உரோமையர்


உரோமையர்
x
தினத்தந்தி 26 Nov 2019 11:08 AM GMT (Updated: 26 Nov 2019 11:08 AM GMT)

தூய பவுல் எழுதிய கடிதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது உரோமையர். இதை இவர் தனது கைப்பட எழுதவில்லை, தெர்தியு என்பவர் இதை எழுத பவுலுக்கு உதவினார்.

தூய பவுல் எழுதிய கடிதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது உரோமையர். இதை இவர் தனது கைப்பட எழுதவில்லை, தெர்தியு என்பவர் இதை எழுத பவுலுக்கு உதவினார். கி.பி. 57, 58 ஆண்டுகளில் இந்த நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும். பொதுவாக தான் நிறுவிய, சந்தித்த திருச்சபைகளுக்கு மடல் எழுதுவதே பவுலின் வழக்கம். இந்த உரோமையர் கடிதத்தை, அவர் உரோமைக்குச் செல்வதற்கு முன்பாகவே எழுதினார்.

பதினாறு அதிகாரங்களும், 9447 வசனங்களும் கொண்ட இந்த கடிதம், அந்தக்கால கடிதங்களில் மிகப்பெரியது. வரலாற்றில் கண்டெடுக்கப்பட்ட கடிதங்களிலேயே இது தான் பெரியது என்கின்றனர் ஆய்வாளர்கள். இதை ‘பவுலின் நற்செய்தி’ என்று ஆரம்ப காலத்தில் ரோமர்கள் அழைத்தனர். அந்த அளவுக்கு ஆன்மிகச் செறிவுடையது இந்த நூல்.

அந்தக் காலகட்டத்தில் ரோமில் சுமார் முப்பது லட்சம் முதல் நாற்பது லட்சம் வரை மக்கள் இருந்தார்கள். பலர் அங்கே கிறிஸ்தவ மறைபரப்புப் பணியைச் செய்திருந்தனர். இந்த நூலுக்கு முன் பவுல் கலாத்தியருக்கு ஒரு மடல் எழுதியிருந்தார். அந்த மடலின் கருத்துகள் யூத மறைக்கு எதிரானது எனும் புகைச்சல் ரோமில் எழுந்தது. அதுசார்ந்து தவறான போதனைகள் பரவத் தொடங்கின. அத்தகைய சலசலப்புகளை மிகத் தெளிவான போதனையால் சரிசெய்ய விரும்பிய பவுல் இந்த நூலை எழுதியதாக விவிலிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த நூலின் கடைசி அதிகாரத்தில் பவுல் 26 பேருக்கு வாழ்த்து சொல்கிறார். இது வழக்கத்துக்கு மாறாக, மிக நீளமாக உள்ளது. இதுவரை சந்தித்திராத உரோமை மக்களுக்கான வாழ்த்து அல்ல இது. மாறாக ஏற்கனவே சென்ற எபேசு திருச்சபை மக்களுக்கான வாழ்த்து. இந்தத் திருமுகத்தை எபேசுவுக்குக் கொடுக்க பவுல் யெப்பாவிடம் கொடுத்தனுப் பியிருக்கலாம். காலப்போக்கில் அது ரோமர் திருமுகத்துடன் இணைந்திருக்கலாம் என ஒரு வலுவான கருத்து நிலவுகிறது.

இந்த கடிதத்தை எளிமையாகப் பிரிக்கவேண்டுமெனில் விசுவாசம், நம்பிக்கை, அன்பு எனும் மூன்று சிந்தனைகளின் அடிப்படையில் பிரிக்கலாம். முதலாவது விசுவாசம், முதல் நான்கு அதிகாரங்களும் விசுவாசத்தைப் பற்றிப் பேசுகின்றன. ஐந்தாவது அதிகாரத்திலிருந்து நம்பிக்கை முன்னிலைப்படுத்தப்படுகிறது. பன்னிரண்டாம் அதிகாரத்திலிருந்து அன்பு முதன்மை இடத்துக்கு வருகிறது.

