அருட்சேவை அருளும் திருநாங்கூர் கருடசேவை


அருட்சேவை அருளும் திருநாங்கூர் கருடசேவை
x
தினத்தந்தி 24 Jan 2020 4:24 PM GMT (Updated: 24 Jan 2020 4:24 PM GMT)

25-1-2020 126-வது கருட சேவை. காவிரி ஆற்றங்கரையின் கடைப்பகுதியில் அமைந்துள்ள திருநாங்கூர், பல சிறப்புக்களைப் பெற்ற ஊராகும்.

 புராண இதிகாசங்களில் போற்றப்படும் மதங்கர், தொம்யர், வியாக்ரபாதர், உதங்கர் போன்றவர்கள் ஆசிரமங்கள் அமைத்து தங்கியிருந்ததும், மகாபாரதத்தில் பரிஷித் மகாராஜாவுக்கு காலனாகும் வீரியம்பெற்ற தட்சகன் என்னும் நாகம் ஆட்சி செய்ததுமான ‘நாகபுரி’யே, தற்போது ‘திருநாங்கூர்’ என்ற பெயருடன் திகழ்கிறது.

கரிகால் சோழன், பெண் எடுத்த பெருமைக்குரியது திருநாங்கூர். இந்த ஊரிலும், இதனைச்சுற்றிய 2 கிலோமீட்டர் தொலைவுக்குள்ளும் 108 வைணவ திவ்ய தேசங்களுள் 11 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. அதேபோல இதற்கு சமமான பாடல் பெற்ற 11 சிவதலங்களும் இங்கே இருக்கின்றன.

தனது தந்தையான தட்சனின் யாகத்துக்குச் சென்ற பார்வதி தேவியை, தட்சன் அவமானப்படுத்தினான். அதைக் கேள்வியுற்றுக் கடுஞ்சினம் கொண்ட சிவன், சீர்காழிக்கு அருகிலுள்ள உபயகாவிரி எனும் இடத்தில் ருத்திர தாண்டவம் ஆடினார். அவரது ரோமம் விழுந்த இடங்களில் இருந்து ருத்திரர்கள் தோன்றி ஆடத்தொடங்கினார்கள். சிவபெருமானின் கோபத்தை அடக்க வழிதெரியாது தவித்த தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர்.

திருமால், திருநாங்கூரில் 11 வடிவங்களோடு சிவபெருமான் முன்பாகத் தோன்றி, அவரை சாந்தப்படுத்தி கோபத்தைத் தணித்தார். அதன்படி திருமணிமாடக் கோவிலில் ஸ்ரீநாராயணப் பெருமாளாகவும், திருஅரிமேய விண்ணகரத்தில் ஸ்ரீகுடமாடுகூத்தராகவும், திருச்செம்பொன்செய் கோவிலில் ஸ்ரீசெம்பொன் அரங்கராகவும், திருத்தெற்றியம்பலத்தில் ஸ்ரீசெங்கண்மாலாகவும், திருவெள்ளக்குளத்தில் ஸ்ரீஅண்ணன் பெருமாளாகவும், திருவண்புருடோத்தமத்தில் ஸ்ரீபுருஷோத்தமப் பெருமாளாகவும், திருமணிக்கூடத்தில் ஸ்ரீவரதராஜப் பெருமாளாகவும், திருவைகுந்த விண்ணகரத்தில் ஸ்ரீவைகுந்த நாதப் பெருமாளாகவும், திருத்தேவனார்த்தொகையில் ஸ்ரீமாதவப் பெருமாளாகவும், திருப்பார்த்தன்பள்ளியில் ஸ்ரீதாமரையாள் கேள்வனாகவும், திருக்காவளம்பாடியில் ஸ்ரீகோபால கிருஷ்ணனாகவும் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

சோழவள நாட்டில் உள்ள திருக்குறையலூரில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்தவர் திருமங்கையாழ்வார். இவர் பிறக்கும் பொழுது கரியநிறம் கொண்டவராக இருந்ததால், அவருக்கு ‘நீலன்’ என்று பெற்றவர்கள் பெயரிட்டனர். சோழமன்னர், நீலனின் வீரத்தைப் போற்றி, திருமங்கை (மங்கைமடம்) குறுநிலத்தின் மன்னனாக்கினார். திருவெள்ளக்கோயிலைச் சேர்ந்த குமுதவல்லி என்பவரை நீலன் விரும்பினார்.

