எதிரிகளையும் நேசியுங்கள்
உலகிலுள்ள அனைத்து மதங்களும், மார்க்கங்களும் எல்லோரையும் நேசிக்கவும், கவலைப்படும் பொழுதும், கஷ்டப்படும் பொழுதும் உதவிக்கரம் நீட்டவேண்டும் என்றும், அவசர காலத்திலும், ஆபத்துக்காலங்களிலும் அனுசரணையாக இருக்கவேண்டும் என்றும் தான் கூறுகின்றன.
நம்மில் அநேகர் சகோதரப் பாசத்துடன் தான் பழகி வருகின்றோம் என்பது மறுக்க முடியாத உண்மையே. ஆனால், ஒருவர் மற்றவர் மீது பொறாமைப்பட பல காரணங்கள் உண்டு. அதன் காரணமாக நன்மை செய்ய வேண்டியவர் தீமை செய்ய விளைகின்றனர். அப்பொழுது தான் எதிரிகள் தோன்றுகின்றனர்.
பெயரைக் கெடுக்கலாம், பொருட்களை அபகரிக்கலாம், ஏன் கொலை செய்யக்கூட அஞ்சாமல் இருக்கலாம். தினந்தோறும் தொலைக்காட்சிகளில் நாம் காணும் கற்பனைகளையே மிஞ்சும் அளவு, வகை வகையான தீய சம்பவங்களே இதற்கு முற்றிலும் சாட்சிகளாகும்.
இவ்வாறு ஒருவருடைய உயிரையே பறிக்கும் ஒரு கொலைகாரன் எதிரி தானே?, அவனை எப்படி நேசிப்பது?.
ஆனால், இயேசு கூறுகின்றார்: பைபிளில் மத்தேயு என்பவர் எழுதிய புத்தகத்தில் 5-வது அதிகாரம் 44-வது வசனம் இவ்வாறு கூறுகிறது:
‘நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்ருக்களை சிநேகியுங்கள்; உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர் களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களைத் துன்பப் படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்’.
எப்படிப்பட்ட அன்பான வார்த்தைகள் பாருங்கள். நம்மை சபிக்கிறவர்கள், நம்மைப் பகைக்கிறவர்கள், நம்மை நிந்திக்கிறவர்கள், நம்மைத் துன்புறுத்துபவர்கள் தான் நம் எதிரிகள். ஆனால் முதல் வார்த்தையில் என்ன கூறுகின்றார், ‘சத்ருக்களை சிநேகியுங்கள்’ என்கிறார்.
இதைப் படிக்கக் கூடிய ஒவ்வொருவர் மனதிலும் எழக்கூடிய வினா எனக்குப் புரிகிறது. இது எவ்வாறு சாத்தியமாகும்?, மனிதவாழ்வில் இது சாத்தியமில்லைதான். ஆனால் இயேசு, தான் கூறிய அனைத்தையும் தானே செய்துகாட்டுகின்றாரே.
பைபிளில் லூக்கா என்பவர் எழுதிய புத்தகத்தில் 23-வது அதிகாரத்தில் 34-வது வசனம் இவ்வாறு கூறுகிறது:
‘பிதாவே, இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே’.
இயேசு, யாரை மன்னிக்குமாறு ஜெபிக்கிறார் என்று அறிந்தால், ஆச்சரியப்படுவீர்கள். எந்தச் சூழ்நிலையில் அவ்வாறு ஜெபிக்கிறார் என்பதை உணர்ந்தால், உள்ளம் உடைந்து போவீர்கள்.
தன்னை சிலுவையில் அறைந்து கொல்லவேண்டும் என்று சதித்திட்டம் தீட்டியவர்களை மன்னிக்குமாறு தன் தந்தையிடம் ஜெபிக்கிறார் இயேசு.
அக்காலத்தில் குற்றவாளிக்குக் கொடுக்கப்பட்ட, மிகக்கேவலமான, மிகவும் கொடூரமான தண்டனை தான் சிலுவை மரணம். இரண்டு கைகளையும் விரித்து இரண்டு ஆணிகளிலும், இரண்டு கால்களையும் ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து ஓர் ஆணியிலும் சிலுவை மரத்தின்மீது அடிக்கும் பொழுது, மரிப்பவருடைய உடல் எடை முழுவதும் அந்த மூன்று ஆணிகளிலும் தான் தாங்கப்படுகின்றது.
இதனால் தலை முதல் பாதம் வரை தாங்க முடியாத வலி. அதே நிலையில், உயிர்போகும் வரையிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் தொங்கிக் கொண்டிருக்கவேண்டும். மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிலர் உடனே இறந்துவிடுவர். இயேசுவானவர் 136 கிலோ எடையுள்ள பாரச்சிலுவையை, ஏறக்குறைய ஒன்றரைக் கிலோமீட்டர் தூரம், சும்மாஅல்ல, உடலில் விழும் சாட்டை அடிகளோடு சுமந்துவந்து, ஆறு மணிநேரம் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் பொழுது, இன்னும் ஒரு சில நிமிடத்தில் உயிர்போகும் நிலையில்தான் ஜெபிக்கிறார்.
