ஆன்மிகம்

ஞாபக சக்தியை அதிகரிக்கும் வழிபாடு + "||" + Worship that increases memory

ஞாபக சக்தியை அதிகரிக்கும் வழிபாடு

ஞாபக சக்தியை அதிகரிக்கும் வழிபாடு
‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்’ என்பது வள்ளுவர் வாக்கு. தங்கள் பிள்ளை, கல்வி - கேள்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே பெற்றவர்கள் அனைவரின் விருப்பம்.
உளவியல் ரீதியாக படிக்கும் குழந்தைகள் பலருக்கு கவனச் சிதறல்கள், சாதாரண விஷயங்களை கூட வெகு சுலபமாக மறப்பது, நன்கு படித்த பாடம், தெரிந்த கேள்விக்கு பதில் எழுத முடியாமல் போவது என ஞாபக சக்தி குறைவால் பாதிக்கப்படுகிறார்கள்.

மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து நிகழ்விலும் தாய், தந்தைக்கு நெருங்கிய சம்பந்தம் உண்டு. தாய் - தந்தையின் மரபணுக்களே குழந்தைகள். பெண்கள் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவு உண்டு , மன நிம்மதியோடு இருந்தால் பிறக்கும் குழந்தைகள் அபாரமான மூளை செயல்பாட்டுடன் இருப்பார்கள். கர்ப்ப காலத்தில் நேரத்திற்கு, குழந்தை வளர்ச்சிக்கு தேவையான உணவு சாப்பிடாமல் மன அழுத்தத்துடன் இருந்தால், பிறக்கும் குழந்தைகளின் மூளை செயல்பாட்டுத் திறனும் குறைவாகவே இருக்கும்.

பிள்ளைகளின் படிக்கும் திறனை 3 விதமாக பிரிக்கலாம்.

1. படிக்காமலே அதிக மதிப்பெண் பெறுவது

இந்த பிரிவை சார்ந்த குழந்தைகளுக்கு புத்தகத்தை எடுத்து படிப்பது என்றாலே பிடிக்காத செயல். ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்தும் போது கவனமாக கேட்டு மூளையில் பதிய வைத்து விடுவார்கள். தேர்வு காலத்தில் நுனிப்புல்லாக புத்தகத்தை எடுத்து சிறிது நேரம் படித்து, அதிக மதிப்பெண் பெற்று விடுவார்கள். இவர்களுக்கு பள்ளி, கல்லூரி வாழ்க்கை மிக எதார்த்தமாக, மனதளவில் உற்சாகமாக இருக்கும். இவர்களுடைய ஜாதகத்தில் புத- ஆதித்திய யோகம் பலன் தரும் விதத்தில் இருக்கும். புதன் ஆட்சி, உச்சம் , மூலத்திரிகோணம் பெற்று இருக்கும். இவர்களுக்கு எதைப் பார்த்தாலும், படித்தாலும் ஆழ் மனதில் பதிய வைத்து, எப்பொழுது வேண்டுமானாலும் நினைவுபடுத்தும் அபாரத் தன்மை மிகுதியாக இருக்கும்.

2. அதிக நேரம் படித்து அதிக மதிப்பெண் பெறுவது

இந்த வகை பிள்ளைகள், பார்க்கும் நேரம் எல்லாம் புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டே இருப்பார்கள். புத்தகத்தின் முதல் பக்கத்தில் ஆரம்பித்து கடைசி பக்கம் வரை வரி மாறாமல் மனனம் செய்து விடுவார்கள். தூங்கும் போது எழுப்பி கேட்டால் கூட அபாரமான ஞாபக சக்தியுடன் படித்ததை அப்படியே கூறுவார்கள். வாழ்நாள் முழுவதும் மறக்கவே மாட்டார்கள். இவர்களில் பலர் புரிந்து படிப்பது இல்லை எனினும், தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று படித்த பலனை அடைந்து விடுவார்கள். இவர்களுடைய ஜாதகத்தில் புதன், சூரியனை நோக்கி செல்லும். தங்களுடைய படிப்பிற்கு சம்பந்தம் இல்லாத துறையில் வாழ்க்கையை நடத்துவார்கள். புதன் ஆட்சி, உச்சமாக இருந்து குரு சம்பந்தம் பெற்றவர்களும் அதீத ஞாபக சக்தி உடையவர் களாக இருப்பர். இவர்களில் பலர் படிக்கும் காலத்தில் பல கோப்பைகளை பெற்று, அதை நினைவுச்சின்னமாக பாதுகாப்பார்கள்.

3. நன்றாக படித்து குறைந்த மதிப்பெண் பெறுவது

உலகிலேயே கொடுமையான விஷயம், உழைப்பிற்கு தகுந்த பலன் இல்லாமல் போவதுதான். நன்றாக படித்து தேர்வு எழுதும் போது, ஞாபக மறதியால் எழுத முடியாமல் போகும் பிள்ளைகளின் மன உளைச்சலை வார்த்தையால் விமர்சித்து விட முடியாது. படிக்காமல் மதிப்பெண் குறைவதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் படித்தும் மறந்து போவது, அந்தக் குழந்தைகளுக்கு கல்வியின் மீதான ஆர்வத்தைக் குறைக்கும். இவர்களுடைய ஜனன கால ஜாதகத்தில் சந்திரனுக்கு ராகு-கேதுவோடு சம்பந்தம் இருக்கும். அல்லது புதன், சனி சம்பந்தம் இருக்கும்.

எந்த அமைப்பு எப்படி இருந்தாலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற நன்றாக படித்தால் மட்டும் போதாது, மூளையின் செயல்படும் திறனையும் சரி செய்ய வேண்டும். ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள். போதிய சக்தி இன்மையால் மூளை நரம்புகள், மன அழுத்தத்தினால் சோர்வடைவதே சரியாக எதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்துகிறது.

மூளை வளர்ச்சி தரும் ஆரோக்கியமான உணவுகளை உண்பதால், குழந்தைகளின் நினைவாற்றல், ஞாபக சக்தியும் அதிகாிக்கும். மூளையின் செயல்பாட்டோடு, உடலும் ஆரோக்கியமாகும். குழந்தைகளுக்கு பால், முட்டை, பச்சை காய்கறிகள், கீரை, பயிறு, தானிய வகைகள் உண்ணும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும். சுத்தமான குடி நீரை பருக வேண்டும். அவர்களின் மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டுக்கள், குறுக்கெழுத்து போட்டிகள், செஸ் போட்டிகளில் ஈடுபடுத்த வேண்டும். அதோடு உடற்பயிற்சியும் சீரான தூக்கமும் அவசியம். தேர்வுக்கு முந்தைய நாளில் அதிக நேரம் படிக்காமல், அதிக நேரம் தூங்க வேண்டும்.

இவற்றோடு,

‘ஞானானந்தமயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்
ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே’

என்ற ஹயக்ரீவர் சுலோகத்தை காலை மற்றும் மாலை வேளையில் 9 முறை பாராயணம் செய்ய ஞாபக சக்தி அதிகரிக்கும்.

- பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி