கலாத்தியர்


கலாத்தியர்
x
தினத்தந்தி 17 Dec 2019 10:33 AM GMT (Updated: 17 Dec 2019 10:33 AM GMT)

எந்த ஒரு திருமுகத்தை வாசிக்கும் போதும் மூன்று கேள்விகளை கேட்கவேண்டும் என்கின்றனர் விவிலிய அறிஞர்கள்.

ந்த ஒரு திருமுகத்தை வாசிக்கும் போதும் மூன்று கேள்விகளை கேட்கவேண்டும் என்கின்றனர் விவிலிய அறிஞர்கள்.

ஒன்று, இந்த நூல் ஏன் எழுதப்பட்டது?

இரண்டு, இந்த கடிதம் எந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கிறது?

மூன்று, இந்த கடிதம் எந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கிறது.

இந்த மூன்று கேள்விகளையும் மனதில் அசைபோட்டபடி கலாத்தியர் நூலுக்குள் நுழையலாம்.

திருத்தூதர் பவுல் எழுதிய திருமுகங்களில் முக்கியமானவற்றின் பட்டியலில் கலாத்தியர் நூலுக்கு சிறப்பிடம் உண்டு. “நம்பிக்கையினால் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆதல்” பற்றிய சிந்தனையை இந்த நூல் பேசுகிறது. ‘இறைவனுக்கு அடிமையாக வாழும்போது நாம் விடுதலையாய் வாழ்கிறோம்’ எனும் இறையியல் தத்துவத்தை கலாத்தியர் நூல் விளக்குகிறது.

கலாத்தியர் நூல் சிலரை மிக அதிகமாக வசீகரிக்கிறது. உதாரணமாக, புராட்டஸ்டன்ட் பிரிவை ஆரம்பித்த மார்டின் லூதருக்குப் பிரியமான நூல் கலாத்தியர். அவருடைய சித்தாந்தமான ‘நம்பிக்கை மட்டுமே நம்மை கடவுளுக்கு ஏற்புடையவராக்கும்’ எனும் சிந்தனை இதில் வலுவாக இருப்பது தான் அதன் காரணம். இதை அவர் “சீர்திருத்தத்தின் பேருரிமைப் பத்திரம்” என அழைத்தார். அதே போல ‘த பில்கிரிம்ஸ் ப்ராக்ரஸ்’ நூலை எழுதிய ஜான் புனியனுக்கும் இந்த நூல் தான் ஆதார சுருதி.

இது ரொம்பவே உணர்ச்சி மயமான ஒரு நூல். ஆறு அதிகாரங்கள் கொண்ட இந்த நூலில் உணர்ச்சிகள் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுவதை உணரலாம். இன்னொன்று, இது ரொம்பவே தனிப்பட்ட கடிதம். பவுல் தன்னைப்பற்றி இந்த நூலில் அதிகம் எழுதுகிறார். தனது பலவீனங்கள் குறித்து எழுதுகிறார். அவரது கருத்து வேறுபாடுகளை எழுதுகிறார்.

இந்த நூல் ரொம்பவே அறிவார்ந்த நூல். பவுல் அறிவாளி என்பதும், அவர் சிறந்த கல்வி கற்றவர் என்பதும் நமக்குத் தெரியும். தான் கற்ற வித்தைகளையெல்லாம் அவர் கொட்டி வைத்திருக்கும் நூல் கலாத்தியர் நூல் என தாராளமாகச் சொல்லலாம். எளிதில் புரிந்து கொள்ள முடியாத, தூய ஆவியானவரின் துணையோடு தான் ரகசியங்களை அவிழ்க்க முடியும் என்கிறது கலாத்தியர் நூல்.

இது ரொம்பவே ஆன்மிக ஆழம் பொருந்தியது என்பது இன்னொரு சிறப்பு. கர்வத்தின் கடைசி துளியையும் கழுவிக் களைகின்ற ஆற்றல் இந்தக் கலாத்தியர் நூலுக்கு உண்டு. உண்மையான அர்ப்பணிப்போடு இந்த நூலை முழுமையாய் வாசித்து நேசிப்பவர்கள், தாழ்மையின் தன்மையை அணிந்து கொள்வார்கள் என்பது சர்வ நிச்சயம்.

