இன்பத்தை வழங்கும் கந்தசஷ்டியின் மகிமை


இன்பத்தை வழங்கும் கந்தசஷ்டியின் மகிமை
x
தினத்தந்தி 1 Nov 2019 10:38 AM GMT (Updated: 1 Nov 2019 10:38 AM GMT)

2-11-2019 கந்தசஷ்டி - முருகன், குமரன், குகன், கந்தன், ஆறுமுகன் என்றெல்லாம் பக்தர்களால் புகழப்பெறும் தமிழ்க் கடவுளின் பல்வேறு விழாக்களில் முக்கியமானது ‘கந்தசஷ்டி’ பெருவிழாவாகும்.

 ‘சஷ்டி’ என்றால் ‘ஆறு’ என்று பொருள். அமாவாசை முடிந்து, வளர்பிறையில் வரும் ஆறாவது திதி ‘சஷ்டி’ திதியாகும். கச்சியப்ப சிவாசாரியர் எழுதிய கந்தபுராணமும், பாம்பன் சுவாமிகளின் ‘முதல்வன் புராண முடிப்பு’ம் இந்த விழாவைப் பற்றி விளக்குகின்றன.

தேவர்களைக் கொடுமைப்படுத்திய சூரபதுமன், அவனது தம்பிகள் தாருகன், சிங்கமுகன் ஆகியோரோடு, முருகப்பெருமான் போரிட்டு வென்றார். அதன் மூலம் தேவர்களை சிறை மீட்டு, அவர்களுக்கான ஆட்சி உரிமையை பெற்றுத்தந்தார். கந்தனுக்கும், சூரபதுமனுக்கும் போர் நடைபெற்ற இடம் திருச்செந்தூர். தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்த வரலாற்றை மையமாகக் கொண்ட தெய்வப் பெருவிழாவே ‘கந்தசஷ்டி’ திருவிழா.

ஆன்மாக்களுக்கு அல்லது மனித உயிர்களுக்கு மூன்று வகையான அழுக்குகள் உண்டு. அந்த மூன்றில் மூலமாக விளங்கும் முதல் அழுக்கு ‘ஆணவம்.’ அந்த ஆணவத்தை ஒட்டி ஆன்மாக்களுக்கு உண்டாகிய இரண்டு அழுக்குகள் ‘மாயை, கன்மம்’ ஆகியவை.

மாயை - உலக பொருட்களின் மீது கவர்ச்சியை உண்டாக்கி, ஆன்மாக்களுக்கு அதன் மேல் மோகத்தை ஏற்படுத்தும். ஞானிகளைக் கூட மயங்க வைத்துவிடும் ஆற்றல் அதற்கு உண்டு. மயக்கத்தை உண்டாக்குதலும், ஆன்மாக்களை உலக பொருளின் மேல் பற்று கொள்ளச் செய்வது ஆகிய செயல்களைச் செய்வது மாயை. சூரபதுமனின் தம்பியரில் ஒருவனான தாருகன், இந்த மாயையின் வடிவம் கொண்டவன்.

அடுத்த அழுக்கானது கன்மம். இந்த கன்மமும் இரண்டு வகைப்படும். நல்வினை, தீவினை என இரண்டு நிலையில் இருந்த சிங்கமுகன் கன்ம மயமாக நின்றவன்.

மூன்றாவது அழுக்கு, ஆணவம். இது ‘நான்’ என்றும், ‘எனது’ என்றும் செயல்படும். சூரபதுமன் ஆணவ மயமாக நின்றவன். மேற்கண்ட மூன்று அழுக்குகளும், ஆறாகப் பிரிந்து செயல்பட்டன. ஆகையால் ஆறு நாட்களில் அவைகளை அழித்து, ஆன்மாக்களுக்கு உண்மை ஞானத்தை கொடுத்தார் கந்தப் பெருமான். இதுவே கந்தசஷ்டி விழாவின் பெரும் தத்துவம்.

இந்த மூன்று அழுக்குகளில் இருந்து மீண்ட மனிதனின் ஆன்மா, இறைவனடி சேர்ந்து இன்புற்றிருக்கும். உலகமும், உலகப் பொருட்களும் இறைவனின் படைப்புகள் என்பதை உணர்ந்தால், மாயையில் இருந்து விடுபடலாம். தீவினைகளை தவிர்க்க வேண்டும். நல்வினையைச் செய்யும் போதும் கூட, அவற்றை நாம் செய்கிறோம் என்று கருதாமல், இறைவன் நம் மூலமாக அவற்றை செய்விக்கிறான் என்று உணர வேண்டும். அப்போது நல்வினையின் பயன் நம்மைச் சேராது. மறுபிறப்பும் நிகழாது. அறவாழ்க்கையை மேற்கொண்டு, எப்பொழுதும் இறைவனை சிந்தித்து, ‘எல்லா நிகழ்வுகளும் அவனால் நிகழ்கின்றன’ என்று கருதினால் ஆணவத்தில் இருந்து விடுபடலாம்.

மேற்கண்ட தத்துவத்தை நம்முடைய கையில் உள்ள ஐந்து விரல்கள் மூலமாக அறியலாம். இதில் தனித்திருக்கும் பெருவிரல் இறைவனையும், இணைந்திருக்கும் மற்ற 4 விரல்களில் ஆள்காட்டி விரல் ஆன்மாவையும், மற்ற மூன்று விரல்கள் ஆணவன், மாயை, கன்மம் ஆகியவற்றையும் குறிப்பதாகும். ஆள்காட்டி விரல் மற்ற மூன்று விரல்களிடம் இருந்து விலகி, சற்றே வளைந்து பெருவிரலை அடைய முடியும். அதாவது ஆணவன், மாயை, கன்மம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டால் ஆன்மா இறைவனை சேரும். தட்சிணாமூர்த்தி சுவாமியின் ‘சின் முத்திரை’ இந்த தத்துவத்தைத்தான் குறிக்கின்றன.

எனவே கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டித்து, கந்தப்பெருமானின் திருவடியை வணங்கி நிலைத்த இன்பத்தைப் பெறுவோம்.

- செ.வே.சதாநந்தன்

Next Story