உலகத்தின் ஒளியாக வந்தவர்


உலகத்தின் ஒளியாக வந்தவர்
x
தினத்தந்தி 18 Oct 2019 10:06 AM GMT (Updated: 2019-10-18T15:36:45+05:30)

இந்த நவீன யுகத்தில் ஒவ்வொரு மனிதனும் நவீன எந்திரம் போலவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறதை நாம் கண்கூடாகக் காணமுடிகிறது.

ந்த நவீன யுகத்தில் ஒவ்வொரு மனிதனும் நவீன எந்திரம் போலவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறதை நாம் கண்கூடாகக் காணமுடிகிறது. ஒவ்வொரு வரும் தங்களுடைய பிள்ளைகளை வளர்க்கவும், தங்கள் குடும்பத்தைக் கரைசேர்க்கவும் இடைவிடாமல் பிரயாசப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

சமுதாயத்தில் மனிதாபிமானம் குறைந்துவிட்டது. அன்பு, பாசம், மனித நேயம் மிக மிக குறைந்துவிட்டது என்றால் அதுவே நிதர்சனமான உண்மை. தமது சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க அடுத்தவரின் இயல்பு வாழ்க்கையைக் கூட துச்சமாக நினைப்பவர்கள் பெருகிவிட்டனர். ஆகவே தான் துணிகரமான கொலைகளும், கொள்ளைகளும் தேசத்தில் மலிந்து விட்டன.

ஒரு செயினை அறுப்பதற்காக கழுத்தையே அறுக்கும் அவல நிலையை அதிகமாக நாம் கண்கூடாகக் காணமுடிகிறது. கடந்த காலங்களில் வாழ்ந்த பெரியவர்களை நாம் கேட்டால், ‘இது மகா கலி காலம். தேசத்தில் உண்மை, நேர்மை செத்துவிட்டது’ என்று புலம்புவார்கள்.

இன்றைக்கு பருவம் வந்த பெண் களுக்கு மட்டுமல்ல, பச்சிளம் குழந்தை களுக்கும் கூட நேரிடும் கொடுமை மிகுதி. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பச்சிளம் குழந்தைகள் எத்தனை எத்தனை?, கல்லூரிக்குப் பேனா நோட்டுப் புத்தகத்துடன் போய் வந்த காலங்கள் மலையேறி, பட்டாக் கத்தியுடன் போய் வரும் வாலிபர்கள் ஏராளம்.

பெண் பிள்ளையை வைத்துக் கொண்டிருப்பவர்கள், ‘வயிற்றிலே நெருப்பைக்கட்டிக் கொண்டிருக்கிறேன், எப்படி இவளைக் கரை சேர்க்கப் போகிறேனோ?’ என்று அன்று புலம்பினார்கள். இன்றைக்கோ பிள்ளைகளை வைத்துக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் அனைவரது கதறலும் இப் படியாகவே இருக்கிறது.

இந்த சூழ்நிலையைத்தான் அருள் நாதர் இயேசு அவர் ஆற்றிய சொற்பொழிவு களிலே திட்டமாய்க் கூறினார். ‘அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்’ (மத்தேயு 24:12).

ஆனால் அன்பே உருவான இறைமகன் இயேசுவின் போதனைகளை யார் வாசித்து தியானிக்கிறார்களோ, அப்படியே அவர் களுடைய வாழ்க்கை ஒரு பெரிய மாற்றத்திற்குள் வந்து விடுகிறது.

காரணம் இயேசு அன்பு நிறைந்தவர், அன்பே உருவானவர், அன்பின் சிகரம் இயேசு தன் அன்பின் மிகுதியினால் மனுக்குல மீட்பிற்காக தன் உயிரையே தியாகம் செய்தவர். அவருடைய வாழ்வின் தொடக்கமும் முடிவும் அன்புதான். ஆகவே தான் தன்னை சிலுவையில் அறையும்படி காட்டி கொடுத்த யூதாசை கட்டி அணைத்து முத்தமிட்டார். ‘சிநேகிதனே, முத்தத்தினாலேயோ என்னைக் காட்டிக்கொடுக்கிறாய்’ என்று அன்பின் வார்த்தைகளைப் பேசினார். ஆம், தேவன் அன்பாகவே இருக்கிறார்.

ஒரு கொடுமையான வரி வசூலிப்பவனாய் இருந்தான் சகேயு. அநேகரிடம் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி பணம் வசூலித்த அவனை, தன் ஆஸ்திகளை விற்று ஏழைகளுக்கு கொடுக்கத்தக்கதான விதத்தில் மாற்றினார் இயேசு. ‘எனக்குள்ளதையெல்லாம் விற்று ஏழை களுக்குக் கொடுக்கிறேன். யாரையாவது ஏமாற்றியிருந்தால் நான்கு மடங்கு திருப்பிக் கொடுக்கிறேன்’ என மனம் மாறினான் சகேயு.

யாரைப் பார்த்தாலும் துன்புறுத்தி, அடித்து கொலை செய்யக்கூடத் தயக்கம் காட்டாத ஒரு கொடூரமான மனிதனை, இயேசு கிறிஸ்து சாந்தமுள்ள மனிதனாக தெக்கப்போலி என்னும் நாட்டிலே மாற்றினார்.

“நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவை களையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று அவனை நற்காரியங்களை அறிவிக்கும் சுவிசேஷகனாக இயேசு மாற்றினார்”. ( மாற்கு 5:1-20).

அநேக செல்வங்களை சம்பாதிக்க தன் சரீரத்தையே விற்றுக்கொண்டிருந்த ஒரு விபசாரம் செய்கிற ஸ்திரீயை அவளுடைய பாவங்களை மன்னித்து குண சாலியான ஸ்திரீயாக இயேசு மாற்றினார் (யோவான் 8 :1-11). “இனிமேல் பாவம் செய்யாதே” எனும் அறிவுரையுடன் அனுப்பி வைத்தார்.

ஆம் அருள்நாதர் இயேசு பாவிகளை மன்னிக்கவும், மறுவாழ்வு கொடுக்கவுமே இந்த பூவுலகத்திற்கு வந்தார். அவரைக் குறித்து யோவான் இப்படியாக கூறுகிறார். ‘உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி’ (யோவான் 1:9).

இயேசு கிறிஸ்துவும் தன்னை குறித்து இப்படியாக கூறுகிறார், ‘நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்’. (யோவான் 8:12).

ஆம், எனக்கன்பானவர்களே, ‘வேதம் திட்டமும் தெளிவுமாய்க் கூறுகிறது அவரை நோக்கி பார்த்த முகங்கள் பிரகாசமடைந்து அவர்கள் வெட்கப்படுவதில்லையென்று’ (சங்கீதம் 34:5).

“நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்” என நாம் தைரியமாகச் சொல்லலாம்.

அவர் இப்படியாகக் கூறினார், “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” என்று.

நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல் எல்லாவற்றையும்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடு கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

ஆம், நீங்கள் இயேசு என்கிற நாமத்தை வேண்டிக்கொள்ளும்போது அந்த தெய்வம் உங்களுக்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அருளி நீங்கள் வேண்டிக்கொண்ட காரியத்தை உங்களுக்கு அருளிச்செய்து உங்களை ஆசீர்வதிப்பாராக.

சகோ சி. சதீஷ், வால்பாறை.

Next Story