கடனை திருப்பி அடைப்பது


கடனை திருப்பி அடைப்பது
x
தினத்தந்தி 17 Dec 2019 11:33 AM GMT (Updated: 17 Dec 2019 11:33 AM GMT)

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70 க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம்.

ஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70 க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான கடனை திருப்பி அடைப்பது குறித்த தகவல்களை காண்போம்.

கடன் வாங்குவது, வாங்கிய கடனை திருப்பி அடைப்பது என்பதெல்லாம் பொருள் சார்ந்த, பொருளியல் சம்பந்தமாக இருந்தாலும், கடனை நிறைவேற்றுவதற்கு கடுமையான உடலுழைப்பும், பெரும் முயற்சியும் முதலுதவியாக அமைகிறது. இதனால் தான், இஸ்லாம் இதனை உடல்சார்ந்த இறைநம்பிக்கையின் ஒரு அங்கமாக அங்கீகாரம் செய்கிறது.

கடன் கொடுப்பது, கடனை திருப்பி அடைப்பது என்ற இரண்டு அம்சங்கள் இருந்த போதிலும், கடன் கொடுப்பது சம்பந்தமாக பேசாமல் கடனை அடைப்பது சம்பந்தமாக இஸ்லாம் வலியுறுத்தி பேசுகிறது.

கடன் கொடுப்பது நற்குணம். வாங்கிய கடனை திருப்பி, கொடுக்காமல் ஏமாற்றுவது துற்குணம். இந்த ஏமாற்று வேலை இறைநம்பிக்கையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துவதுடன் அதில் அகலமான விரிசலையும் ஏற்படுத்தி விடுகிறது.

கடனின் துவக்கம் எப்படி உருவாகிறது? அத்தியாவசியத் தேவைக்கும், அநாவசியத் தேவைக்கும் இடையே இயங்குவது, வாங்குவதுதான் கடனின் துவக்கப்புள்ளி.

அத்தியாவசியத்திற்கு கடன் வாங்கிக் கொள்ளலாம். அநாவசிய செலவுக்கு கடன் வாங்காமல் இருப்பது நன்று. அவசியத்திற்கு வாங்கினாலும் அதையும் முறையாக, முழுமையாக திருப்பிச்செலுத்த வேண்டும்.

‘எந்த மனிதன் கடன்பட்டு, அதை நிறைவேற்றாத எண்ணமுடையவனாக இருக்கிறானோ அவன் திருடனாகத்தான் இறைவனை சந்திப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: சுஹைப் (ரலி), நூல்: இப்னுமாஜா, பைஹகீ)

‘இறைவா, மண்ணறை வேதனையை விட்டும், தஜ்ஜாலின் (அதிசய மனிதன்) குழப்பத்தை விட்டும், வாழும்போதும், மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தை விட்டும், பாவங்களை விட்டும், கடனை விட்டும், உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்தனை செய்தார்கள்.

‘தாங்கள் கடனை விட்டும் அதிகமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன?’ என்று ஒருவர் கேட்ட போது, ‘ஒரு மனிதன் கடன்படும் போது பொய் பேசுகிறான்; வாக்களித்து விட்டு அதை மீறுகிறான்’ என நபி (ஸல்) விளக்கமளித்தார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

நல்லவனை கூட கடன் பொய்யனாக மாற்றி விடுகிறது. இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் கூட கடனிலிருந்து விடுபட இறைவனிடம் வேண்டியுள்ளார்கள்.

கடன் வாங்குவது தவறில்லை. கடனை பெறும் போது அதனை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என நல்லெண்ணத்துடன் பெற வேண்டும். அடுத்தவனை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கடன் வாங்கக்கூடாது. பெரும்பாலானோர் வாங்கிய கடனையே மறந்து விடுவார்கள். ஞாபகம் வந்தாலும் அதை கொடுக்கவே மாட்டார்கள். இவர்கள் அடுத்தவனின் பொருளை சுரண்டி, அவனை அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் அழிந்து போவது என்னவோ இவர்கள் தான். இது குறித்து நபியின் பேச்சு சிந்தனைக்குரியது.

‘எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட் களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி, அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ, அல்லாஹ்வும் அவனை அழித்துவிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி).

‘அல்லாஹ் அவனது கடனை செலுத்துவான்’ என்பது அவனுக்கு ஏதேனும் வழியில் பொருளாதாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பது ஆகும். இல்லையெனில் கடனை அடைக்காமல் மரணித்துவிட்டால், அவனது பாவங்களை மன்னிப்பது ஆகும். ‘இறைவன் அவனை அழித்து விடுவான்’ என்பது அவனது பொருளாதாரத்தை அபிவிருத்தியில்லாமல் ஆக்கி விடுவான் என்பதாகும்.

கடன் கொடுத்தவர், கடன் வாங்கியவரிடம் கண்டிப்புடன் நடந்து கொள்ளும் உரிமை அவருக்கு உண்டு. அதேநேரத்தில், கடன் கொடுத்தவன் கடனாளியை அவமானப்படுத்தக் கூடாது; அசிங்கப்படுத்தக் கூடாது; அடிக்கக்கூடாது; ஆபாசமாக திட்டக்கூடாது. இதுதான் கண்ணியமான நடைமுறை. இருவரும் தமக்கு அளிக்கப்பட்ட உரிமையில் எல்லை மீறாமல் சுமூகமாக நடந்து கொள்ள வேண்டும்.

