மந்திரங்களுக்குள் மறைந்திருக்கும் அர்த்தங்கள்


மந்திரங்களுக்குள் மறைந்திருக்கும் அர்த்தங்கள்
x
தினத்தந்தி 11 Feb 2020 8:48 AM GMT (Updated: 11 Feb 2020 8:48 AM GMT)

மந்திரம் என்பது, ‘உச்சரிப்பவரை காக்கும் சொல்’ என்ற பொருள் கொண்டது.

ந்திரம் என்பது, ‘உச்சரிப்பவரை காக்கும் சொல்’ என்ற பொருள் கொண்டது. மந்திரங்கள் அவற்றின் பயன்களின் அடிப்படையில் தூய மந்திரங்கள், மாய மந்திரங்கள், ஆக்கும் மந்திரங்கள், காக்கும் மந்திரங்கள் உள்ளிட்ட பல நிலைகளில் அமைந்துள்ளன. எந்த ஒரு மந்திரமும் சப்த பிரபஞ்ச மண்டலத்தில், அதற்கான அலைவரிசையில் குறிப்பிட்ட அதிர்வுகளை ஏற்படுத்துவதன் மூலம் விளைவுகள் ஏற்படுகின்றன என்பது ஆன்மிக நியதி.

சப்த பிரபஞ்ச வடிவமாக உள்ள வேதங்களில் பொதிந்துள்ள மந்திரங்களை கண்டறிந்து வெளிப்படுத்தியவர்கள், ‘ரிஷிகள்’ ஆவார்கள். இந்த ரிஷிகளில், மகரிஷி, பிரம்மரிஷி, ராஜரிஷி, வைஸ்யரிஷி, ஜனரிஷி, தபரிஷி, ஸத்யரிஷி, காண்டரிஷி, தேவரிஷி, சூதரிஷி என்ற பல்வேறு வகையினர் உள்ளதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ரிஷிகள் கண்டறிந்த மந்திரங்களுக்கு 7 விதமான பண்புகள் உள்ளன. அவை, 1) ‘ரிஷி’ - மந்திரத்தை கண்டறிந்தவர் 2) ‘சந்தஸ்’ - மந்திரம் உச்சரிக்கப்படும் முறை 3) ‘தேவதை’ - மந்திரத்திற்குரிய கடவுள் 4) ‘பீஜம்’ - மூல சக்தியாக உள்ள சொல் 5) ‘சக்தி’ - அதன் சக்தி நிலை 6) ‘கீலகம்’ - அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைக்கும் பகுதி 7) ‘நியாசம்’ - உச்சரிப்பின்போது உடலின் பகுதிகளை ஒழுங்குபடுத்துவது ஆகியவையாகும். இந்த ஏழு விதமான பண்புகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

ரிஷி

எவரும் கண்டறியாத மறை பொருளாக இருந்து கொண்டிருந்த மந்திரங்களைக் கண்டுபிடித்து, அதனை நமக்கு அளித்தவர்கள் ரிஷிகள். எனவே அந்த ரிஷிகள், மந்திரத்துக்குரிய தேவதை, ‘சந்தஸ்’ எனப்படும் மந்திரம் உச்சரிக்கப்படும் முறை ஆகிய மூன்றும் போற்றப்பட வேண்டும் என்பது நியதி. ஆதி குருவான மந்திரத்தை கண்டறிந்த ரிஷி, அதை உபதேசித்த மானிட குரு ஆகியோரை வணங்குவதற்காக, வலது கையால் தலையை தொட்டு அதற்கு உரிய மந்திரம் சொல்வது ‘ரிஷி நியாசம்’ ஆகும்.

சந்தஸ்

குறிப்பிட்ட ஒரு மந்திரத்தின், சொல் அமைப்பு இதுவாகும். அந்த முறைக்கு வணக்கம் தெரிவிக்கும் முறையில், உதட்டின் வெளியே வலது கையால் தொட்டுக்கொள்ளும் முறை ‘சந்தஸ் நியாசம்’ ஆகும்.

தேவதை

மந்திரத்தின் மையப் பொருளாக உள்ள இறை சக்தியையே, ‘தேவதை’ என்கிறோம். அதை இதயத்தில் அமர்ந்திருக்கும் பாவனையுடன், இதய ஸ்தானத்தை தொட்டு வழிபடும் முறை ‘தேவதா நியாசம்’ ஆகும்.

பீஜம்

‘பீஜம்’ என்பதற்கு ‘விதை’ என்பது பொருள். சிறிய விதைக்குள் மாபெரும் மரம் வளர்வதற்காக காத்திருக்கும் நிலையை இது உணர்த்துகிறது. இந்த பிரபஞ்சம் மற்றும் பஞ்சபூதங்கள் யாவும் அதன் சூட்சுமமான நிலையில் இருந்துதான் தற்போது பார்க்கப்படும் நிலைக்கு வந்துள்ளன. அதன் தோற்ற நிலைக்கு அடிப்படையாக உள்ள நுட்பமான ஒலி வடிவமே ‘பீஜம்’ ஆகும். அதன் அடிப்படையில், ஒவ்வொரு தேவதைக்கும் தனித்தனியான ‘பீஜ மந்திரம்’ உள்ளது.

