கூட்டுக்கிரக சேர்க்கையால் உருவாகும் அச்சம்


கூட்டுக்கிரக சேர்க்கையால் உருவாகும் அச்சம்
x
தினத்தந்தி 24 Dec 2019 10:37 AM GMT (Updated: 24 Dec 2019 10:37 AM GMT)

கிரகங்களின் சுழற்சியும், பெயர்ச்சியும்தான், மனிதனின் வாழ்க்கையை சுழல வைக்கின்றன என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

பெயர்ச்சியாகும் கிரகங்களில் மிகவும் குறைந்த காலங்கள் ஒரு ராசியில் இருப்பது சந்திரன்தான். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளில், அவர் ஒவ்வொரு ராசியிலும் இரண்டேகால் நாட்கள்தான் இருப்பார். சூரியன் சரியாக ஒரு மாத காலமும், புதன், சுக்ரன், செவ்வாய் போன்ற ராசிகள் ஒரு மாதத்திற்கு கொஞ்சம் கூடுதலாகவும் ஒவ்வொரு ராசியிலும் இருப்பாா்கள். குரு பகவான், வருடத்திற்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வாா். ராகு-கேது என்னும் நிழல் கிரகங்கள் ஒன்றரை ஆண்டுகள் ஒரு ராசியில் இருப்பார்கள். சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் இருப்பார். கிரகங்களிலேயே அதிக நாட்கள் ஓரிடத்தில் இருப்பவர் சனி பகவான் தான்.

இப்படி பெயர்ச்சியாகி வரும் கிரகங்கள் ஒன்றோடொன்று இணைந்து சஞ்சரிப்பது என்பதும், ஒரு ராசியில் இரண்டு அல்லது மூன்று கிரகங்கள் இருப்பதும் வாடிக்கையான ஒன்று தான். ஆனால் ஒரு ராசியில் ஒரே நேரத்தில் 5 அல்லது ஆறு கிரகங்களின் கூட்டுச் சேர்க்கை நடைபெற்று விட்டால், அந்த நேரங்களில் எல்லாம் மக்கள் மத்தியிலும், ஜோதிட வல்லுனர்கள் இடையேயும் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்கிறது.

இந்தக் கிரகங்களின் பெயர்ச்சியால், உலகத்திற்கு, நாட்டிற்கு, வீட்டிற்கு, நமக்கு என்று ஏதாவது கெடு பலன்கள் ஏற்பட்டு விடுமோ என்று பலரும் பயம்கொள்கின்றனர். ஒவ்வொரு முறை அதிக கிரகங்களின் சேர்க்கை நடைபெறும்போது, இதுபோன்ற அச்சம் பொதுமக்களிடையே இருந்துள்ளது. அதுபோன்ற ஒரு நிலைதான் இப்போது வந்துள்ளது. அதாவது தனுசு ராசியில் 6 கிரகங்கள் கூடுகின்றன.

“சரி தற்போது தனுசு ராசியில் வருவதுபோல் 6 கிரகங்களின் சேர்க்கை எப்போதாவது வந்திருக்கிறதா?” என்றால், “பலமுறை வந்திருக்கிறது” என்பதுதான் ஜோதிடம் சொல்லும் பதில்.

இதற்கு முன்பு எப்போதெல்லாம் அதிக கிரகங்களின் சேர்க்கை ஒரே ராசியில் நிகழ்ந்திருக்கிறது. அப்போதெல்லாம் பெரிய அளவில் ஏதாவது நிகழ்ந்திருக்கிறதா என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்..

விகாரி வருடம் மார்கழி மாதம் 9-ந் தேதி (25-12-2019) புதன்கிழமை 6 கிரகங்களின் கூட்டுச் சேர்க்கை, தனுசு ராசியில் ஏற்படுகிறது. அன்றைய தினம் மாலை 5.43 மணிக்கு (சென்னை சூரிய உதயப்படி) அமாவாசை திதி அன்று, தட்சிணாயன புண்ணிய காலத்தில் இந்த கிரகச் சேர்க்கை உண்டாகிறது.

தனுசு ராசியில் கூடும் அந்தக் கிரகங்களாக, பலம் வாய்ந்த குரு, சூரியன், சந்திரன், புதன், கேது, சனி ஆகிய கிரகங்கள் இருக்கின்றன. இந்த 6 கிரக கூட்டுச் சேர்க்கையானது, தனுசு ராசியில் 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12.55 மணி வரை உள்ளது.