‘ஒருவர் நபி (ஸல்) அவர்களுக்கு கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து, கடினமான வார்த்தையைப் பயன்படுத்தினார். நபித்தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். ‘அவரை விட்டு விடுங்கள். கடன்கொடுத்தவருக்கு இவ்வாறு கூற உரிமையுள்ளது. அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஓர் ஒட்டகத்தைக் கொடுங்கள்’ என நபி (ஸல்) கோரினார்கள். அதற்கு நபித்தோழர்கள் ‘அதை விட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லை’ என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அதையே கொடுங்கள். கடனை அழகியமுறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் ஆவார்’ என்றார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

கொடுத்த கடனை அவ்வாறே வாங்க வேண்டும். கொடுத்ததை விட அதிகம் வாங்குவதும், கொடுப்பதும் வட்டி ஆகும். இது இஸ்லாத்தின் பார்வையில் தடை செய்யப்பட்டது.

கஷ்டப்படுவோருக்கு கடன் கொடுப்பதை இஸ்லாம் வரவேற்கிறது. தர்மத்தை விட தலைசிறந்ததாக கடன் கொடுப்பதை இஸ்லாம் தேர்வு செய்கிறது.

‘ஒரு பொருளை தர்மமாக கொடுப்பதை விட கடனாக கொடுப்பது தலைசிறந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: பைஹகீ) இது குறித்த நபிகளார் கூறியிருப்பதாவது:-

‘நான் மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் மேற்கொண்ட போது சொர்க்கத்தின் வாசலை கண்டேன். அதில் இவ்வாறு ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது. ‘தர்மம் செய்வதற்கு பத்து மடங்கு நன்மையுண்டு. கடன் கொடுப்பதற்கு பதினெட்டு மடங்கு நன்மையுண்டு’.

‘ஜிப்ரீலே (அலை) தர்மத்தை விட கடன் சிறந்ததாக இருப்பதின் நோக்கம் என்ன?’ என்று நான் கேட்டேன்.

அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் ‘யாசகம் கேட்பவர் எதை கேட்பாரோ அது அவரிடமே இருக்கும். கடன் கேட்பவர் அவர் தமது தேவையின்றி கடன் கேட்பதில்லை’ என இவ்வாறு பதில் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), இப்னுமாஜா)

கடன் பெறுபவர் தம்மிடம் இல்லாத ஒரு தேவைக்காக கடன் கேட்கிறார். அவ்வாறு ஒருவர் கடன் வழங்குவதின் மூலம் அவரின் தேவை நிறைவேறி விடுகிறது. வாங்கிய கடனை திருப்பி அடைப்பது அவரின் கடமை. எனினும் கடன் சுமையிலிருந்து மீண்டு வர அவருக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும். கடன் கொடுத்தவர் கடனாளியை நிர்பந்தப்படுத்தாமல் சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். இந்த அவகாசத்திலும் கடனாளி கடனை நிறைவேற்ற இயலாத போது மனித நேய அடிப்படையில் கடன் கொடுத்த நல்மனம் படைத்தவர் அவரின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். இது கடன் கொடுப்போருக்கு இஸ்லாம் கூறும் நற்போதனையாகும். இவ்வாறு கடனாளியிடம் நடந்து கொள்ளும் போக்கு இறைவனை வெகுவாக கவர்ந்து விடுகிறது.

‘ஒருவர் மரணித்து விட்டார். அவரிடம் (மண்ணறையில் வைத்து) ‘நீ உலகில் என்ன நன்மை செய்து வந்தாய்?’ என்று விசாரிக்கப்பட்டது. அதற்கு அவர், ‘நான் மக்களிடம் கொடுக்கல், வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து, அவரின் கடனைத் தள்ளுபடி செய்து வந்தேன்’ என்று கூறினார். அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஹூதைபா (ரலி), நூல்: புகாரி)

‘கடன்பட்டவர் தமது கடனை நிறைவேற்றும் வரை அவருடன் இறைவன் உள்ளான். எனினும், அவர் இறைவன் வெறுக்கும் காரியங்களுக்காக அவர் கடன் வாங்காமல் இருக்க வேண்டும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஜாபர் (ரலி), நூல்: இப்னுமாஜா)

கடன் வாங்குவது குற்றமல்ல. ஆனால் குற்றம் செய்வதற்கு கடன் வாங்குவது நல்லதல்ல. சுபகாரியங்களுக்கு கடன் வாங்குவது சுபக்கடன். தவறு செய்வதற்கு கடன் வாங்குவது அது அசுபக்கடன். இதில் இறைவனின் உதவியை எதிர்பார்க்க முடியாது.

இந்த உலகை விட்டு மறைவதற்கு முன்பு தான் பட்ட கடனை அடைத்துவிட வேண்டும். முடியாது போனால் வாரிசுகளிடம் அடைத்துவிடும்படி மரணசாசனம் கூறிவிட வேண்டும். கடனாளியாக மரணிக்கும் போது இறைவனின் சுகபோக மறுமை வாழ்வும் கிட்டாது; இறைமன்னிப்பும் கிடைக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

‘இறைநம்பிக்கையாளரின் உயிர் அவரது கடன் நிறைவேற்றப்படும் வரை (நல்லோர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுகபோகமான, அருள்நிறைந்த பதவியை அடைய முடியாமல்) தொங்கிக் கொண்டிருக்கும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: திர்மிதி)

கடனை நிறைவேற்றாமல் இருப்பது சாதாரணமானது அல்ல. கடன்பட்டு இறந்து போனால், அவனுக்கு இறுதித் தொழுகையும், இறுதி பிரார்த்தனையும் கூட புரிவதற்கு இஸ்லாம் தடைவிதித்துள்ளது. அந்தளவுக்கு கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுவது பெரிய பாவமாகும். அப்படிப்பட்டவனிடம் எங்கே இறைநம்பிக்கை இருக்கும்? இவன் புகலிடம் நரகமே.

(தொடரும்)

Next Story