பக்தனை பின்தொடர்ந்த இறைவன்


பக்தனை பின்தொடர்ந்த இறைவன்
x
தினத்தந்தி 4 Feb 2020 6:04 AM GMT (Updated: 4 Feb 2020 6:04 AM GMT)

திருமழிசை ஆழ்வார், இந்த ஆலயத்தில் உள்ள இறைவனுக்கு சேவை செய்து கொண்டிருந்தாா்.

அவருக்கு சிறந்த விஷ்ணு பக்தரும், கவிஞருமான கணிகண்ணர் உதவியாக இருந்தார். விஷ்ணுவின் மீது அதீத பக்தி கொண்ட வயதான பெண்மணி ஒருவர், கண்கண்ணரிடமும் அன்பு கொண்டிருந்தார். அவளது தளர்ந்த உடலைக் கண்டு மனம் இரங்கிய கணிகண்ணர், அந்த மூதாட்டியின் முதுமையை போக்கி அருளும்படி யதோக்தகாரியின் மீது சில பாசுரங்களைப் பாடினார். உத்தமமான தன்னுடைய பக்தனின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றினார், யதோக்தகாரி. ஆம்.. அந்த வயதான பெண்மணி, இளம்பெண்ணாக மாறினார்.

இதைக் கேள்விப்பட்ட அந்தப் பகுதியை ஆட்சி செய்த மன்னன், கணிகண்ணரை அழைத்து, இறைவனிடம் கூறி தன்னையும் இளமையாக மாற்றும்படி உத்தரவிட்டான். ஆனால் கணிகண்ணரோ, “கேட்டவர்களுகெல்லாம் இளமையளிக்க ஆண்டவன் அவ்வளவு எளிதில் சம்மதிப்பானா மன்னா? அவனை நினைத்து பூஜிப்பவருக்கும் கூட இளமை கிடைப்பது அரிதானதே..” என்று கூறினார்.

“நான் செய்வதைவிட அந்த வயதான பெண்மணி எந்த விதத்தில் உயர்வான வழிபாடு செய்கிறாள்?” என்று கேட்டான் மன்னன். அதற்கு கணிகண்ணர், “அவள் வயதானவள்தான். ஆனால், கடவுள் வழிபாட்டில் என்றென்றும் இளமையாகவே இருக்கிறாள். உள்ளம் இளமையாக இருந்தாலும், இறை வழிபாட்டிற்கு வெளியுடல் துன்பத்தை கொடுப்பதாக இருந்தது. ஆதலால் எந்நேரமும் இறைவனை பிரார்த்திக்க வேண்டி, அவளது உடலை இளமையாக்கினார் இறைவன். வெளி விவகாரங்களில் மனதை நிறுத்தியிருக்கும் உம்மைப் போன்ற மன்னர்களுக்கு, இளமை கிடைக்காது மன்னா” என்றார்.

இந்த பதில் மன்னனுக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் கணிகண்ணரை நாடு கடத்த உத்தரவிட்டார். திருமழிசை ஆழ்வார், தன்னுடைய சீடரை பிரிய மனம் இல்லாமல், அவருடனேயே செல்ல நினைத்தார். ஆனால் யதோக்த காரியை பிரிய நேரிடுமே என்று மனம் வருந்தியவர், பெருமாளைப் பார்த்து -

“கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி

மணிவண்ணா நீ கிடக்க வேண்டா - துணிவொன்றிச்

செந்நாப் புலவோன்யான் செல்கின்றேன் நீயுமுன்றன்

பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்”

-என்ற பாசுரத்தைப் பாடினார். உடனே திருமழிசையாழ்வாரும் கணிகண்ணரும் சென்ற வழியில், பெருமாளும் தன் பாம்புப் படுக்கையைச் சுற்றிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

இறைவன் சென்றதும், அந்த நகரமே இருள் சூழ்ந்தது. மக்கள் அனைவரும் ‘முழு சூரிய கிரகணம் வந்துவிட்டதோ’ என்று நினைத்து அச்சமடைந்தனர். அனைவரும் மன்னனிடம் சென்று முறையிட்டனர். அப்பொழுதுதான், பக்தர்களுடைய சக்தியை, காஞ்சி மன்னன் உணர்ந்தான்.

இறைவனின் அடியார்களைத் தேடி ஓடினான். அப்போது அவர்கள் இருவரும் பாலாற்றின் வடகரையில் உள்ள ஓரிடத்தில் தங்கியிருந்தனர். அந்த இடத்திற்கு ‘ஓரிரவிருக்கை’ என்று பெயர். அதுவே தற்போது ‘ஓரிக்கை’ என்று அழைக்கப்படுகிறது.

மன்னனின் வேண்டுகோளை ஏற்று, கணிகண்ணர் மன்னனை மன்னித்து திருமழிசை ஆழ்வாரைப் பார்க்க, அவரோ பெருமாளைப் பார்த்து-

“கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் கச்சி

மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் - துணிவொன்றிச்

செந்நாப் புலவோன்யான் செலவொழிந்தேன் நீயுமுன்றன்

பைந்நாகப் பாய்விரித்துக் கொள்” -என்று பாடுகிறார்.

பெருமாளும் ஆழ்வாரின் பக்திக்கு கட்டுப்பட்டு, மீண்டும் காஞ்சி மாநகர் திரும்பினார்.

இந்த நிகழ்வை தெரிவிக்கும் வகையில் இன்றளவும், தை மாத மக நட்சத்திரத்தில் உற்சவம் நடக்கிறது. அன்று பெருமாளையும் திருமழிசையாழ்வரையும் ஓரிக்கையில் எழுந்தருளச் செய்து திரும்பக் கொண்டு வருவார்கள்.

Next Story