இந்தக் கிரக சேர்க்கைக்கு இடையில் 26-ந் தேதி (வியாழக்கிழமை) சூரிய கிரகணம் ஏற்படுகிறது. காலை 8.09 மணிக்கு தொடங்கும் இந்த சூரிய கிரகணம், பகல் 11.20 மணிக்கு முடிவடைகிறது.

செவ்வாய், சுக்ரன், ராகு தவிர மற்ற கிரகங்கள் அனைத்தும் ஒரே ராசியில் இருக்கும் நேரத்தில், அமாவாசை திதியும் வருகிறது. 25-ந் தேதி காலை 11.55 மணிக்கு தொடங்கி 26-ந் தேதி காலை 11.26 மணி வரை அமாவாசை திதி உள்ளது. இந்த அமாவாசை திதி நேரத்தில் தான் சூரிய கிரகணம் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1900 முதல் 2019-ம் ஆண்டு வரையான 120 ஆண்டு கால இடைவெளியில், மேஷம், ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசிகளில் 3 முறை 6 கிரகங்களின் கூட்டுச் சேர்க்கை நடைபெற்றி ருக்கிறது. அதே போல் துலாம் ராசியில் இரண்டு முறையும், சிம்மம், கும்பம் ஆகிய ராசிகளில் தலா ஒரு முறையும் 6 கிரக கூட்டுச் சேர்க்கை ஏற்பட்டிருக்கிறது.

17-ம் நூற்றாண்டு முதல் 21-ம் நூற்றாண்டு வரையிலான ஆய்வுப்படி, ஆறு கிரகங்களின் கூட்டுச் சேர்க்கை தனுசு ராசியில் மட்டும் 9 முறை ஏற்பட்டிருக்கிறது. இதில் 7 முறை கூட்டுக் கிரக சேர்க்கை நேரத்தில் அமாவாசை திதி வந்துள்ளது.

1723-ம் ஆண்டு முதல் 1963-ம் ஆண்டு வரை 8 முறை தனுசுராசியில் 6 கிரக சேர்க்கை ஏற்பட்ட சமயத்தில், பெரிய இயற்கை பேரிடர்கள் எதுவும் நிகழவில்லை. தற்போது 9-வது முறையாக தனுசு ராசியில் 6 கிரக சேர்க்கை நடைபெற உள்ளது. கடந்த காலங்களில் இதுபோல், தனுசு ராசியில் கிரகச் சேர்க்கை வந்தபோது, எந்தவித பாதிப்புகளும் இல்லை என்றாலும், இந்த முறை கிரகச் சேர்க்கை நடைபெறும் காலகட்டத்தில் சூரிய கிரகணமும் ஏற்படுகிறது. அதுவும் தமிழ்நாட்டில் இந்த சூரிய கிரகணம் நன்றாக தெரியும். எனவே அரசியல் தலைவர்களுக்கோ, அல்லது மிகப்பெரும் ஆளுமை கொண்டவர் களுக்கோ சிறிய விபத்து ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மற்றபடி எந்த பெரிய நிகழ்வும், இந்த கூட்டுக்கிரக சேர்க்கையால் நடைபெற வாய்ப்பில்லை என்றே சொல்லலாம்.

இருப்பினும் 6 கிரக கூட்டுச் சேர்க்கை நடைபெறும் மூன்று நாட்களும், குலதெய்வ வழிபாடு செய்து வந்தால், வருகின்ற சிறிய பிரச்சினைகளில் இருந்தும் நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

தனுசு ராசியில் இதுவரை..

5.1.1723 முதல் 10.1.1723 வரை
(சூரியன், புதன், செவ்வாய், குரு, சனி, கேது)

27.12.1723 முதல் 28.12.1723 வரை
(சூரியன், சந்திரன், புதன், சுக்ரன், குரு, சனி)

19.12.1758 முதல் 30.12.1758 வரை
(சூரியன், புதன், சுக்ரன், செவ்வாய், குரு, கேது)

2.1.1783 முதல் 3.1.1783 வரை
(சூரியன், சந்திரன், புதன், சுக்ரன், குரு, சனி)

8.1.1834 முதல் 10.1.1834 வரை
(சூரியன், சந்திரன், புதன், செவ்வாய், சுக்ரன், கேது)

10.1.1842 முதல் 11.1.1842 வரை
(சூரியன், சந்திரன், புதன், சுக்ரன், குரு, சனி)

22.12.1870 முதல் 23.12.1870 வரை
(சூரியன், சந்திரன், புதன், சுக்ரன், சனி, கேது)

17.12.1963 முதல் 18.12.1963 வரை
(சூரியன், சந்திரன், புதன், செவ்வாய், சுக்ரன், கேது)


பேராசிரியர், ஸ்வாமி ஹரிஹர ஷர்மா

Next Story