‘இறையச்சம் என்னும் ஆடையே சிறந்தது’
இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘மறைவிடங்களை மறைத்து மானம் காப்பது’ குறித்த தகவல்களை காண்போம்.
மனித உடலில் அந்தரங்கமான சில பகுதிகள் உண்டு. வெளிரங்கமான சில பகுதிகள் உண்டு. அந்தரங்கமான விஷயங்களை நாம் எப்படி வெளிப்படுத்த மாட்டோமோ அவ்வாறே அந்தரங்கமான பகுதிகளையும் நாம் வெளிப்படுத்தக்கூடாது.
அவைகளை மறைத்து வைப்பதுதான் மானம். அவைகளை வெளிப்படுத்துவது அவமானம். மானம் காப்பதும் இறைநம்பிக்கையின் ஒரு அங்கமாகவே சேர்க்கப்படுகிறது. மானத்தை காக்கும் ஒரு கேடயம் தான் வெட்கம். மானத்தை காக்கும் ஒரு பொக்கிஷம் தான் ஆடை.
வெட்கம் இறைநம்பிக்கையின் ஒரு கிளை
வெட்கத்தன்மைதான் மறைவிடங்களை மறைப்பதற்கு தூண்டுகோலாக அமைகிறது. மறைவிடங்களை வெளிப்படுத்துவது வெட்கமற்ற தன்மையின் வெளிப்பாடு. மானம் காப்பதும், மறைவிடங்களை மறைப்பதும் வெட்கத்தின் அடையாளம்.
‘நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம், புகாரி)
‘அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர், தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்த போது அவ்வழியே இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, ‘அவரை(க் கண்டிக்காதீர்கள்) விட்டுவிடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்’ என நபி (ஸல்) உரைத்தார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)
ஒருவர் வெட்கப்படுவது நல்ல செயல்தான். வெட்கத்தை ஆடையாக அணிந்தவரிடம் மக்கள் குறை காணவோ, குறை கூறவோ முடியாது. அது மனித வாழ்வின் உயிர்மூச்சு போன்றது. வெட்கமுள்ளவன் நல்ல மனிதனாக வாழ்வான். வெட்கம் கெட்டவன் மிருகமாகவும், பாவியாகவும் மாறிவிடுகின்றான்.
வெட்கத்தால் நன்மை மட்டுமே விளையும். வெட்கம் தவறிவிட்டால், கண்டதும் செய்ய நேரிடும். வெட்கம் ஒரு அருங்குணம். அது நன்மையைத் தூண்டும். வெட்கமின்மை ஒரு துர்குணம். அது தீமையைத் தூண்டும்.
‘வெட்கம் இறைநம்பிக்கையைச் சார்ந்தது. இறைநம்பிக்கை சொர்க்கத்தை நல்கும். வெட்கமற்ற தன்மை முரட்டு சுபாவமாகும். முரட்டு சுபாவம் நரகத்தை நல்கும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: அஹ்மது)
‘ஒவ்வொரு மார்க்கத்திலும் ஒரு சிறந்த நற்குணம் உண்டு. இஸ்லாத்தின் சிறந்த குணம் வெட்கம் ஆகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: இப்னுமாஜா)
‘வெட்கமும், இறைநம்பிக்கையும் இணைபிரியாத இருஅம்சங்கள். அவ்விரண்டில் ஒன்று விலகினால் மற்றொன்றும் விலகிவிடும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: பைஹகீ)
மறைவிடங்களை வெளிப்படுத்துவது இறைநம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. மறைவிடங்களை மறைப்பது இறைநம்பிக்கையைச் சார்ந்தது. இறைநம்பிக்கையாளர்கள் தங்களது வெட்கத்தலங்களை வெளிப்படுத்தமாட்டார்கள். மறைத்து வாழ்வார்கள். வெட்கத்தலங்களை வெளிப்படுத்துவது மானக்கேடான காரியம் என்று இறைவன் திருக்குர்ஆனில் இவ்வாறு பதிவு செய்கின்றான்.