இந்த நூலின் இன்னொரு தன்மை இதிலிருக்கின்ற ஆழமான, தீவிரமான விவாதங்கள். பவுல் தனது வாளை திருச்சபைக்குள்ளேயே வீசுகின்றார். எது சரி, எது தவறு என்பதை தயவு தாட்சண்யமில்லாமல் அவர் நிலைநிறுத்துகிறார். கருத்து வேற்றுமைகளை ஏற்றுக் கொண்டு பயணிப்பதல்ல கிறிஸ்தவ வாழ்க்கை, இறைவனின் திருவுளத்துக்கு ஏற்ற கருத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு பயணிப்பது என்பதையே பவுல் வலியுறுத்துகிறார்.

சட்டங்களின் அத்தனை நுணுக்கங்களையும் கற்றுத்தேர்ந்தவர் பவுல். கிறிஸ்தவர்களைக் கொல்ல வேண்டுமென வெறியுடன் அலைந்தவர். ஸ்தேவானின் படுகொலையின் போது வேடிக்கை பார்த்தவர்.

கடைசியில் தமஸ்கு செல்லும் வழியில் இயேசுவே அவரை எதிர்கொண்டு அவரது வழியை ஒட்டுமொத்தமாக மாற்றுகிறார். இப்போது அவர் மிகப்பெரிய நற்செய்தி அறிவிப்பாளர். இந்த நூலை அவர் எழுதுவதற்கு அவரது சட்ட அறிவும் பின்னணியில் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

பவுல் கலாத்தியத் திருச் சபையை இரண்டு முறை சந்தித்தார். முதல்முறை கலாத்தியர்கள் பவுலை ஏற்றுக்கொண்டு அவரை பின்பற்றினர். நற்செய்தியை மிக ஆவலுடன் உள்வாங்கினர். பவுலும் அவர்களுக்காக கடுமையாக உழைத்தார். ஆனால் இரண்டாம் முறை சந்தித்த பின் உள்ளே பிரிவினை சகோதரர்கள் தலையெடுத்தனர். பவுலின் நற்செய்தியைத் திரித்துக் கூறத் தொடங்கினர். அவர்களை பவுல் கண்டிக்கிறார். இந்த கடிதத்தை கி.பி. 57-ல் எபேசு நகரிலிருந்து எழுதுகிறார்.

கிறிஸ்து இயேசுவை மையமாக வைத்தே இந்த நூலை முழுக்க முழுக்க பவுல் எழுதுகிறார். உடலாலும், உள்ளத்தாலும் தான் இறைவனோடு இரண்டறக் கலந்திருக்கும் நிலையை பதிவுசெய்கிறார்.

நற்செய்தி தனக்கு இறைவனால் நேரடியாகத் தரப்பட்டது என்றும், மீட்பு என்பது நல்ல செயல்கள் செய்வதாலோ சட்டத்தைக் கைக்கொள்வதாலோ கிடைப்பதல்ல, மாறாக இறைமகன் மீது வைக்கும் நம்பிக்கையால் கிடைப்பது என்கிறார் பவுல். சட்டத்தின் கரம்பற்றிய நாம், இப்போது பற்ற வேண்டியது இயேசுவின் கரத்தை என்கிறார்.

ஆனால் இது நம்மை சோம்பேறியாக்கவோ, செயலற்றவர்களாகவோ ஆக்கி விடக் கூடாது, பிறரன்புப் பணியை இன்னும் அதிகமாக்க வேண்டும் என்பதை அவர் புரிய வைக்கிறார். “ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக்கொள்ளுங்கள்” என அறைகூவல் விடுக்கிறார். “ஒருவருக்கு ஒருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள்” என உயரிய போதனையை அளிக்கிறார்.

எக்காரணம் கொண்டும் தவற விடக்கூடாத அற்புதமான ஒரு கடிதம் கலாத்தியர்.

(தொடரும்)

Next Story