நெற்கதிரை கையில் ஏந்தி அருளும் முருகப்பெருமான்
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், மாவேலிக்கரை அருகிலுள்ள தாழக்கரை என்ற இடத்தில் சுப்பிரமணியசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு அருளும் முருகப்பெருமான் தனது கையில் நெற்கதிர்கள் மற்றும் தீப்பந்தங்களை தாங்கி வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தருகிறார்.
தல வரலாறு
கேரள ஜோதிடக் கணிப்பு முறைகளில் ஒன்று தேவப் பிரசன்னம் பார்ப்பது. இந்த ஜோதிடக் கணிப்பு வழி முறையில், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு யோகீஸ்வரன் என்பவரால் கண்டறியப்பட்டு கட்டப்பட்டதுதான் இந்த சுப்பிரமணியசாமி ஆலயம் என்று சொல்லப்படுகிறது. தொடக்கக் காலத்தில், எடப்பள்ளி எலங்கூர் சுவரூபம் என்பவரின் பராமரிப்பில் இருந்துவந்த இக்கோவில், பிற்காலத்தில் வாரிய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு, 1979-ம் ஆண்டு முதல் ‘ஹைந்தவ சேவா சமிதி’ என்னும் பதிவு பெற்ற அமைப்பின் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 1979-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்த ஆலய வளாகத்தில் பல துணைத் தெய்வங்களுக்கான சன்னிதிகள் அமைக்கப்பட்டதுடன், கோவிலும் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது என்று இந்த ஆலயத்திற்கான தல வரலாற்று தகவல்கள் சொல்லப்படுகின்றன.
கோவில் அமைப்பு
இந்த ஆலயத்தின் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் முருகப்பெருமான், சாதாரண மனிதனைப் போல, கையில் நெற்கதிர்கள் மற்றும் தீப்பந்தம் ஏந்திய நிலையில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். இதுஒரு வித்தியாசமான தோற்றமாக பார்க்கப்படுகிறது. ஷடாட்சர மந்திர முறைகளைப் பின்பற்றி நிறுவப்பட்டிருக்கும் இந்த முருகன் கோவில் வளாகத்தில், கணபதி, மகாதேவர், கிருஷ்ணர், சாஸ்தா, தேவி, யோகீஸ்வரன், ராட்சசன் மற்றும் நாகராஜா ஆகியோருக்கும் தனித் தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
1.75 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் வளாகத்தில், கோவிலின் வடமேற்குப் பகுதியில் நாக தேவதைகளுக்கான ‘சர்ப்பக் காவு’ அமைந்திருக்கிறது. ‘சர்ப்பக் காவு’ எனப்படும் பசுமை நிறைந்த தோப்புப் பகுதியை இங்கிருப்பவர்கள் புனிதமானது என்றும், இங்கு ஏராளமான தெய்வீகப் பாம்புகள் தங்கியிருக்கின்றன என்றும் சொல்கிறார்கள். இந்தப் பகுதியில் ‘சித்திரக்குடா’ எனும் பெயரில் பாம்பு தெய்வங்கள் பல நிறுவப்பட்டிருக்கின்றன.
இந்தக் கோவிலில் அனைத்து முருகப்பெருமான் ஆலயங்களிலும் நடைபெறும் சிறப்பு வழிபாடுகள் அனைத்தும் வெகு விமரிசையாக செய்யப்படுகின்றன. இது தவிர ஆண்டு தோறும் தை மாதம் பூசம் நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் சேர்ந்து வரும் தைப்பூசத் திருநாளில், தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலையில், குன்னம் தர்மசாஸ்தா கோவிலில் இருந்து பக்தர்களின் காவடி ஊர்வலம் தொடங்குகிறது. மாலையில், புதியகாவு தேவி கோவிலில் இருந்து பாஸ்மகாவடி கொண்டு வரப்படுகிறது. இந்த ஊர்வலத்தில் மயூரரதம் பங்கேற்கிறது.
மேலும் இந்த ஆலயத்தில் சித்திரை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திர நாளில் தொடங்கி, 10 நாட்கள் ஆண்டுத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த விழாவின் தொடக்க நாளில் பக்தர்களின் வீட்டு வாசலிலேயே பிரசாதங்களைப் பெறும் ‘பறையெடுப்பு’ நிகழ்வு நடக்கிறது. பின்வரும் நாட்களில் உத்சவபலி, பள்ளிவேட்டை மற்றும் ஆறாட்டு விழா போன்றவை சிறப்பாக நடத்தப் பெறுகின்றன. இத்திருவிழா நாட்களில் ஏழு நாட்கள் பாகவத புராணம் பாராயணம் செய்யப்படுகிறது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்கும் சஷ்டி விரத நிகழ்வு மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
சமூக மற்றும் பண்பாட்டு ஒற்றுமைக்கான கோவிலாகக் கருதப்படும் இந்த ஆலயத்தில், நெற்கதிர்களைச் சுமக்கும் இறைவன் செல்வத்தின் காவலராகக் கருதப்படுகிறார். மேலும், இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் உடல் மற்றும் மன நோய்களை நீக்கும் கடவுளாகவும் இத்தல முருகப்பெருமான் இருக்கிறார். இங்கிருக்கும் முருகப்பெருமான் பக்தர்களின் ஒவ்வொரு உடற்பகுதியையும் காத்து வருகிறார் என்றும், அவருடைய அருளைப் பெற்ற பக்தர்களிடம் நவக்கிரகங்கள் அனைத்தும் செயலற்றவர்களாகவே இருப்பார்கள் என்றும் சொல்கின்றனர். இதனால் நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடலாம்.
இதற்கு சான்றாக ஒருமுறை முருகப்பெருமான் நாரதரிடம், “என்னிடம் வரும் பக்தர்களுக்குப் பயம் எதுவும் இருக்காது. என்னிடம் பக்தியுள்ளவர்களுக்கு எதிரிகளும் இல்லை; எந்தவிதமான நோய்களும் இல்லை” என்று புராணங்களில் சொல்லியிருப்பதை சுட்டிக் காட்டுகின்றனர். இக்கோவிலில் உடல் மற்றும் மன நலத்திற்கான வழிபாடு முதன்மையானதாக இருக்கிறது. அச்சம் விலக விரும்புபவர்கள் இக்கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடுகளைச் செய்து பயனடைகின்றனர்.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரையில் இருந்து கிழக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தாழக்கரை என்னும் இடத்தில் இந்த சுப்பிரமணியசாமி கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலுக்குச் செல்ல மாவேலிக்கரையில் இருந்து நகரப் பேருந்து வசதி இருக்கிறது. மாவேலிக்கரை நகருக்கு பந்தளம், செங்கனூர், ஹரிப்பாடு போன்ற நகரங்களில் இருந்து அதிகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
-தேனி மு.சுப்பிரமணி
Related Tags :
Next Story