‘(நம்பிக்கையில்லாத) அவர்கள் மானக்கேடான காரியத்தைச் செய்யும்போது ‘எங்கள் முன்னோர்களை இப்படித்தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளையிட்டான்’ என்று கூறுகின்றனர். அல்லாஹ் வெட்கக்கேடானதை ஏவமாட்டான். நீங்கள் அறியாதவற்றை இறைவனின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?’ என்று கேட்பீராக’. (திருக்குர்ஆன் 7:28)
ஆடை என்பது இறைவன் மனிதகுலத்திற்கு வழங்கிய மகத்தான ஒரு அருட்கொடை. மனித இனம் தவிர வேறெந்த இனமும் ஆடை அணிவதில்லை. நாம் அணியும் ஆடை நமது மறைவிடங்களை மறைத்து, மானம் காக்க வேண்டும். மானம் பறிபோகக்கூடாது.
‘ஆதமுடைய மக்களே, உங்கள் வெட்கத்தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். இறையச்சம் எனும் ஆடையே சிறந்தது’. (திருக்குர்ஆன் 7:26)
‘அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்’. (திருக்குர்ஆன் 2:187)
ஆடை எவ்வாறு மறைவிடங்களை மறைத்து மானத்தை காக்கிறதோ, அவ்வாறே கணவன் தமது மனைவியின் மானம், மரியாதையையும்; மனைவி தமது கணவனின் மானம், மரியாதையையும் பேணி பாதுகாக்க வேண்டும்.
இஸ்லாமியர்களை பொறுத்த அளவில் ஆண்களாக இருந்தால் தொப்புளுக்கும், முழங்காலுக்கும் இடையிலுள்ள மேனியை மறைக்க வேண்டும். இது அவர்கள் மறைக்க வேண்டிய அவசியமான பகுதி. பெண்களாக இருந்தால் முகம், மற்றும் மணிக்கட்டு வரையுள்ள இரு முன் கைகளையும் தவிரவுள்ள மற்றவை மறைக்கப்பட வேண்டிய பகுதிகளாகும்.
இது குறித்த விபரங்களை நபிமொழிகளிலும், திருக்குர்ஆன் வசனங்களிலும் தெரிந்து கொள்வோம்.
‘நபி (ஸல்) அவர்கள் அஸ்மா (ரலி) அவர்களைப் பார்த்து ‘அஸ்மாவே, ஒரு பெண் பருவ வயதை அடைந்துவிட்டால், அவளிடமிருந்து இன்ன இன்ன பகுதியைத் தவிர மற்றவை காண்பதற்கு உடன்பாடு கிடையாது என நபி (ஸல்) கூறிவிட்டு, தமது முகத்தையும், தமது இரு மணிக்கட்டையும் சமிஞ்சை செய்தார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: அபூதாவூத்)
‘(நபியே) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக. இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை இறைவன் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக. அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களின் தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள் தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைந்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே, அனைவரும் இறைவனை நோக்கித் திரும்புங்கள். இதனால் வெற்றியடைவீர்கள்’. (திருக்குர்ஆன் 24:30-31)
‘நம்பிக்கை கொண்டோரே, உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும், அதிகாலை தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா (இரவின்) தொழுகைக்குப் பிறகும் ஆகிய மூன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க (நேர)ங்கள். இவையல்லாத மற்ற நேரங்களில் (வருவது) அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே இறைவன் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.’
உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்துவிட்டால் அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும்.
திருமணத்தை நினைத்துப் பார்க்காத முதிய வயதுப்பெண்கள் அலங்காரம் செய்து கொள்ளாது, தமது மேலாடைகளைக் களைந்திருப்பதில் குற்றமில்லை. அவர்கள் பேணிக் கொள்வது அவர்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்’. (திருக்குர்ஆன் 24:58-60)
இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் தமது வெட்கத்தலங்களை மறைப்பது ஒழுக்கம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. இறைநம்பிக்கை சார்ந்த விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. இதுவும் இறைநம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு களமாக அமைந்துள்ளது. உண்மையான வெற்றி இதில்தான் உள்ளது.
‘இறைநம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர்.’ (திருக்குர்ஆன் 23:1)
‘அவர்கள் எத்தகையோரென்றால், தங்களுடைய வெட்கத்தலங்களைக் காத்துக்கொள்வார்கள்’. (திருக்குர்ஆன் 23:5)
(நம்பிக்கை தொடரும்)
Related Tags :
Next Story