நற்செயல்கள் மூலம் சலனத்தை ஏற்படுத்துங்கள்...


நற்செயல்கள் மூலம் சலனத்தை ஏற்படுத்துங்கள்...
x
தினத்தந்தி 31 Jan 2020 9:40 AM GMT (Updated: 31 Jan 2020 9:40 AM GMT)

மனித வாழ்வை மூன்று கால கட்டங்களாகப் பிரிக்கலாம். குழந்தைப் பருவமும் முதுமையும் இரண்டு கட்டங்கள்.

னித வாழ்வை மூன்று கால கட்டங்களாகப் பிரிக்கலாம். குழந்தைப் பருவமும் முதுமையும் இரண்டு கட்டங்கள். இளமைப் பருவம்தான் அதில் முக்கியமான மூன்றாவது கட்டம். இளைஞர்களில் அனேகமானோர் இதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள முற்படுவதில்லை.

இளமையின் முக்கியத்துவத்தைக் குறித்து இளமையிலேயே அறியாமல் இருப்பதுதான் தோல்வியின் நுழைவாயிலாக இருக்கிறது.

ஒரு சமூகத்தின் அல்லது ஒரு தேசத்தின் எழுச்சி அந்த தேசத்தின் இளைஞர்கள் கையில் தான் உள்ளது. இளைஞர்கள் முன்னேற்றம் சமூகத்திலும் தேசத்திலும் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துமோ அவ்வாறே இளைஞர்களின் வீழ்ச்சியும் சமூகத்திலும் தேசத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இளமைக்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போன்று வேறு எந்த மதமும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நாளை மறுமையில் ஐந்து கேள்விகளுக்கு பதில் அளிக்காதவரை ஓர் அடியானுடைய பாதம் நின்ற இடத்தை விட்டு ஓரடிகூட நகராது. அந்த ஐந்து கேள்விகளில் ஒன்று தான், “உன் இளமைப் பருவத்தை எவ்வாறு கழித்தாய்?” என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.

மற்றொருமுறை நபி (ஸல்) அவர்கள், “ஐந்து வருவதற்கு முன் ஐந்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு, “முதுமை வருமுன் இளமையைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டார்கள்.

‘இளமையைக் குறித்து மறுமையில் அல்லாஹ்வின் கேள்விக்கு பதிலளிக்காமல் பாதங்கள் நகராது’ என்று சொன்னால் அந்த இளமையின் மகத்துவத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இஸ்லாம் எனும் சூரியன் இந்த பூமிப்பந்தில் உதிக்கத் தொடங்கிய நாள்முதல் இந்த மார்க்கத்திற்காக இளைஞர்கள் செய்த தியாகங்கள் சாதாரணமானதல்ல.

நாயகம் (ஸல்) அவர்களுடன் இளைஞர்கள் சமூகப் பிரச்சினைகளில் பங்கு பெற்றுள்ளனர். போரில், ஆலோசனை சபையில் என்று இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் ஆற்றிய பங்களிப்பு மகத்தானதாகவே இருந்துள்ளது.

இஸ்லாமிய உலகிலாகட்டும் அல்லது இன்றைய நவீன உலகிலாகட்டும் வெற்றியாளர்களின் பட்டியலை எடுத்தால் இளைஞர்கள் இல்லாமல் எதுவும் இல்லை.

திருக்குர்ஆன் கூறும் வரலாறுகளில்கூட மாபெரும் புரட்சியாளர்களாக இளைஞர்கள்தான் முன்னிறுத்தப்படுகின்றனர். பெரும் புரட்சிகள் செய்த நபிமார்களில் அனேகமானவர்கள் இளமைத் துடிப்புடன் இருந்தபோதே அதனைச் செய்துள்ளனர் என்று திருக்குர்ஆன் சிறப்பாகக் கூறுகின்றது.

கல்வியில் இளைஞர்கள்

உயிரற்றுக் கிடந்த கல்விக்கு இஸ்லாம்தான் புத்துயிர் ஊட்டியது. ஆகவேதான் இஸ்லாத்தின் முதல் கட்டளையே “ஓதுவீராக” என்று தொடங்குகிறது. இளமைப் பருவத்தில் கல்வி கற்பதை இஸ்லாம் வலியுறுத்துவதுடன், தாமும் கற்று அதை பிறருக்கும் கற்றுக்கொடுக்குமாறு ஊக்கப்படுத்துகிறது.

