எபேசியர்


எபேசியர்
x
தினத்தந்தி 24 Dec 2019 10:16 AM GMT (Updated: 24 Dec 2019 10:16 AM GMT)

விவிலியத்தில் அமைந்துள்ள திருமுகங்களில் மிக ஆழமான சிந்தனையுடைய நூல்களில் ஒன்று எபேசியர். இதற்கும் கொலோசேயர் நூலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. சிந்தனையிலும், கருத்து பரிமாற்றத்திலும் இரண்டு திருமுகங்களும் ஒரே அடிப்படையைக் கொண்டிருக்கின்றன.

சிலர் இதை கொலோசேயர் நூலின் விளக்க உரை என்றும் குறிப்பிடுவதுண்டு. இந்த நூலை எழுதியவர் பவுல் என்பது மரபுச் செய்தி. ஆனாலும் இறையியலாளர்களிடையே கருத்து வேற்றுமைகள் உண்டு.

இந்த நூலின் நடை பவுல் எழுதிய மற்ற நூல் களிலிருந்து வேறுபட்டிருப்பது ஒரு காரணம். இந்த நூலின் சிந்தனைகள் பிற்கால இறையியல் சிந்தனைகளின் தாக்கத்தை உள்வாங்கியிருப்பது இன்னொரு காரணம்.

எனவே இது பவுலின் சீடர்களில் ஒருவர், பவுல் சொன்ன சிந்தனைகளைத் தொகுத்து ஒரு செறிவான நூலாக உருவாக்கியிருக்கலாம் எனும் சிந்தனை வலுப்பெற்று வருகிறது. அப்படியெனில் இந்த நூல் கி.பி. 80க்குப் பிறகு எழுதப்பட்டிருக்க வேண்டும். அந்தக் காலத்தில் இன்னொருவரின் பெயரில் நூலை எழுதுவது ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறையாகத் தான் இருந்து வந்திருக்கிறது.

‘எபேசியர் நூல்’ என்று சொன்னதும் எபேசியர் களுக்கு எழுதப்பட்ட நூல் என நாம் கருதிக் கொள்கிறோம். ஆனால் இது ஒரு குறிப்பிட்ட திருச்சபைக்காக எழுதப்பட்ட நூல் அல்ல. இன்னும் சொல்லப் போனால் பழைய முதன்மை சுவடிகளில் “எபேசியர் களுக்கு” எனும் வார்த்தையே இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வரலாறு எப்படியோ, இந்த நூல் ஆன்மிக வாழ்வுக்கு மிக முக்கியமான ஒரு நூல் என்பதில் சந்தேகமில்லை.

எபேசு திருச்சபைக்கு பல சிறப்பம்சங்கள் உண்டு. இயேசு தன் அன்னையை யோவானிடம் ஒப்படைத்தபின், யோவான் எபேசுவில் தான் அன்னை மரியாளுடன் தங்கியிருந்தார். யோவான் நற்செய்தியையும் அவர் அங்கிருந்து தான் எழுதினார். யோவானுடைய கடிதங்களும் அங்கிருந்து தான் எழுதப்பட்டன.

பவுலின் திருமுகங்களான 1 திமோத்தேயு மற்றும் 2 திமோத்தேயு இரண்டுமே எபேசுவில் வாழ்ந்த திமேத்தியுவுக்கு எழுதப்பட்டவை. அப் படியே எபேசு சபைக்கான கடிதங்களாகவும் அவை அமைந்தன. திருவெளிப்பாடு நூலில் இறைவன் வெளிப்படுத்தும் சபைகளில் ஒன்று எபேசு திருச்சபை.

விவிலியத்தைத் தாண்டிய பதிவுகளைப் புரட்டினாலும் எபேசு சபை மிக முக்கியமான சபையாய் இருந்தது விளங்குகிறது. புனித யோவானின் கல்லறையும், ஆலயமும் அங்கே அமைந்துள்ளன. கி.பி. 431 ல் திருச்சங்கம் எபேசுவிலுள்ள அன்னை மரியாள் ஆலயத்தில் கூடியதும் வரலாற்றுச் சிறப்பு மிக்கது.