இறக்கும் தருவாயில் ஒருவர் பேசுவதை மரண வாக்குமூலம் என்பர். ஆனால் அந்நேரத்தில் இயேசு பேசிய வார்த்தைகள் மரண வாக்குமூலம் அல்ல, மனிதகுலத்தின் மேல் உள்ள அன்பு, இரக்கம், பாசம் ஆகியவற்றை விளக்கும் வரிகளாகும்.
வருடந்தோறும், பண்டிகைக்காலங்களில் ஒரு குற்றவாளியை விடுதலை செய்வது அக்கால ரோமானியரின் வழக்கம். பிலாத்து என்ற மன்னன், அக்காரணத்தைச் சுட்டிக்காட்டி, ஒரு பாவமும் அறியாத இயேசுவை விடுதலை செய்ய விரும்புகிறான்.
ஆனால், மத்தேயு 27:20 -ல் கூறப்பட்டுள்ளது போல, பரிசேயர்கள் எனப்படும் யூதக் குருமார்கள், மற்றும் மூத்தவர்களும் இயேசுவைக் கொலை செய்ய விரும்பியதால், பரபாஸ் எனும் ஒரு கொலைக் குற்றவாளியை விடுதலை செய்யச் சொல்லி மக்களைத் தூண்டி விடுகின்றனர்.
ஒன்றுமறியாத அப்பாவி மக்களும் ‘பரபாஸை விடுதலை செய்யும், இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்லும்’ என்று கூக்குரலிட்டு, தாங்களாகவே பலிகடாக்களாக மாறி விடுகின்றனர்.
பிலாத்து மன்னனோ அவர்களுடைய ஆக்ரோஷத்தைக் கண்டு, மனம் நொந்து, தண்ணீரை அள்ளி ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி, ‘இந்த நீதிமானுடைய ரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன். நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்’ என்றான்.
இயேசுவை விடுதலை செய்ய அரசன் விரும்பினாலும், யூத குருக்கள், மக்களை மூளைச் சலவை செய்ததினால், ‘இவனுடைய ரத்தப்பழி எங்கள் மேலும், எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக’ என்று ரத்தப்பழியை ஏற்றுக்கொள்கின்றனர்.
ஆனால் இயேசுவோ, அவர்களுக்காகவே பரிந்துபேசி அவர்களை மன்னிப்பதால், அவர்கள் எந்தவிதமான ஆக்கினைகளுக்கும் உட்படுத்தப்படவில்லை என்று சரித்திரம் கூறுகிறது.
பிலாத்து மன்னன், இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்லலாம் என்று கூறியவுடன், ராணுவ வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி இயேசுவைப் பரிகாசம் பண்ண ஆரம்பித்தனர். முட்களினால் செய்த கிரீடத்தை தலையில் அழுத்துகின்றனர். அதனால் வழியும் ரத்தத்தில் இயேசுவின் முகம் மறைக்கப்படுகிறது. ஒரு கந்தல் துணியை அவர் மீது போர்த்தி வலது கையில் ஒரு தடியைச் சொருகி, அவருக்கு முன்பாக முழங்காற் படியிட்டு, ‘யூதருடைய ராஜாவே வாழ்க’ என்று கேலி செய்கின்றனர். அத்துடன் நிற்காது, எச்சிலை உமிழ்ந்து அவர் முகத்தில் துப்புகின்றனர். அவருடைய கையில் உள்ள கோலை எடுத்து அவர் மண்டையில் அடிக்கின்றனர்.
ஆனால் இயேசுவோ ஒன்றுமே சொல்லாமல், சிலுவையில் உயிர்போகும் தருவாயில்தான் தன் வாயைத்திறந்து ‘இவர்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே’ என்று அவர்களை நேசித்து, அவர்களுக்காக ஜெபிக்கின்றார். இதன்மூலம் முற்றிலும் மாறுபட்ட மனிதப்பிறவியாக மாறிவிடுகின்றார்.
இது தான் இயேசு நமக்குக் கற்பிக்கும் பாடம். நம்மை சபிக்கிறவர்களை, நம்மைப் பகைக்கிறவர்களை, நம்மை நிந்திக்கிறவர்களை, நம்மைத் துன்பப்படுத்துகிறவர்களை நாம் மன்னிப்பது மட்டுமல்ல மனதார நேசிக்கவேண்டும் என்று கூறுகின்றார். அவர் தம் வாழ்நாட்களில் என்னவெல்லாம் போதித்தாரோ அவை அனைத்தையும் கடைபிடித்துக்காட்டினார் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.
அதுமட்டுமல்ல, ‘உன் சத்ரு பசியாயிருந்தால் அவனுக்குப் போஜனம் கொடு, அவன் தாகமாயிருந்தால் அவனுக்கு பானங்கொடு’ என்று கூறுகிறார்.
எனவே, எதிரி என்று எண்ணுபவர்களை நேசித்து, அவர்களுக்காக ஜெபித்து, அவர்களுடைய இன்ப துன்பங்களில் பங்கெடுப்போமேயானால் அங்கு நீடித்த அன்பு மட்டுமே பெருக்கெடுத்தோடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதுவே இயேசுகாட்டிய அறநெறியாகும்.
முனைவர்.பி.எஸ். ஜோசப், திருச்சி-23
Related Tags :
Next Story