ஆன்மிகம்

திருவெம்பாவை நோன்பு + "||" + Thiruvembavai Fasting

திருவெம்பாவை நோன்பு

திருவெம்பாவை நோன்பு
மார்கழியில் வரும் திருவாதிரைக்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு திருவாதிரை நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது திருவாதிரையோடு சேர்த்து விரத நாட்கள் மொத்தம் பத்து நாட்கள் ஆகும்.
திருவெம்பாவை  நோன்பில் அதிகாலையில் எழுந்து நீராடி சிவகாமியுடன் கூடிய நடராஜரை வழிபடுவார்கள். இவ்விரதத்தின்போது அவித்த உணவினை ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவார்கள். இந்த விரதத்தைப் பெரும்பாலும் கன்னிப் பெண்கள்தான் கடைப்பிடிப்பர். இந்த விரதம் மேற்கொள்ளும்போது, திருவெம்பாவை பாடல்கள் பாடப்படுகின்றன. இவ்வழிபாட்டில் (புட்டு) படைக்கப் படுகிறது. இதனால் இவ்வழிபாடு ‘பிட்டு வழிபாடு’ என்று அழைக்கப்படுகிறது.

பாவை நோன்பு

ஆயர்பாடியில் உள்ள கோபியர்கள், மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஆற்றிற்குச் சென்று நீராடி, மண்ணால் செய்த காத்யாணி தேவியை வழிபட்டு தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வழிபாடு நடத்தினர். பெண்கள் கடைப்பிடித்த விரதம் என்பதால், இந்த விரதம் ‘பாவை நோன்பு’ என்று வழங்கப்படலாயிற்று. ஆண்டாள் பாவை நோன்பினை மேற்கொண்டே, அரங்கனை கணவனாக அடைந்தாள்.

ஆண்டாள் பாவை நோன்பின்போது நெய், பால் முதலியவற்றை உண்ணாமலும், கண்ணுக்கு மை இடாமல், தலையில் மலர் சூடாமல் புற அழகில் நாட்டம் செலுத்தாமல், இறைநாட்டத்தில் மட்டும் மனதினைச் செலுத்தி பாவை நோன்பினை மேற்கொண்டாள்.

எனவே கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க, மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி கோவிலுக்குச் சென்று ஆண்டாள் எழுதிய திருப்பாவையைப் பாடி வழிபாடு நடத்துகின்றனர்.

திருமணமான பெண்கள் மகிழ்ச்சியான மணவாழ்வு நீடிக்க வேண்டியும், குடும்ப நலன் வேண்டியும் இவ்விரதத்தினை மேற்கொள்கின்றனர். பாவை நோன்பு 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.