பவுல் எபேசுவில் சுமார் இரண்டு ஆண்டு காலம் தங்கியிருந்தார். கிறிஸ்தவ மதம் அந்த பகுதியில் செழித்து வளர அது மிகப்பெரிய உந்துதலாய் இருந்தது.

எபேசியர் திருமுகம் மிகத்தெளிவாக இரண்டு விஷயங்களைப் பேசுகிறது. ஒன்று, நமக்கு இயேசு கிறிஸ்துவின் மூலமாக கடவுளோடு இருக்க வேண்டிய ஆழமான உறவு. இரண்டாவது சகமனிதரோடு நமக்கு இருக்கவேண்டிய கடவுளின் அன்பு.

மீட்பைப் பெற என்ன செய்யவேண்டும் என்பது முதல் பாகத்தில் விளக்கப்பட்டுள்ளது என்றால், மீட்பைப் பெற்றவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது இரண்டாம் பாதியில் விளக்கப்படுகிறது.

நாம் நல்ல செயல்களைச் செய்வதனால் மீட்கப்பட்டவர்களல்ல, ஆனால் நல்ல செயல்களைச் செய்வதற்காக மீட்கப்பட்டவர்கள். இந்த சிந்தனையை நாம் எபேசியர் நூலில் காணலாம்.

திருச்சபைக்கு உள்ளே நிகழும் மாற்றமாக முதல் பாதியை எடுத்துக் கொள்ளலாம். வானம் நோக்கி கரங்களை விரிக்கும் கணம் அது. திருச்சபைக்கு வெளியே நிகழும் மாற்றமாக இரண்டாவது பாதியை எடுத்துக் கொள்ளலாம். திருச்சபைக்கு வெளியே கரங்களை விரிக்கும் செயல் அது. இரண்டும் கலந்த வாழ்க்கையே உண்மையான கிறிஸ்தவப் பயணம் என்பதை இந்த நூல் மிகத் தெளிவாக விளக்குகிறது.

யூதரெனன்றும், பிற இனத்தவர் என்றும் பிரிவினைகள் இல்லாமல் இறைவன் அனைவருக்காகவும் இறந்தார். அனைவரின் மீட்புக்காகவும் தன்னைக் கையளித்தார். இறைவனின் அருளைப் பெற்று நாம் அவரில் நடக்க வேண்டும் எனும் இறையியல் சிந்தனையை இந்த நூல் வலியுறுத்துகிறது.

‘ஒன்றே ஒன்று’, எனும் போதனை மையமாய் அமைகிறது. ஒரே உடல், ஒரே ஆவி, ஒரே விசுவாசம், ஒரே திருமுழுக்கு, ஒரே இறைவன் எனும் அடிப்படை நம்மிடம் இருக்க வேண்டும். நமது செயலும் வாழ்வும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். ஆபாசமாக பேசுவதைக் கூட பாவம் என ஒதுக்கவேண்டும். பிறரை மன்னித்தல், பிறரை ஏற்றுக்கொள்ளல், பிறரைப் பொறுத்துக்கொள்ளல் என சக மனித கரிசனை மிக முக்கியம் என்றெல்லாம் இந்த நூல் பேசுகிறது.

கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் உள்ள தொடர்பை, கணவன்மனைவி உறவோடு ஒப்பிட்டு மேன்மைப்படுத்துகிறது இந்த நூல். “திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பதுபோல, மனைவியரும் தங்கள் கணவருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும். கிறிஸ்து திருச் சபை மீது அன்பு செலுத்தியது போல கணவர்கள் மனைவியரிடம் அன்பு செலுத்த வேண்டும்” என குடும்ப உறவை உச்சத்தில் வைக்கிறது எபேசியர் நூல்.

Next Story