அந்த அம்மையார், ஒரு வருடம் 1008 வைணவர்களுக்கு அமுது செய்வித்தால் மனைவியாக வர சம்மதம் என்று தெரிவித்தார். அதன்படி அடியார்களுக்கு அமுது செய்விக்க நாட்டின் வரிப்பணத்தை செலவழித்தார். எனவே சோழமன்னருக்கு வரி செலுத்த முடியாமல் போனது. சோழ அரசர் படையுடன் வந்து நீலனை சிறைப்பிடித்தார்.

காஞ்சி வரதராஜப் பெருமாள், நீலனின் கனவில் தோன்றி, பணம் தருவதாகச் சொல்லி மறைந்தார். பெருமாள் கொடுத்த பணத்தில் வரி செலுத்தியதை அறிந்த சோழமன்னர், பணத்தைத் நீலனிடம் திரும்பக் கொடுத்தார். அதையும் அமுது செய்விக்க பயன்படுத்தியவர், ஒருகட்டத்தில் பணமின்றி தவித்தார். அப்பொழுதுதான் கொள்ளை அடித்தாவது அடியார்களின் பசி போக்க வேண்டும் என்னும் எண்ணம் நீலனுக்கு ஏற்பட்டது.

அதன்படி பலரிடம் கொள்ளை அடித்து (வேடுபறி), அடியார்களுக்கு அமுது செய்வித்து வந்தார். ஒருமுறை பெருமாள் மணக்கோலத்தில் வர, நீலன் அவரிடமும் பொருள்களைப் பறித்தார். மணமகன் காலில் உள்ள நகையைக் கழற்ற இயலாமல் பல்லால் கடிக்க, திருமாலால் ‘கலியன்’ (பலம்மிக்கவன்) என அழைக்கப்பட்டார். ஆயினும் அவரிடம் கவர்ந்த பொருள்களை எடுத்துச் செல்ல முடியவில்லை. அதற்கான காரணத்தை அந்தணர் வடிவில் வந்த பெருமாளிடம் நீலன் கேட்டார். அப்போது “ஓம் நமோ நாராயணாய” என்னும் மந்திரத்தை அவருக்கு இறைவன் உபதேசித்தார். அதன் மூலம் திவ்யப்பிரபந்தம் அருளும் பேறுபேற்றார்.

திருநாங்கூர் கருடசேவை

திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டிவரும் பகல்பத்து - ராப்பத்து உற்வசவங்களை நடத்தி வைக்கும் திருமங்கையாழ்வார், அது நிறைவடைந்த பின், தை மாத அமாவாசையன்று பிறந்த ஊரான திருக்குறையலூருக்குச் சென்று திருநாங்கூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள திவ்யதேசங்களில் கோவில் கொண்டிருக்கும் 11 பெருமாள்களையும் இனிய தமிழ்ப் பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படி அவர் பாடும் வேளையில், 11 பெருமாள்களும் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி, ஆழ்வாரின் பாடல்களை ஏற்றுச் செல்வார்கள். திருமங்கையாழ்வார் அருளிய தமிழ்ப் பாசுரங்கள் யாவும் வேதத்துக்கு நிகரானவை என்பதால், வேத ஸ்வரூபியாக இருக்கும் கருடனின் மேல் வந்து காட்சி தந்து பாடல் பெற்றுக் கொள்கிறார் பெருமாள். ஆழ்வாரின் பெரிய திருமொழியில் பதினோரு சதகங்கள் உள்ளன. அந்தப் பதினோரு சதகங்களுக்கு இணையாகத் திருமாலும் பதினோரு கருடன்கள் மேல் ஆழ்வாருக்குக் காட்சி அளிக்கிறார்.

அவரது பாடல் நிறைவுற்றதும் ஸ்ரீமணவாளமாமுனிகள் திருமங்கையாழ்வாரின் பக்தியையும், வடிவழகையும் புகழ்ந்து மங்களாசாசனம் செய்வார். அதனைத்தொடர்ந்து தங்ககருட வாகனத்தில் எழுந்தருளியுள்ள 11 பெருமாள்களும், குமுதவல்லி உடனுறை திருமங்கையாழ்வார் அன்ன வாகனத்திலும், ஸ்ரீமணவாளமாமுனிகளுடன் திருநாங்கூர் திவ்யதேசத்தை வலம் வருவர். திருமங்கையாழ்வார் காலத்தில் நடைபெற்று பின்னர் காலப்போக்கில் நின்றுபோன இந்த காண்பதற்கரிய நிகழ்ச்சியை, இக்கால பெரியோர்கள் நம் கண்முன்னே நிகழ்த்திக் காட்டுவதுதான் இன்றைய திருநாங்கூர் 11 கருடசேவை.

