தெசலோனிக்கர் இரண்டாம் நூல்
கி.மு. 358- க்கும் கி.மு. 297- க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த ஒரு மன்னர் கேசன்டோஸ். இவருடைய மனைவியின் பெயர் தெசலோனிக்கா. இவர் மாவீரர் அலெக்சாண்டருடைய சகோதரி.
தனது மனைவியைக் கவுரவிக்க விரும்பிய மன்னன் ஒரு செழிப்பான நகருக்கு ‘தெசலோனிக்கா’ என்று பெயரிட்டார். தனது இரண்டாம் நற்செய்திப் பயணத்தில் தெசலோனிக்க வந்த பவுல் அங்கே தங்கியிருந்தது வெறும் மூன்று வாரங்கள். எதிர்ப்புகளின் காரணமாக அதன்பின் அங்கிருந்து விலகிச் செல்ல நேரிட்டது.
பெரேயா, பிலிப்பி போன்ற இடங்களில் பயணித்து, கொரிந்து நகரில் வந்து தஞ்சமடைந்தார் பவுல். தான் விதைத்த நற்செய்தி விதை தெசலோனிக்க நகரில் முளை விட ஆரம்பித்திருப்பதைக் கேள்விப்பட்டு மகிழ்ந்தார்.
அவர்களுடைய விசுவாசத்தைப் பாராட்டவும், அவர்களுடைய தவறான சிந்தனைகளைத் திருத்தவும் இரண்டு கடிதங்களை எழுதினார். அவை தான் தெசலோனிக்கர் முதல் நூல் மற்றும் இரண்டாவது நூல்.
பவுல் ‘திருச்சபைக்கு’ எழுதிய கடிதங்களிலேயே சிறிய கடிதம் இந்த தெசலோனிகர் இரண்டாம் நூல் தான். முதல் கடிதம் எழுதப்பட்ட சில மாத இடைவெளியில் இரண்டாவது கடிதமும் எழுதப்பட்டது என்பதும், கி.பி. 52 தான் இதன் காலம் என்பதும் பொதுவான நம்பிக்கை.
இதைப் பவுல் நேரடியாக எழுதவில்லை, பவுலின் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்ட சீடர் ஒருவர் அவரது பெயரில் எழுதினார். இது அன்றைய மரபுப்படி அங்கீகரிக்கப்பட்ட வழக்கமே. இதன் காலம் 52-க்கும் 100-க்கும் இடைப்பட்ட ஏதோ ஒரு காலம். இது தான் காலம் என அறுதியிட்டுச் சொல்வது கடினம் எனும் சிந்தனையும் விவிலிய ஆய்வாளர்களிடம் உண்டு.
முதல் நூலைப் போலவே இந்த நூலும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்துப் பேசுகிறது. இயேசுவின் இரண்டாம் வருகை குறித்த போதனை விசுவாசிகளிடையே பெரிய குழப்பத்தை உருவாக்கியது. இரண்டாம் வருகை உடனே நடக்கும் என சிலரும், ஏற்கனவே நடந்து விட்டது என சிலரும், இறந்து போனவர்களுக்கு இரண்டாம் வருகையில் பயனில்லை என சிலரும், இனிமேல் உழைக்காமல் சும்மா இருக்கலாம் என வேறு சிலரும் ஆளாளுக்கு ஒரு சித்தாந்தத்துடன் வாழத் துவங்கினர்.
அவர்களுடைய குழப்பங்களை எல்லாம், பவுல் இந்த நூலில் தெளிவுபடுத்துகிறார். இரண்டாம் வருகைக்கு முன் “அந்தி கிறிஸ்து” எனும் நெறிகெட்டவனின் தோற்றத்தையும், அவன் எப்படி இருப்பான் என்பதைப்பற்றியும் இந்த நூல் பேசுகிறது.
இரண்டாம் வருகைக்கு முன் நிகழப்போகும் விஷயங்களைப் பற்றி இந்த நூல் மிகத் தெளிவாகப் பேசுவதால் பல ஆன்மிகக் கோட்பாடுகளுக்கு இந்த நூலே அடிப்படை ஆதாரமாய் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதைத்தவிர “எதிர்கிறிஸ்து” பற்றி அதிகம் பேசும் நூல் திருவெளிப்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.
“இறைவாக்கினர் தானியேல் உரைத்த, ‘நடுங்கவைக்கும் தீட்டு’ திருவிடத்தில் நிற்பதை நீங்கள் காண்பீர்கள். அப்பொழுது இதைப்படிப்பவர் புரிந்துகொள்ளட்டும்” (மத் 24:15) என இயேசு இதை பூடகமாய்க் குறிப்பிட்டார் என்பது கவனிக்கத்தக்கது. தெசலோனிக்கர் இரண்டு நூல்களிலும் இறைமகன் வருகையைக் குறித்த சில மறைமுக விளக்கங்களும் புதைந்திருக்கின்றன. ஒன்றில் இயேசு திருச்சபைக்காக வருவதையும், இன்னொன்று திருச்சபையோடு வருவதையும் பேசுகிறது.
இறைமக்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதை பவுல் விளக்குகிறார். வாழ்க்கையில் நாம் தேர்ந் தெடுக்க இரண்டே இரண்டு வழிகள் தான் உண்டு. ஒன்று நிலையான வாழ்வு இறைவனோடு. அல்லது நிலையான நரகம் சாத்தானோடு என்கிறார் பவுல்.
கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும், அதற்கு முன் மற்றும் அதற்குப் பின் வரும் நிகழ்வுகளை முழுமையாய்ப் புரிந்து கொள்ள தெசலோனிக்க நூலையும், திருவெளிப்பாடு நூலையும் இணைத்து பார்த்தாலே போதும்.
தெசலோனிக்கர் இரண்டாம் நூலில் இரண்டு விஷயங்களை பவுல் மையப்படுத்துகிறார், ஒன்று விசுவாசத்தைக் காத்துக்கொள்வது. அல்லது நம்பிக்கையை வளர்த்துக்கொள்வது. இன்னொன்று புனிதமான வாழ்க்கை வாழ்வது. இந்த இரண்டு விஷயங்களும் இயேசுவின் இரண்டாம் வருகைக்கு முக்கியம் என அவர் வலியுறுத்துகிறார்.
உழைக்காதவன் உண்ணலாகாது, எனும் வாழ்வியல் சித்தாந்தத்தையும் பவுல் குறிப்பிடுகிறார். ஆன்மிகம் எனும் போர்வையில் சோம்பேறித்தனத்தை கூட்டு சேர்க்கக் கூடாது என்பதை பவுலின் வார்த்தைகளில் உணரலாம். அவர் தனது வாழ்வில், கூடாரத் தொழிலைச் செய்து கொண்டே நற்செய்திப் பணியையும் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது இரண்டு கடிதங்களிலுமே பவுல் ஜெபத்தை மையப்படுத்துவதையும் காணலாம். தெசலோனிக்க மக்களுக்கான தனது ெஜபத்தைப் பற்றிக் குறிப்பிடும் பவுல், தெசலோனிக்க மக்கள் தனக்காகவும் ஜெபிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறார்.
தொடர்ந்து கிறிஸ்துவோடு, இறை விசுவாசத்தில் நடக்கவேண்டும். இறைவனின் வருகைக்கு தூய இதயத்தோடு காத்திருக்க வேண்டும். இந்த இரண்டு செய்திகளும் தெசலோனிக்க நூல் மூலமாக நமக்குக் கிடைக்கின்றன.
(தொடரும்)
Related Tags :
Next Story