சோர்ந்து போகாமல் ஜெபம் செய்


சோர்ந்து போகாமல் ஜெபம் செய்
x
தினத்தந்தி 24 Oct 2019 10:45 PM GMT (Updated: 23 Oct 2019 12:22 PM GMT)

உண்மையான ஜெபம் என்பது பரிசுத்த ஆவியோடு ஜெபிப்பதுதான். பரிசுத்த ஆவியின் உறுதியில்லாமல் ஜெபித்தால் நீங்கள் விரைவில் சோர்ந்து போவீர்கள்.

ஜெபம் தேவனுடைய கட்டளை. எந்த காரியத்திற்கு நாம் ஜெபம் செய்கின்றோம் என்பதை இறை வனுக்கு தெரியப்படுத்தவேண்டும். பதில் கிடைக்கும் என்ற விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு ஜெபம் செய்யவேண்டும்.

‘நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி...” என்று யூதா 20 குறிப்பிடுகிறது.

வேதத்தை வாசித்து உன் ஜெபத்திற்குண்டான வசனத்தை வைத்து ஜெபிக்கவேண்டும். நமது சிந்தனையை சிதறவிடாமல் ஒரே சிந்தையோடு ஜெபிக்கவேண்டும். மிகுந்த மன உறுதியோடு தேவ வசனமாகிய வார்த்தையை வைத்து ஜெபித்தால் உடன் பதில் கிடைக்கும்.

ஒருசில ஜெபத்திற்கு உடன் பதில் கிடைக்கும். சில ஜெபத்திற்கு ஒரு வாரம் அல்லது ஒரு மாதமாகலாம். சில ஜெபத்திற்கு ஒரு வருடம்கூட ஆகலாம். ஆனாலும் ஜெபத்தை ஒருபோதும் விடக்கூடாது.

வானத்தை நிலைப்படுத்தி பூமியை அஸ்திவாரப்படுத்தி, ஒரு வரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிற, பரலோகத்தில் வீற்றிருக்கிற, சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனிடத்தில் நீ சோர்ந்து போகாமல் ஜெபம் செய்தால் அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய் பதில் தருவார்.

நெல் விதைத்து, அது முளைத்து, நாற்றை பிடுங்கி, பின்பு வயல் நிலத்தை பக்குவப் படுத்தி, நாற்றை நடுகின்றோம். அதற்கு நீர் பாய்ச்சி உரம் போட்டு பூச்சி மருந்து அடித்து, களை பிடுங்கி, அதை பராமரித்து, கதிர் விட்டு, முதிர்ந்த பின் அறுவடை செய்ய நான்கைந்து மாதங்களாகி விடுகிறது. நமக்கு மிகுந்த ஆசீர்வாதம் கிடைக்கும். இடையில் அறுவடை செய்தால் நெல்மணி இருக்காது, ஆசீர்வாதமும் இருக்காது. அதுபோல சோர்ந்துபோகாமல் ஜெபித்தால் மிகுந்த ஆசீர்வாதம் வரும்.

‘நீ போய் அந்த எண்ெணய்யை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம் பண்ணுங்கள் என்றான்” (2 இரா.4:7).

ஒரு விதவை ஸ்திரீ தேவ மனிதன் எலிசாவைப் பார்த்து ‘என் புருஷன் இறந்துபோனான். எனக்குக் கடன் கொடுத்தவன் கடனுக்குப் பதில் எனது இரண்டு குமாரரையும் கேட்கிறான்” என்றாள்.

எலிசா ‘உன் வீட்டில் என்ன இருக்கிறது?’ என்று கேட்டான். அவள் ‘ஒரு குடம் எண்ணெய் இருக்கிறது”’ என்றாள்.

எலிசா ‘நீ போய் எல்லாரிடமும் அநேக வெறும் பாத்திரங்களை வாங்கி உன் பிள்ளைகளுடன் வீட்டின் உள்ளே நின்று கதவை பூட்டி ஒரு குடம் எண்ணெய்யை எல்லா பாத்திரத்திலும் வார்த்துவை” என்றான். அப்படியே அவள் செய்தாள். கடைசி பாத்திரத்தில் வார்த்தபோது எண்ணெய் நின்றுபோனது. அதை எலிசாவிற்கு தெரிவித்தாள்.

தேவ மனிதன் ‘நீ எல்லா எண்ணெய்யையும் விற்று கடனை தீர்த்து மீதியுள்ளதை வைத்து ஜீவனம் பண்ணு’ என்றான்.

விதவை ஸ்திரீ சோர்ந்துபோகாமல் கடனுக்காக எப்பொழுதும் ஜெபம் செய்தாள். தேவ கிருபையால் ஒரே நாளில் கடன் எல்லாம் தீர்ந்தது.

‘எனக்காக உபவாசம் பண்ணுங்கள், நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம்’ இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்” (எஸ்தர் 4:16).

அகாஸ்வேரு ராஜாவின் அரண்மனையில் ஆமான் என்ற மனிதன் ராஜாவின் கீழ் அதிகாரியாக இருந்தான். ஆமானை, காவல் காக்கிற மொர்தெகாய் வணங்கிக் கீழ்ப்படியவில்லை. இதனால் மொர்தெகாயின் ஜனமாகிய யூதர்களை அழிக்க திட்டமிட்டான். எனவே ராஜாவினிடத்தில் சென்று, ‘யூத ஜனங்கள் ராஜாவின் கட்டளைகளை மதிப்பதில்லை, ராஜா சம்மதித்தால் அவர்களை அழிக்கவேண்டும்’ என்றான். ராஜா ஆமானைப் பார்த்து, ‘உன் விருப்பப்படி செய்’ என்றான்.

ஆமான் சகல யூதரையும் அழித்து கொன்று நிர்மூலமாக்க ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போட்டு தேசம் முழுவதும் தெரியப்படுத்தினான். இந்த காரியத்தை மொர்தெகாய் அரண்மனையில் இருக்கிற எஸ்தருக்கு தெரிவித்தான்.

ராஜா அழைக்காமல் யாதொரு மனிதரும் ராஜாவினிடத்தில் பிரவேசித்தால் சாகவேண்டும் என்ற சட்டம் அப்போது இருந்தது. இருந்தாலும் எஸ்தர் சட்டத்தை மீறி ராஜாவினிடத்தில் பிரவேசித்தாள்.

இரண்டாம் நாள் விருந்தில் ராஜா ‘எஸ்தர் ராஜாத்தியே உன் வேண்டுதல் என்ன?’ என்று கேட்டான். அப்பொழுது எஸ்தர் ‘ராஜாவே, யூத ஜனத்தை அழித்துக் கொன்று நிர்மூலமாக்கும் படி ஆமான், ராஜாவின் முத்திரையை போட்டு தேசம் முழுவதிலும் தெரியப்படுத்தினான்’ என்றாள்.

தேசம் முழுவதும் ஆமான் தீவினையாய் எழுதிய கட்டளைகள் செல்லாமல் போக ராஜாவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மொர் தெகாய், எஸ்தர், யூதர்கள் சோர்ந்துபோகாமல் ஜெபித்ததால் யூத ஜனங்கள் உயிரோடு இருந்தார்கள். ஆமென்.

ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம் 
சி.பூமணி,
சென்னை-50.

Next Story