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள திருநாங்கூர் என்னும் திவ்யதேசத்தில் இந்த கோலாகலவிழா ஒவ்வொரு ஆண்டும் தை மாத அமாவாசைக்கு அடுத்தநாள் நடைபெறுகிறது. திருநாங்கூர் 11 கருட சேவை உற்சவம், மூன்று நாள் உற்சவமாக நடக்கிறது. முதல்நாள் தை அமாவாசை அன்று திருமங்கை ஆழ்வாரின் மஞ்சள் குளி உற்சவம், இரண்டாம் நாள் 11 கருடசேவை, மூன்றாம் நாள் 11 பெருமாள்களும், ஆழ்வாரும் தத்தம் திருக்கோவில் களுக்குத் திரும்பும் நிகழ்ச்சி நடைபெறும்.

- நெய்வாசல் நெடுஞ்செழியன்

கருட சேவை உற்சவங்கள்

கோவில்களில் நடைபெறும் விழாக்கள் அல்லது உற்சவங்களை, இருவிதமாக வகைப்படுத்தலாம். முதலாவது புராண வரலாற்றின்படியானது. மற்றொன்று ஐதீகம் அல்லது நிகழ்வின் அடிப்படையிலானது. இதில் இரண்டாவது வகையைச் சேர்ந்த பிரசித்திப் பெற்ற உற்சவங்களில் ஒன்றே கருடசேவை. பெருமாள் தனது வாகனமான கருடன் மீதேறி அனைவருக்கும் காட்சிதந்து அருள்பாலிப்பதையே ‘கருட சேவை’ என்கிறோம். தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் 24 பெருமாள்கள் ஒன்றுசேரும் கருடசேவை, அட்சயதிருதியை அன்று கும்பகோணத்தில் 12 பெருமாள்கள் ஒன்றுசேரும் கருடசேவை, திருநெல்வேலிக்கு அருகே ஆழ்வார்திருநகரியில் 9 பெருமாள்கள் ஒன்றுசேரும் கருடசேவை, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையிலுள்ள கூழமந்தலில் 5 பெருமாள்கள் ஒன்றுசேரும் கருடசேவை, மற்றும் நாச்சியார்கோயில் என தமிழ்நாட்டில் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு காலகட்டங்களில் பல கருடசேவை உற்சவங்கள் நடைபெறுகின்றன. இவைதவிர திருப்பதி-திருமலையிலும் கருடசேவை உற்சவம் நடத்தபடுகிறது. இவைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்றது, திருநாங்கூர் கருடசேவை.

திருமங்கையாழ்வாாின் பாசுரங்கள்   

பன்னிரு ஆழ்வார்கள் அனைவரிலும், இளையவர் திருமங்கை ஆழ்வார். என்றாலும், நூற்றியெட்டு திவ்யதேசங்களில் வடக்கே பத்ரி, நேபாளம் முதல் தெற்கே திருக்குறுங்குடி வரையிலான 86 திவ்ய தேசங்களுக்கு மேல் நேரில் சென்று பெருமாளை சேவித்து பாடல்களை (மங்களாசாசனம்) பாடும் பேறுபெற்றார். திவ்யபிரபந்தத்தில், ‘பெரிய திருமொழி’ - 1084 பாசுரங்கள், ‘திருக்குறுந்தாண்டகம்’ - 20 பாசுரங்கள், ‘திருநெடுந்தாண்டகம்’ - 30 பாசுரங்கள், ‘திரு எழு கூற்றிருக்கை’ - 1 பாசுரம், ‘சிறிய திருமடல்’ - 40 பாசுரங்கள், ‘பெரிய திருமடல்’ - 78 பாசுரங்கள் என ஆறு பிரபந்தங்களை (1253 பாசுரங்களை) இவர் அருளியுள்ளார். இவற்றில் பல யாப்பு வடிவிலானது.

Next Story