ஹயக்ரீவா் கோவில்


ஹயக்ரீவா் கோவில்
x
தினத்தந்தி 23 Jan 2020 11:23 AM GMT (Updated: 23 Jan 2020 11:23 AM GMT)

திருவரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில், பெரிய பிராட்டியின் சன்னிதிக்கு எதிரே உள்ள தேசிகர் சன்னிதியிலும், உத்திர வீதியில் உள்ள தேசிகர் சன்னிதியிலும் ஹயக்ரீவ மூர்த்தி அருள்பாலிக்கிறார்.

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு சவுந்திரராஜப் பெருமாள் கோவிலில் ஹயக்ரீவரும், சரஸ்வதியும் அடுத்தடுத்து அமர்ந்து அருள்பாலிக்கின்றனா்.

சென்னை காட்டாங்குளத்தூர் அருகே செட்டி புண்ணியம் தேவநாத சுவாமி கோவிலில் ஹயக்ரீவர் வீற்றிருக்கிறார்.

கடலூர் அருகே உள்ள திருவஹீந்திரபுரத்திலும், சென்னை நங்கநல்லூரிலும் கூட புகழ்பெற்ற ஹயக்ரீவர் ஆலயம் உள்ளது.

துளசி மகிமை

துளசி என்றால் ‘ஒப்பில்லாதது’ என்று பொருள். மகாவிஷ்ணு, துளசி மாலைகளை மார்பிலும், கழுத்திலும் அணிந்திருப்பார். அதன் காரணமாகத்தான் அவருக்கு ‘வனமாலி’ என்ற பெயா் வந்தது. துளசிச் செடி இருக்கும் வீடுகளில் மரணம் அடைபவர்கள், கோ லோகத்தை அடைவதாக ஐதீகம். துளசி மாலை அணிபவர்களுக்கு அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். கருந்துளசி எனப்படும் கிருஷ்ண துளசிதான், பெருமாளுக்கு மிகவும் உகந்தது. துளசியை நகத்தால் கிள்ளாமல், உருவி எடுக்காமல், கட்டை விரலையும், ஆள்காட்டி விரலையும் பயன்படுத்தி எடுக்க வேண்டும்.

வித்தியாசமான சிற்பம்

நாமக்கல் மாவட்டம் மோரூா் என்ற இடத்தில் நல்லப்புள்ளி அம்மன் கோவில் இருக்கிறது. இங்கு தன்னுடைய தலையை தானே அறுக்கும் நிலையில் ஒரு சிற்பம் காணப்படுகிறது. இதனை ‘நவகண்ட சிற்பம்’ என்று அழைக்கிறார்கள். நெடுநாளாக குழந்தை இல்லாத நல்லையன் என்பவர், யாகம் ஒன்றை செய்தார். அந்த யாகத்தில் குழந்தை வரம் வேண்டி தன்னுடைய தலையை தானே பலியிட்டதாக கோவில் வரலாறு சொல்கிறது. அந்த நல்லையன் சிலைதான், இந்த நவகண்ட சிற்பம்.

அவ்வையார் ஆலயங்கள்

* கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல், நெல்லிமடம், முல்லைவாடி, குரத்தியறை, ஆதிச்சபுரம், தோவாளை ஆகிய பகுதிகளில் அவ்வையாருக்கு ஆலயங்கள் உள்ளன.

* தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூா், தாழக்குடி, பூதப்பாண்டி, நாவல்காடு, இடும்பாவனம், துளசியாபட்டினம், திருவையாறு, குத்தாலம் ஆகிய இடங்களிலும் அவ்வையார் கோவில்கள் காணப்படுகின்றன.

* சேலம் மாவட்டத்தில் ஆலத்தூர், கல்வராயன்மலை, கராங்காடு, உத்தமசோழபுரம், பசுபதிபாளையம் ஆகிய இடங்களிலும் அவ்வையார் ஆலயங்கள் இருக்கின்றன.

மேற்கண்ட அனைத்து ஊர்களிலும் அவ்வையார் தங்கி இருந்து அற்புதங்கள் நிகழ்த்தியதற்கான சான்றுகள், கல்வெட்டு, மலைகுகைள், சுவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.

கலச தத்துவம்

கலசம் (சொம்பு)- சரீரம். கலசத்தின் மேல் சுற்றியிருக்கும் நூல்- நாடி நரம்புகள். கலசத்தின் உள்ளே இருக்கும் நீர் (தீர்த்தம்) - ரத்தம். கலசத்தின் உச்சியில் வைக்கப்படும் தேங்காய் - தலை. கலச தேங்காயை சுற்றி வைக்கப்படும் மாவிலை - சுவாசம். கலசத்தின் அடியில் இருக்கும் அரிசி மற்றும் வாழை இலை - மூலாதாரம்.

புராதனக் கோவில்

திருப்பதியில் உள்ள காலத்தீர்த்தத்தில் புராதன பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இதை பிரதிஷ்டை செய்தவர், கபில முனிவர். அத்ரி முதலான முனிவர்கள், அதிகாலை நேரத்தில் இங்குள்ள குகை வழியாக திருமலைக்குச் சென்று சுப்ரபாதம் பாடி, திருமாலுக்கு சேவை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

தொகுப்பு:- மல்லிகா அன்பழகன்

Next Story