கிருபையும், இரக்கமும் பெற்றுக்கொள்


கிருபையும், இரக்கமும் பெற்றுக்கொள்
x
தினத்தந்தி 7 Feb 2020 9:05 AM GMT (Updated: 7 Feb 2020 9:05 AM GMT)

சர்வ ஞானமுள்ள இறைவன் மனிதனை சிருஷ்டித்தபோது அவனை பூமியின் மண்ணினாலே உண்டாக்கினார்.

ர்வ ஞானமுள்ள இறைவன் மனிதனை சிருஷ்டித்தபோது அவனை பூமியின் மண்ணினாலே உண்டாக்கினார். மனிதனை மகிமையினாலும், கனத்தினாலும் முடிசூட்டினார். தேவன் நம்மேல் நினைவுள்ளவராக இருக்கிறார். நாம் பூமியிலே ஜீவிக்க அவரிடத்திலிருந்து கிருபையும் இரக்கமும் பெற்றுக் கொள்ளவேண்டும்.

தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபையும் இரக்கமும் கிடைக்கும்

மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள், பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். (1 பேதுரு 5:5)

சகல துர்குணத்திற்கும் காரணம் பெருமை. பெருமையுடையவன் எனக்கு எல்லாம் தெரியும், ஒருவரும் எனக்கு போதிக்க வேண்டியதில்லை என்று எல்லாவற்றிலும் எதிர்த்து நிற்பான். அவனிடத்திலிருந்து கோபம், எரிச்சல், பேராசை, பொறாமை என்ற துர்குணங்கள் தோன்றும். பெருமையுடையவன் சுயாதீன ஆவியுள்ளவனாக இருப்பான். நான் செய்வது சரியென்று கூறுவான். அவர்கள் செயல்களோ கொந்தளிக்கும் கடலைப்போல் இருக்கிறது.

ராஜாவாகிய சவுல் தன்னைத்தானே உயர்த்திய போது அவன் விழுந்தான். அபிஷேகத்தையும் தேவ பாதுகாப்பையும் இழந்தான். தன் ஆயுதத்தால் மரித்துப் போனான். பெருமையுள்ளவர்களுக்கு கர்த்தர் எதிர்த்து நிற்கின்றார்.

தாழ்மை என்பது ஓர் இளைப்பாறுதலுக்கான ஜீவிதம். தாழ்மையுள்ள ஒரு மனிதன் பரிகாசிக்கப்படும் போது, நிந்திக்கப் படும்போது, துன்புறுத்தப்படும்போது, அவமானப்படுத்தப் படும்போது தன் உணர்வால் தன் மனதை புண்படுத்தமுடியாது. ஏனென்றால் அவன் தாழ்மையின் சுபாவத்தை அணிந்திருக்கிறான். தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் இரக்கமும் கிருபையும் அளிக்கிறார்.

தாழ்மையுள்ளவன் ஒருபோதும் இடறல் அடைவதில்லை. தாழ்மை இளைப்பாறுதலான ஜீவிதம். பரிசுத்தமான வாழ்க்கை. தாழ்மையுடையவர்கள் சாந்தமும், சமாதானமும் நிறைந்த வார்த்தைகளை பேசுவார்கள். அவர்கள் வாழ்க்கை முழுவதையுமே தேவன் மறுரூபப்படுத்தி செழித்தோங்கச் செய்கிறார். இயேசு சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார். பிதா அவரை எல்லாவற்றுக்கும் மேலாக உயர்த்தினார்.

கண்ணீரின் ஜெபத்திற்கு

கிருபையும் இரக்கமும் கிடைக்கும்

‘ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம் பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான். (II இரா.20:3)

எசேக்கியா ராஜா மரணத்துக்கேது வான வியாதியில் இருந்தார். ஏசாயா தீர்க்கத்தரிசி அவரிடத்தில் வந்து ‘நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும், நீர் பிழைக்கமாட்டீர் மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார்’ என்றார்.

அப்பொழுது எசேக்கியா ராஜா தன் முகத்தை சுவர்புறமாக திருப்பிக்கொண்டு ஆண்டவரை நோக்கி ‘நான் உண்மையும் மன உத்தமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன்’ என்று விண்ணப்பம் பண்ணி அழுது ஜெபித்தார்.

சர்வ வல்லமையுள்ள தேவன் ஏசாயா தீர்க்கத்தரிசி மூலமாக உடன் பதில் கொடுத்தார். ‘உன் விண்ணப்பத்தைக் கேட்டேன். உன் கண்ணீரின் ஜெபத்தைக் கண்டேன். இதோ நான் உன்னை குணமாக்குவேன். உன் ஆயுசு நாட்களில் 15 வருடங்கள் அதிகப்படுத்துவேன்’ என்றார்.

மரணத்தின் வியாதி வந்தபோதும் கண்ணீரின் ஜெபத்தால் பிதாவாகிய தேவனிடத்திலிருந்து இரக்கமும் கிருபையும் கிடைத்தது, அவர் பிழைத்தார்.

நீடிய பொறுமையுள்ளவர்களுக்கு

கிருபையும் இரக்கமும் கிடைக்கும்

கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர், இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். (யாத்.34:6)

கர்த்தர் ஒரு மேகத்தில் சீனாய் மலையின் மேல் இறங்கினார். மோசேயின் அருகே நின்று கர்த்தருடைய நாமத்தைக் கூறினார். அவர் தமது 5 குணாதிசயங்களை வெளிப்படுத்தினார். பொறுமையோடு நீடிய சாந்தமுள்ள சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தினார். நீங்கள் பிறருக்கு நன்மை செய்து அதனால் பாடுபடும்போது பொறுமையோடு சகித்தால் அதுவே தேவனுக்கு பிரியம். இன்று மனிதர்கள் மத்தியில் சகிப்புத்தன்மை இல்லை, பொறுமை இல்லை, சாந்தகுணம் இல்லை. அவருடைய குணாதிசயங்களை பெற்று வாழ்கின்றவர்களுக்கு எல்லா செயலிலும் சமாதானம் உண்டாகும். நீடிய பொறுமையுடையவர் களுக்கு அவரிடத்திலிருந்து இரக்கமும் கிருபையும் கிடைக்கும். ஆமென்.

ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம் சி.பூமணி, சென்னை-50.

Next Story