வாழ்வியலை சிதைக்கும் தீமைகள்


வாழ்வியலை சிதைக்கும் தீமைகள்
x
தினத்தந்தி 27 Sep 2019 8:16 AM GMT (Updated: 27 Sep 2019 8:16 AM GMT)

மனிதர்களின் நிம்மதியை கெடுத்து, அவர்களின் வாழ்க்கையை சிதைத்துக் கொண்டிருக்கும் தீமைகள் எதனால் ஏற்படுகின்றது என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே திருக்குர்ஆன் இந்த வசனம் மூலம் சொல்லிக்காட்டுகின்றது.

“(நபியே, அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: ‘வாருங்கள், உங்கள் இறைவன் உங்களுக்குத் தடுப்பவற்றை(யும் ஏவியிருப்பவற்றையும்) நான் உங்களுக்கு ஓதிக்காண்பிக்கிறேன். (அவையாவன:) அவனுக்கு யாதொன்றையும் நீங்கள் இணையாக்காதீர்கள். (உங்கள்) தாய் தந்தையுடன் மிக அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள் (அவர்களுக்கு உதவி செய்யுங்கள்). வறுமைக்குப் பயந்து உங்கள் பிள்ளைகளை நீங்கள் கொலை செய்யாதீர்கள். (ஏனென்றால்,) உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம். ரகசியமாகவோ, பகிரங்கமாகவோ உள்ள மானக்கேடான விஷயங்களில் எதற்கும் நெருங்காதீர்கள். (கொலை செய்யக்கூடாதென்று) அல்லாஹ் தடுத்துள்ள எந்த மனிதனையும் நியாயமின்றி கொலை செய்யாதீர்கள். நீங்கள் (தவறு செய்யாது) உணர்ந்து கொள்வதற்காக இவற்றை (இறைவன்) உங்களுக்கு (விவரித்து) உபதேசிக்கின்றான்.

“அநாதைகளின் பொருளை அவர்கள் பருவமடையும் வரையில் நியாயமான முறையிலன்றி தொடாதீர்கள். அளவை (சரியான அளவுகொண்டு) முழுமையாக அளங்கள். எடையை நீதமாக நிறுத்துங்கள். யாதொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நாம் நிர்ப்பந்திப்பதேயில்லை. நீங்கள் எதைக் கூறியபோதிலும் (அதனால் பாதிக்கப்படுபவர்கள்) உங்கள் உறவினர்கள் ஆயினும் (சரியே!) நீதத்தையே கூறுங்கள். நீங்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுங்கள். நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவே இவற்றை அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். (6:151-152)

இந்த வசனத்தின் மூலம் மனிதனின் தவறுகளையும், சமுதாயத்தில் அவனால் ஏற்படும் தவறுகளையும் தனித்தனியாகக் குறிப்பிட்டு அல்லாஹ் சொல்கிறான்.

முதலில் குறிப்பிடும் போது, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனே, அவனுக்கு இணை கற்பிக்காதீர்கள் என்று குறிப்பிடுகிறான். இது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை.

அடுத்து தாய் தந்தையரை மகிழச்செய்யுங்கள், அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று குறிப்பிடுகிறது. இன்றைய காலச்சூழ்நிலைகள், பிள்ளைகள் பெற்றோரை பாரமாய் கருதும் நிலை காணப்படுகிறது. இன்று மகனாய் இருக்கும் ஒருவன் நாளை பெற்றோராய் மாற வேண்டிய கட்டாயம் இருப்பதை மறந்து விடுகிறான். தன் பெற்றோருக்கு நேர்ந்த கதி தனக்கும் நேரும் என்பதை அறிந்தும் அதில் பாராமுகமாயிருக்கின்றனர். எனவே தான் அதை தவிர்ந்திடுங்கள் என்று அறிவுரை பகர்கிறது.

அறியாமை காலத்தைப்போன்றே இப்போதும் சிலர் தான் கருவில் சுமக்கின்ற பிள்ளை பெண்ணாக இருந்தால் கருவிலேயே சிதைத்து விட எண்ணுகிறார்கள். பாவமான இந்தக்காரியத்தைச் செய்யக்கூடாது என்று சொல்வதோடு, ‘நீங்கள் கவலை கொள்ள வேண்டாம், உங்களைப் போல் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.

அடுத்துச் சொல்லும் போது பொய், புரட்டு, திருட்டு, மது, ஆணவம், அகம்பாவம், புறம் கூறுதல், விபச்சாரம் போன்ற மானக்கேடான செயல்களின் பக்கம் நெருங்காதீர்கள் என்கின்றது. எல்லா தீமைகளுக்கும் இவைகளில் ஒன்றாவது காரணமாக இருக்கின்ற காரணத்தால் இதனை நெருங்காதீர்கள் என்று எச்சரிக்கிறது.

