கிறிஸ்தவம்: பைபிள் கூறும் வரலாறு: புனித தீத்து


கிறிஸ்தவம்: பைபிள் கூறும் வரலாறு: புனித தீத்து
x
தினத்தந்தி 11 Feb 2020 10:22 AM GMT (Updated: 11 Feb 2020 10:22 AM GMT)

திருத்தூதர் பவுல், தீத்துவுக்கு எழுதிய திருமுகம் “ஆயர் பணித் திருமுகங்கள்” வரிசையில் வருகிறது.

திருத்தூதர் பவுல், தீத்துவுக்கு எழுதிய திருமுகம் “ஆயர் பணித் திருமுகங்கள்” வரிசையில் வருகிறது. விவிலியத்தில் 1 திமொத்தேயு, 2 திமொத்தேயுவுக்குப் பிறகு இடம் பெற்றிருந்தாலும் தீத்து நூலே முதலில் எழுதப்பட்டது என கருதப்படுகிறது. இதன் காலம் கி.பி. 63. இதை பவுல் கொரிந்து நகரிலிருந்து எழுதுகிறார்.

மூன்றே மூன்று அதிகாரங்களும், 46 வசனங்களும் மட்டும் கொண்ட இந்த நூல் மிக முக்கியமான பல செய்திகளை நமக்குத் தருகிறது. குறிப்பாக, திருச்சபைத் தலைவர்களை நியமிப்பதிலும், அமைப்பைக் கட்டமைப்பதிலும் இந்த நூல் நமக்கு பெருமளவில் உதவுகிறது.

தீத்து ஒரு பிற இன கிறிஸ்தவர். இவர் பவுலுடைய மூன்றாவது நற்செய்தி அறிவிப்புப் பயணத்தில் இணைந்து கொண்டவர். யூதத் தாய்க்குப் பிறந்த திமொத்தேயு யூதர்களிடையே பணிசெய்வதற்கு ஏதுவாக அவருக்கு விருத்தசேதனம் செய்தார் பவுல். ஆனால் பிற இனத்தாரான தீத்துவுக்கு அவர் விருத்தசேதனம் செய்யவில்லை. விருத்தசேதனம் செய்யப்படாத நிலையிலேயே நற்செய்திப் பணியில் தீத்து நுழைகிறார்.

பவுல் அந்தியோயாக்கியாவிலிருந்து எருசலேம் சென்றபோதும் தீத்துவும் அவரோடு இணைந்து பயணித்தார். பின்னாளில் அவர் கிரேத்துத் தீவில் ஆயராகப் பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில் தான் பவுல் இந்தக் கடிதத்தை தீத்துவுக்கு எழுதுகிறார்.

கிரேத்துத் தீவு சுமார் 156 மைல் நீளமும், முப்பது மைல் அகலமும் கொண்ட ஒரு பெரிய தீவு. எருசலேமில் பெந்தேகோஸ்தே நாளில் தூய ஆவியானவர் வந்திறங்கினார். அந்த நாளில் எருசலேமில் இருந்த யூதர்களில் பலர் கிரேத்துத் தீவிலிருந்து வந்தவர்கள்.

தீத்துவைக் குறித்து திருத்தூதர் பணிகளில் லூக்கா எதையும் எழுதவில்லை. ஆனால் பவுல் தனது கடிதங்களில் 13 முறை தீத்துவைக் குறிப்பிடுகிறார்.

பவுலின் மூலமாக இறைவனை ஏற்றுக் கொண்டவர் தான் தீத்து. அதன் பின் பவுலுடன் நெருக்கமாகிறார். மூன்று முறை பவுல் தீத்துவை கொரிந்து நகருக்கு அனுப்புகிறார் என்பதை விவிலியம் நமக்கு எடுத்துச் சொல்கிறது.

