நன்மை பயக்கும் காரியங்களுக்கு உதவி புரிவது...


நன்மை பயக்கும் காரியங்களுக்கு உதவி புரிவது...
x
தினத்தந்தி 24 Dec 2019 10:12 AM GMT (Updated: 24 Dec 2019 10:12 AM GMT)

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70- க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘நன்மை பயக்கும் காரியங்களுக்கு உதவி புரிவது...’ குறித்த தகவல்களை காண்போம்.

நன்மையான காரியங்களுக்கு ஒருவருக்கொருவர் உதவிடுவது இறைநம்பிக்கையின் ஒரு அங்கமாக உள்ளது. உதவி என்பது பொருள் சார்ந்துதான் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. அது உடல் சார்ந்தும் அமையலாம்.

உண்மையான இறைநம்பிக்கை என்பது நற்கருமங்களுக்கு உதவி ஒத்தாசை புரிவதும், பாவமான காரியங்களுக்கு உதவிடுவதை நிறுத்துவதும்தான். இத்தகையவர்கள்தான் உண்மையான இறைநம்பிக்கையாளர்களாக இருக்கமுடியும். இவர்களைப் பார்த்துதான் இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:

‘இறைநம்பிக்கையாளர்களே, நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம். இறைவனை அஞ்சுங்கள், நிச்சயமாக இறைவன் கடுமையாகத் தண்டிப்பவன்’. (திருக்குர்ஆன் 5:2)

எது நன்மை பயக்கும் காரியங்கள்?

துன்பத்தில் இருப்பவருக்கு ஆறுதல் கூறி, அவரின் துன்பத்தை அகற்றுவது நன்மை தரும் காரியம். சிரமப்படுவோருக்கு உதவிடுவது நன்மை. ஒருவரின் குறைகளை மறைப்பது நல்ல காரியம். இவ்வாறு பிறரிடம் நாம் நடந்து கொள்ளும் போது அவ்வாறே இறைவனும் மறுமையில் நம்மிடம் நடந்து கொள்வான். நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோமோ அவ்வாறு நடத்தப்படுவோம்.

‘யார் இந்த உலகில் ஓர் இறைநம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ, அவருடைய மறுஉலகத் துன்பங்களில் ஒன்றை இறைவன் அகற்றுகிறான். யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்ய முன்வருகிறாரோ அவருக்கு இறைவன் இருஉலகிலும் உதவி செய்கிறான். யார் ஒரு இறைநம்பிக்கையாளரின் குறைகளை மறைக் கிறாரோ அவரின் குறைகளை இறைவன் இருஉலகிலும் மறைக்கிறான். ‘ஒருவன் தனது சகோதரனுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் வரை அந்த அடியானுக்கு இறைவன் உதவி செய்து கொண்டிருக்கிறான்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

‘தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே, தர்மம் செய்ய பொருள் ஏதும் கிடைத்திடாத பட்சத்தில்...?’ எனக்கேட்க, ‘ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து, தர்மமும் செய்ய வேண்டும்’ என நபி (ஸல்) பதில் கூறினார்கள். ‘அதுவும் முடியாத பட்சத்தில்’ எனக் கேட்டதற்கு, ‘தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவிட வேண்டும்’ என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூமூஸா (ரலி), நூல்: புகாரி)

யார் யாருக்கு என்ன உதவி தேவையோ அந்தந்த உதவிகளை நன்மையின் அடிப்படையிலும், மனிதநேயத்தின் அடிப்படையிலும் செய்து வருவதுதான் இறைநம்பிக்கையே தவிர, உதவி கேட்டு வருபவரை விரட்டியடிப்பதும், உதவமுடிந்தும் உதவாமல் வேடிக்கை பார்ப்பதும் இறைநம்பிக்கை அல்ல.

‘ஒரு இறைநம்பிக்கையாளரின் மானம் பறிக்கப்படும் போது, அவரின் மரியாதைக்குப் பங்கம் வரும்போது எவர் உதவி செய்யாமல் இருந்து விடுவாரோ, அவருக்கு இறைவனின் உதவி தேவைப் படும்போது இறைவன் அவரைத் தன் உதவியை விட்டும் தடுத்து விடுகின்றான். மேலும், ஒரு இறைநம்பிக்கையாளரின் மானம் பறிக்கப்படும்போது, அவரின் மரியாதைக்குப் பங்கம் ஏற்படும்போது எவர் உதவுகிறாரோ, அவருக்கு இறைவனின் உதவி தேவைப்படும்போது இறைவன் அவருக்கு உதவுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: அபூதாவூத்)

‘எவர் தமது சகோதரனுடைய தேவையை நிறைவேற்றுகிறாரோ, அவருடைய தேவையை இறைவன் நிறைவேற்றி வைப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: அபூதாவூத்)

தேவை உடையோருக்கு அவரின் தேவை சார்ந்து உதவ முன் வருவதும், அவருக்காக நடந்து போவதும் ஒரு இறைவணக்கமாக அங்கீகரிக்கப்படுகிறது. அது எத்தகைய இறைவணக்கம்? என நினைக்கும் போது உடம்பெல்லாம் சிலிர்த்து விடுகிறது. இது குறித்த தகவலை பின்வரும் நபிமொழியின் மூலம் தெரிந்து கொள்வோம்.

