்க்கப்படுகிறார். முருகனை தரிசிக்க படிகள் செல்லும் இடத்தின் மேற்கே, தனிச்சன்னிதியாக இடும்பன் சன்னிதி அமைந்துள்ளது.

கோவில் உள்பிரகாரத்தில் வடகிழக்கில் ஈசானத்தில் தெற்கு நோக்கி காலபைரவர் சன்னிதி உள்ளது. இங்கு 5½ அடி உயரமுள்ள கம்பீரமான தோற்றத்துடன் பைரவர் வீற்றிருக்கிறார். முருகன் சன்னிதியை அடுத்து 16 படிகள் ஏறிச்சென்றால், விநாயகருக்கு தனி சன்னிதி இருக்கிறது. அவர் ‘உச்சிப்பிள்ளையார்’ என அழைக்கப்படுகிறார்.

திருமலைக்கோவில் வரலாற்றை எழுதிய பேராசிரியர் கணபதிராமன், “சிலப்பதிகாரத்தில் வரும் நெடுவேள்குன்றம் என்பது இக்குன்றமே” என்றும், “கண்ணகி இக்குன்றைக் கடந்தே சேரநாடு சென்றாள்” என்றும் ஆராய்ச்சிக் குறிப்பேட்டில் கூறியுள்ளார். அருணகிரிநாதர் தமது நூலான திருப்புகழில் திருமலை முருகனைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

இந்த ஆலய முருகனுக்கு மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை, மாதாந்திர கார்த்திகை நட்சத்திர நாள், தமிழ் மாதப்பிறப்பு நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. முருகப்பெருமான் அவதரித்த விசாக நட்சத்திரத்திற்கு உகந்த கோவிலாக திருமலை முத்துக்குமரசுவாமி கோவில் உள்ளது. இதனால் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்தக் கோவிலுக்கு வாழ்வில் ஒரு முறையாவது வந்து செல்ல வேண்டும். விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய முருகனுக்குரிய நட்சத்திர நாட்களில் இம்மலையில் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஓடவள்ளி, நள மூலிகை, திருமலைச் செடி ஆகிய மூலிகைகள் வளர்கின்றன. செல்வ விருத்திக்காக, திருமலை செடியின் வேரையும், தனகர்ஷண யந்திரத்தையும் இணைத்து ஒரு காலத்தில் பூஜை செய்திருக்கிறார்கள். இன்று இந்த மூலிகைகளை அடையாளம் காண முடியவில்லை.

‘வி' என்றால் ‘மேலான' என்றும், ‘சாகம்' என்றால் ‘ஜோதி' என்றும் பொருள்படும். விசாக நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக்கிரகணங்களைக் கொண்டது. இந்த கிரகணங்கள் அனைத்தும் இம்மலையில் படுவதால், விசாக நட்சத்திரத்தினர் இங்கு சென்று வழிபட்டுவந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படும்.

கேரள மாநிலத்தின் எல்லையில் இக்கோவில் அமைந்துள்ளது. பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றி செல்கின்றனர்.

அமைவிடம்

செங்கோட்டையில் இருந்து வடமேற்கில் 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் வடமேற்குத் திசையில் இருக்கின்றது. தென்காசி மற்றும் செங்கோட்டையில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. 2012-ம் ஆண்டு முதல் மலை மேல் வாகனங்கள் சென்று வர தார் சாலையாக மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

அகத்தியர் உருவாக்கிய தீர்த்தம்

‘ஓம்’ என்ற வடிவம் கொண்ட உயர்ந்த குன்றில் அமைந்துள்ள, இந்தக் கோவிலின் தீர்த்தத்தை ‘பூஞ்சுனை’ என்று அழைக்கின்றனர். இது அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்டது. நாள்தோறும் ஒரு தாமரை மலர் இந்தச் சுனையில் மலரும். அதைப் பறித்து, இந்திராதி தேவர்களும், சப்த கன்னியர்களும் முருகனுக்குச் சூட்டி வழிபடுவதாக நம்பிக்கை நிலவுகிறது. இத்தகைய அற்புதமான இந்த ஆலயத் தீர்த்தத்தில் நீராடினால் பலவித நோய்கள் நீங்குவதாக சொல்கிறார்கள். இங்குள்ள தீர்த்தக்கரையில் சப்த கன்னியர்களும் வாசம் செய்கின்றனர்.

- மருத்துவர் நா.மோகன்தாஸ்