நபி (ஸல்) கூறினார்கள்: “கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் கடமை”. மற்றொரு முறை, “எவரொருவர் கல்வியைத் தேடி பயணிக்கிறாரோ அவருடைய சுவனப் பாதையை இறைவன் எளிதாக்குகிறான்” என்று நற்செய்தி கூறியுள்ளார்கள்.

ஆனால் இன்றைய இஸ்லாமிய சமூகமோ கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளனர் என்பது வேதனையளிக்கும் செய்தி.

நமது நபித்தோழர்களும் முன்னோர்களும் கல்வியில் சிறந்தவர்களாகவும் அதைத் தேடி வெகு தூரம் பயணம் செய்யக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) இப்னு உமர் (ரலி) ஆகியோர் இளைஞர்களாகத்தான் இருந்தார்கள். ஆனால் நம்மைப் போன்ற சாதாரண இளைஞர்களாக இருக்கவில்லை. குர்ஆன் துறையில் சிறந்த அறிஞராக இப்னு அப்பாஸும், ஹதீஸ் துறையில் சிறந்த அறிஞராக இப்னு உமரும் இருந்தார்கள்.

அதேபோன்று ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் 18 நாட்களில் யூத மொழியை எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டார். முஆத் பின் ஜபல் (ரலி) 33 வயதில் ஏமன் நாட்டுக்குத் தூதுவராகவும், ஹலால்-ஹராமை பிரித்து விளக்கக் கூடியவராக இருந்தார்.

இன்றைய இளைஞர்கள்

அல்லாஹ் கூறுகிறான்: “(நபியே!) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும்”. (திருக்குர்ஆன் 24:30)

இறைக்கட்டளை இவ்வாறிருக்க இன்றைய இளைஞர்களின் செயல்பாடோ நேர்மாறாக உள்ளது. நண்பர்களுடன் சேர்ந்து அரட்டையடிப்பதையும் பெண்களை கேலி கிண்டல் செய்வதையும் ஒரு பகட்டாகவும், பொழுதுபோக்காகவும் நினைக்கிறார்கள். இவ்வாறு செய்யும் கேலியும் கிண்டலும்தான் இறுதியில் பாலியல் வன்கொடுமையில் சென்று முடிகிறது.

பாதையில் ஒரு பெண் செல்கின்றார் என்றால், அவர் யாரோ ஒருவருடைய தாய்.. யாரோ ஒருவருடைய மகள்.. யாரோ ஒருவருடைய சகோதரி.. என்ற சிந்தனை வரவேண்டும். இந்த சிந்தனை வந்துவிட்டால் பெண்களை யார்தான் மோசமாகப் பார்ப்பார்?.

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்ற அடிப்படையில் நமது தாயையும், நமது சகோதரியையும், நமது மனைவியையும் யாரோ ஒருவர் இப்படித்தானே இச்சையுடன் பார்ப்பார் என்று எண்ணம் எழத்தொடங்கிவிட்டாலே போதும், கண்ணியம் காப்பாற்றப்படும். முஸ்லிம் இளைஞர்களின் செயல்பாடுகள் அப்படித்தான் மாறவேண்டும்.

ஒரு முஸ்லிம் இளைஞன் தன் நற்குணத்தால், பிறருக்கு உதவும் குணத்தால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பான். பலவிதமான மனிதர்கள் வாழும் இந்தப் பன்மைச் சமூகத்தில் ஒரு முஸ்லிம் இளைஞன் தனித்து மிளிர வேண்டும்.

ஏரியில் இலை உதிர்ந்தால் தண்ணீரில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஏனெனில், சருகுகளால் சலனங்களை ஏற்படுத்த முடியாது. ஆனால், அதே ஏரியில் ஒரு கல் விழுந்தால்... ஏற்படும் அலைகளும், அதிர்வுகளும் ஏராளம் இல்லையா...? இந்த சமூகத்தில் நற்செயல்கள் மூலம் சலனத்தை ஏற்படுத்துபவனே உண்மையான முன்மாதிரி முஸ்லிம் இளைஞன். சமூகத்திற்குத் தேவை இதுபோன்ற இஸ்லாமிய இளைஞர்களே!

முஹம்மத் உக்காஷா, திருச்சி.

Next Story