மனிதர் அனைவரும் பாவிகளே. அனைவருக்கும் மீட்பு தேவை. அதில் யூதர் என்றும் பிற இனத்தவர் என்றும் பாகுபாடு இல்லை. விசுவாசத்தினால் மீட்பு வருகிறது. பாவிகளுக்கு தண்டனைத் தீர்ப்பு வருகிறது என தனது நற்செய்தியை தொடங்குகிறார். பின்னர் அந்த மீட்பு இறைமகன் இயேசுவின் மூலம் தான் வருகிறது. அவரே பாவிகளுக்காக உயிரை விட்டவர். நாம் பாவத்தை விட்டு விலகவேண்டும் என தொடர்கிறார். சட்டத்தின் கரங்களில் அடிமையாக இருக்காமல் தூய ஆவியில் சுதந்திரமாய் இருக்க வேண்டும் எனும் முத்தாய்ப்பை வைக்கிறார்.

சட்டத்தை முழுமையாய்க் கைகழுவி விட்டு விட்டு வாழ்கின்ற பிற இன மக்களின் வாழ்க்கை முறையையும், சட்டத்தை மட்டுமே கைக்கொண்டு வாழ்கின்ற யூத மக்களின் வாழ்க்கை முறையையும் பவுல் சுட்டிக்காட்டுகிறார். அனைவரும் கிறிஸ்துவின் நீதியினால் நேர்மையாளராக்கப்பட வேண்டியதன் தேவையை அழுத்தமாய்ச் சொல்கிறார்.

யூதர்கள், யூதரல்லாதோர் எனும் பிரிவினையில் கனன்று கொண்டிருந்த அன்றைய திருச்சபையை இறைமகன் இயேசுவின் முன்னால் ஒன்றாக பவுல் இணைத்துக் கட்டுகிறார்.

இஸ்ரேல், இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்ட இனம். ஆனால் அவர்களோ இறைவனை நிராகரிக்கின்றனர். ஆனால் ஒரு நாள் இஸ்ரேல் மக்கள் மீட்கப்படுவார்கள் எனும் இஸ்ரேலுக்கான இறைவார்த்தையை பவுல் தெளிவாக்குகிறார்.

இறைவன் அவரது எல்லையில்லா அன்பின்படி சிலரைத் தேர்ந்தெடுக்கிறார். சிலரை நிராகரிக்கிறார். ஈசாக்கை அங்கீகரித்தவர், இஸ்மாயிலை விட்டுவிடுகிறார். யாக்கோபை அரவணைத்தவர், ஏசாயை விட்டு விடுகிறார். மோசேயை வழிநடத்தியவர், பார்வோனை புறக்கணிக்கிறார். அதே போல இப்போது யூதர்களை விட்டு விட்டு பிற இன மக்களை அரவணைக்கிறார். ஆனால் ஒரு நாள் இஸ்ரேல் மீட்கப்படும் எனும் செய்தியை பவுல் யூதர்களுக்குப் புரியும் வரலாற்றுடன் இணைத்துப் பேசுகிறார்.

திருச்சபையின் ஒற்றுமையையும், திருச்சபை எப்படி பழைய ஏற்பாட்டு நிழல்களினால் புதிய ஏற்பாட்டின் நிஜங்களை இணைக்க வேண்டும், எப்படி விசுவாசத்தைக் காத்துக்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் தெள்ளத்தெளிவாக பவுல் தெரிவிக்கிறார்.

மனிதர் யாவரும் பாவிகள். யாவருக்கும் மீட்பு தேவை. மீட்புக்கு இறைமகன் இயேசு கிறிஸ்து தேவை. அவரோடு இணைந்த வாழ்வில் தான் புது வாழ்வு கிடைக்கும் எனும் மையக்கருத்து இந்த நூலில் வலுவாக இருக்கிறது.

உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்பும் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது (ரோமர் 8:39) எனும் அற்புதமான நம்பிக்கை வார்த்தையை பவுல் தருகிறார்.

முழுமையாய் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய ஒரு நூல் உரோமையர்.

(தொடரும்)

Next Story