‘யாரேனும் ஒருவர் தன் சகோதரனின் தேவைக்காக உதவிட நடந்து செல்வது பத்தாண்டுகள் பள்ளிவாசலில் தங்கி (இஃதிகாப்) இருப்பதைவிடச் சிறந்தது. ஒருவர் இறைவனின் திருப்தியை நாடி ஒரு நாள் இறையில்லத்தில் தங்கி இருந்தால், அவருக்கும், நரகத்திற்கும் இடையே மூன்று அகழிகளை இறைவன் தடையாக ஏற்படுத்தி விடுகின்றான். ஒவ்வொரு அகழியும் வானம், பூமிக் கிடையே உள்ள தூரத்தை விட விசாலமானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : தப்ரானீ)

நபி (ஸல்) அவர்கள் தலைசிறந்த உதவிகளை பட்டியல் போடுகிறார்கள். அடிமைக்கு அவரின் சக்திக்கு உட்பட்ட பணிகளை கொடுக்கும்படியும், சிரமமான பணியில் அவருக்கு உதவிடும்படியும், தொழில், விவசாயம், வியாபாரம் செய்பவருக்கு கடன், மானியம் கொடுத்து உதவிடுமாறும், வேலை இல்லாதோருக்கு வேலை வாய்ப்பை வழங்கிடும்படியும் நபியவர்கள் பரிந்து பேசுகிறார்கள். இப்படித்தான் ஒரு இறைநம்பிக்கையாளர் நன்மை பயக்கும் காரியங்களில் மற்றவர்களுக்கு உதவிடும் மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் தீர்மானிக்கிறது. இதுதான் இறைநம்பிக்கை எனவும் ஆதரிக்கிறது.

அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) கூறுகிறார்:

நாங்கள் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது ஒரு ஏழை மனிதர் தமது பலவீனமான ஓர் ஒட்டகத்தில் வந்து, வலப்பக்கமும், இடப்பக்கமும் தமது பார்வையைச் செலுத்தி (பார்வையாலேயே உதவி கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘தம்மிடம் தேவைக்கு அதிகமான வாகனம் வைத்திருப்பவர் வாகனம் இல்லாதவருக்கு அதைக் கொடுத்து உதவட்டும். தம்மிடம் தேவைக்கு அதிகமான உணவு வைத் திருப்பவர் உணவில்லாதவருக்கு அதைக் கொடுத்து உதவட்டும்’ என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் பல்வேறு செல்வங்களைப் பற்றி தேவைக்கு அதிகமாக இருந்தால் இல்லாதவருக்கு அவற்றைக் கொடுக்கட்டும் என்று கூறினார்கள். எந்த அளவுக்கென்றால், தேவைக்கு அதிகமாக எஞ்சியிருக்கும் பொருளில் எங்களில் எவருக்கும் உரிமையில்லையோ என்று நாங்கள் கருதினோம்.’ (நூல்: புகாரி)

பாவமான காரியங்களுக்கும், பகையுணர்வை தூண்டும் காரியங்களுக்கும், அநியாயங்களுக்கும் அணுஅளவு கூட உதவிக்கரம் நீட்டிவிடக் கூடாது. பாவமான காரியங்களிலிருந்து ஒருவர் விடுபட உதவி செய்யலாம். அவர் ஈடுபட உதவிடக் கூடாது.

‘எவன் ஒருவன் அநியாயக்காரன் என தெரிந்தும் அவனுக்கு உதவிட அவனுடன் கைகோர்த்து நடந்து சென்றால், அவன் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து வெளியேறிவிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (நூல்: தப்ரானீ)

‘உனது சகோதரனுக்கு எல்லாநிலைகளிலும் உதவுங்கள். அவன் அநீதி இழைக்கக் கூடியவனாக, அல்லது அநீதி இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் சரியே’ என நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, ‘இறைத்தூதரே, அநீதி இழைக்கப்பட்டவனுக்கு நான் உதவுவேன்; அநியாயம் செய்பவனுக்கு நான் எப்படி உதவுவது?’ என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபியவர்கள் ‘அநியாயம் செய்வதை விட்டும் அவரைத் தடுங்கள். ஏனெனில், அநியாயம் செய்வதை விட்டும் அநியாயக்காரனைத் தடுப்பது அவனுக்குச் செய்யும் உதவியாகும்’ என்று பதிலளித்தார்கள்.’ (அறிவிப்பாளர் : அனஸ் (ரலி), புகாரி)

சமய நல்லிணக்கம், சமூக இணக்கம் மலர உதவலாம். இனவெறி, மொழிவெறி, நிறவெறி, மதவெறி, ஜாதிவெறி போன்றவற்றுக்கு உதவிக் கரம் நீட்டக்கூடாது.

‘தன் இனத்தாருக்கு அநியாயமான முறையில் உதவி செய்ய எவன் அழைக்கிறானோ, அவன் நம்மைச் சார்ந்தவன் அல்ல. தன் இனத்தாருடன் சேர்ந்து கொண்டு அநியாயமான முறையில் உணர்ச்சிவசப்பட்டு சண்டையிடுபவன் நம்மைச் சார்ந்தவனல்ல. தன் இனத்தாரைக் காக்க அநியாயமான முறையில் சண்டையிட்டு மரணிப்பவனும் நம்மைச் சார்ந்தவனல்ல என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: சுபைர்பின் முத்இம் (ரலி), நூல்: அஹ்மது)

‘தன் சமூகத்தாரை நேசிப்பது இனவெறியைச் சார்ந்ததா?’ என்று நபியவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள் ‘தன் சமூகத்தாரை நேசிப்பது இனவெறி அல்ல. மாறாக, தன் சமூகத்தார் அநியாயமான முறையில் செயல்படுகிறார்கள் என்று தெரிந்த பின்பும் ஒருவர் தனது சமூகத்தாருக்கு உதவுவதே இனவெறியாகும்’ என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: புஸைலா (ரஹ்), நூல்: அஹ்மது)

நாம் என்றென்றும் இறைநம்பிக்கையாளராக இருந்து நன்மைக்கு உதவி செய்வோம். உண்மையின் பக்கம் இருப்போம்.

Next Story