கொலை செய்வது மகாபெரிய பாவம். உயிரைப் படைப்பதற்கு சக்தியற்ற மனிதனுக்கு, அதனைப் பறிப்பதற்கு உரிமை கிடையாது. எனவே கொலை பாதகத்தைச் செய்யாதீர்கள் என்று அச்சுறுத்துகிறது.

இத்தனையும் தனிமனித ஒழுக்கம் சார்ந்த செயல்பாடுகள். அதனை அனைவரும் உணர்ந்து வாழ்ந்தால், அவர்கள் வாழ்வில் சுபீட்சமும் அமைதியும் நிலவும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்காது.

பொதுவாழ்வு சார்ந்த தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது, ‘நீங்கள் அனாதைகளின் சொத்திற்கு பாதுகாவலராக நியமிக்கப்பட்டால், அதனை நீங்கள் அனுபவிக்க எண்ணாதீர்கள்’ என்று குறிப்பிடுகிறது. காரணம் அனாதைகள் சொத்தும், அமானிதமும் அபகரிக்கப்பட்டால் அது உங்களுக்கு கேட்டை விளைவிக்குமே தவிர ஒருபோதும் நன்மையை பெற்றுத்தராது. எனவே அதில் கவனம் தேவை.

அடுத்து வணிகத்தில் நிகழும் தவறுகளை சுட்டிக்காட்டும்போது, ‘அளவினை முறையாக அளந்து கொடுங்கள் எடையை நீதமாக நிறுத்துக்கொடுங்கள்’ என்று கட்டளையிடுகிறது. அளவுகளில், நிறுவைகளில் மோசடி செய்வது பெரும் பாவமாகும். ஆனால் சிலர் இதை அறிந்தும் இந்தப்பாவத்தை செய்து வருகிறார்கள். இதற்கான இறைவனின் தண்டனை மிகக்கடுமையானது என்பதை திருக்குர்ஆன் பல இடங்களில் குறிப்பிடுகிறது.

வாழ்வில் சில சம்பவங்கள் நிகழும் போது சாட்சியம் கூறுவது அவசியம். அது ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படும் என்பதும் யதார்த்தம். அப்படி சாட்சி கூறும்போது, ‘உண்மையைத் தவிர எதையும் சொல்லலாகாது, அது உங்கள் உறவுகளை பாதிக்கின்ற போதும்’ என்றும் குறிப்பிடுகிறது திருக்குர்ஆன்.

சாட்சியும் சொல்வது சாதாரண விஷயம் அல்ல. சாட்சிகள் தவறும்போது வழக்கின் போக்கே மாறி தவறான தீர்ப்புகள் வந்து விடலாம். அதில் எச்சரிக்கை தேவை என்பதை தான் அழுத்தமாக கூறுகிறது.

இக்கால சூழ்நிலையில் நடந்து கொண்டிருக்கிற அத்தனைப் பாவங்களுக்கும் ஆணிவேர் மேலே குறிப்பிட்டவைகளாகத்தான் இருக்க முடியும். இவற்றைச் சரி செய்தால் பாவங்கள் குறைந்துவிடும் என்பதை வலியுறுத்தவே இந்த வசனத்தில் ஒட்டுமொத்த செய்திகளையும் விவரித்து கூறியுள்ளான் அல்லாஹ்.

தனிமனித ஒழுக்கம், சமுதாய சிந்தனை இவற்றுக்கு பங்கம் ஏற்படாமல் ஒருவன் வாழ்வை அமைத்துக்கொண்டால் அது ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வழியாக அமையும்.

எந்த ஒரு மாற்றமுமே நம்மில் இருந்தே தொடங்க வேண்டும். மாற்றங்களில் விளைவுகள் வெளிவர சற்று கால அவகாசங்கள் தேவைப்படலாம். அதற்கு பொறுமை வேண்டும். பொறுமையாளர்களோடு அல்லாஹ் இருக்கின்றான் என்ற நம்பிக்கையும் வேண்டும்.

1400 ஆண்டுகளுக்கு முன்னால் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு மாற்றங்களை மக்கள் மனங்களில் விதைத்துச் சென்றார்கள். இதன்மூலம் ஒரு பண்பட்ட சமூகம் உருவாகி இருந்தது. காலப்போக்கில் ஏற்பட்ட சறுக்கல்களாலும், சைத்தானின் தூண்டுதலாலும் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.

நன்மையின் பக்கம் நாம் திரும்ப வேண்டும் எனில், இந்த வசனங்களின் அறிவுரைகள் நம் செயல்பாட்டிற்கு வந்தாக வேண்டும். அது கற்பித்த வாழ்வியல் மீண்டும் மலர வேண்டும். அதற்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக, ஆமீன்.

மு.முகமது யூசுப், உடன்குடி.

Next Story