சக்தி

‘பீஜம்’ என்ற விதைக்குள் இருந்து வெளிப்பட காத்திருக் கும் அதன் பலன், ‘சக்தி’ என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சக்தியானது, வீரியம், தேஜஸ், பலம் என்ற நிலைகளிலும் வெளிப்படுகிறது.

கீலகம்

மந்திரத்தின் சக்தி சிதறாமல் பாதுகாப்பாக ஒருங்கிணைக்கும் வழிமுறை ‘கீலகம்’ ஆகும். ஓடும் தேரின் சக்கரத்திற்கு அச்சாணி அமைந்திருப்பதுபோல, ஒவ்வொரு மந்திரத்துக் கும் ‘கீலகம்’ என்ற ஒருங்கிணைப்புஅவசியமானது.

நியாசம்

மந்திர உச்சரிப்பு மற்றும் அதன் அமைப்பு ஆகிய நிலைகளில் உடலின் பகுதிகளை சம்பந்தப்படுத்தி வணக்கம் தெரிவிக்கும் உடல்மொழி ‘நியாசம்’ எனப்படும். அவை ‘அங்க நியாசம்‘, ‘கர நியாசம்’ உள்ளிட்ட பல வகைகளில் அமைந்துள்ளன.

சொற்களின் சேர்க்கையாக உள்ள பல மந்திரங்களை பிரித்து, அர்த்தம் காண்பது இயலாது. இருந்தாலும், தன்னளவில் அவற்றின் சப்த அலைவரிசைக்கு சக்தி உள்ளதாக பல்வேறு ஆய்வுகள் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், குறிப்பிட்ட உயர் எண்ணிக்கையில் ஒரு மந்திரத்தை இடம், பொருள், காலம் என்ற அளவீடுகளுக்குள் உட்பட்டு, உச்சாரணம் செய்யப்படும் நிலையில், மந்திரத்திற்கான உருவம், அதை உச்சரிப்பவருக்கு தென்படும் என்று ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட அந்த தேவதா உருவம், ஒரு சில காரியங்களை செய்யும் சக்தி படைத்தது என்றும் சொல்லப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட உருவங்களை தோற்றுவிக்கக்கூடிய ‘பீஜாட்சரங்களை’ கச்சிதமாக ரிஷிகள் தமது ஞான திருஷ்டியால் கண்டறிந்து, அவற்றை உலக நலனுக்காக அளித்துள்ளனர். குறிப்பிட்ட பீஜாட்சரங்களின் மூலம் மந்திரங்களை அமைத்து, அதற்குரிய தேவதையின் பெயரை அளித்து, அவற்றின் சக்தியையும் ரிஷிகள் காட்டிய வரலாறு உலகமெங்கும் சொல்லப்படுகின்றன.

மந்திர தேவதைகளில் சிறு தேவதைகள், தேவதைகள், அதிதேவதைகள் என்று மூன்று பிரிவுகள் உள்ளன. அதாவது, கருப்பணசாமி, குட்டிச்சாத்தான், யட்சிணி போன்ற தேவதைகள் சிறு தெய்வங்களாக சொல்லப்படுகின்றன. காளி, துர்க்கை, ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் போன்றவை ‘தேவதைகள்’ என்று குறிப்பிடப்படுகின்றன. சிவன், விஷ்ணு, பார்வதி, முருகன், கணபதி ஆகியோர் அதிதேவதைகள் என்று அழைக்கப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட தேவதைக்குரிய உருவத்தை பார்த்துத் தரிசிக்கும் விதமாக மந்திரங்கள் செயல்படுகின்றன.

மந்திர உபாசனை பெற விரும்பும் ஒரு உபாசகர், அவரது உடல் மற்றும் உள்ளம் ஆகியவற்றின் அமைப்புக்கு ஏற்ற விதத்தில், சரியான குருவிடம் இருந்து தக்க சமயத்தில் மந்திர உபதேசம் பெற வேண்டும் என்பது ஆன்மிக நியதியாகும். ஆன்மிக முன்னேற்றம் அடைய விரும்புபவருக்கு அடித்தளங்களாக இஷ்ட தெய்வம், மந்திரம், தகுதிவாய்ந்த குரு ஆகிய மூன்று விஷயங்கள் அமைந்துள்ளன. அவற்றின் அடிப்படையில் மனதின் பக்குவத்துக்கு ஏற்ப இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்து, ஒரு குருவின் மூலம் பெறப்பட்ட அதற்கான மந்திரங்களை உச்சரித்து, உரிய முறையில் பூஜைகள் செய்தால் பலன் கிடைக்கும் என்று ஆன்மிக சான்றோர்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

Next Story