கிரேத்துத் தீவில் பவுல் முதலில் நற்செய்தி அறிவித்திருந்தார். அதன் பின் தீத்துவை அங்கே விட்டுச் சென்றார். காலம் செல்லச் செல்ல அங்கே ஆன்மிகத்தின் வெளிச்சம் மங்கிக் கொண்டிருந்தது. அதற்கு என்ன காரணம் என்பதை பவுல் உணர்ந்து கொள்கிறார். மக்களுடைய வாழ்க்கை முறையும், தலைவர்களுடைய குணாதிசயங்களும் திருச்சபையை வலுவாகக் கட்டியெழுப்ப வேண்டும் என அவர் விரும்புகிறார். அதற்கான தெளிவான வழிகாட்டுதலாக இந்தக் கடிதத்தை அமைக்கிறார்.

குறிப்பாக, எப்படி ஒரு சாட்சியுள்ள, கனி கொடுக்கும் வாழ்க்கை வாழ்வது?, எப்படி திருச்சபையை புனிதமாய்க் காத்துக் கொள்வது? எப்படி போலிப் போதனைகளை எதிர்ப்பது? நல்ல செயல்களைச் செய்வதன் தேவை என்ன? உண்மையைப் போதிப்பதன் தேவை என்ன? திருச்சபைத் தலைவர்களை தேர்வு செய்வது எப்படி? திருச்சபையைக் கட்டுக்கோப்பாய் வழிநடத்துவது எப்படி? என பல்வேறு விஷயங்களை தீத்து திருமுகம் மூலமாக பவுல் விளக்கு கிறார்.

திருச்சபைத் தலைவர்கள் பாலியல் ஒழுக்கம் கொண்டவர்களாகவும், பிறருடைய நன்மதிப்பைப் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்களிடம் அகந்தை, சுயநலம், முன்கோபம், குடிவெறி, வன்முறை போன்றவை இருக்கக் கூடாது. விருந்தோம்பல், நன்மையில் நாட்டம், கட்டுப்பாடு, நேர்மை, அர்ப்பணம், தன்னடக்கம் போன்றவை இருக்க வேண்டும் என மிகத் தெளிவான வரையறையை பவுல் தருகிறார்.

வயது முதிர்ந்தவர்கள் சரியான பாதையில் நடந்தால் தான் இளம் வயதினர் சரியான பாதையில் நடப்பார்கள். போதனைகளைப் பார்த்தல்ல, வாழ்க்கையைப் பார்த்தே மக்கள் தங்களை சரி செய்து கொள்வார்கள் எனும் சிந்தனை பவுலின் போதனைகளில் இழையோடுகிறது.

மறுமைக்கான எதிர்நோக்கும், இரண்டாம் வருகைக்காய் நம்மைக் காத்துக் கொள்வதும் இந்த கடிதத்திலும் இடம்பெற்றிருக்கிறது. நாம் உலகின் சிற்றின்பங்களை வெறுத்து, இறைவனை பற்றிக்கொள்ள நமக்கு இறையருள் தரப்பட்டிருக்கிறது. நம்மை நெறிகேடுகளிலிருந்து மீட்பது இறைவனே. நாம் கட்டுப்பாடுடனும், இறை பற்றுடனும், நேர்மையுடனும் வாழ்வது இறைவனின் வருகையில் நம்மை இணைத்துக் கொள்ளவே என்கிறார் பவுல்.

மக்கள் தீய நாட்டங்களில் இருந்தால் அவர்களைப் பழித்துரைக்க வேண்டாம். காரணம் நாமும் ஒரு காலத்தில் தீய வழிகளில் நடந்தவர்கள் தான். இப்போது நம்மை இறைவன் அவரது இரக்கத்தின் மூலமாக மீட்டு புதுப்பித்திருக்கிறார். எனவே, பிறரும் மனம் மாறி இறைவனை நெருங்க வேண்டும் எனும் சிந்தனை இருக்க வேண்டுமே தவிர, அவர்களைப் பழிக்கும் மனநிலை இருக்கக் கூடாது என்கிறார் பவுல்.

தீத்து நீண்டகாலம் கிரேத்து தீவில் பணியாற்றினார். இவர் மரணமடைந்த காலம் கி.பி. 96 அல்லது கி.பி. 107 என குறிப்புகள் தெரிவிக்கின்றன. கத்தோலிக்கத் திருச்சபை மரபுப்படி இவர் ‘புனித தீத்து’ என அழைக்கப்படுகிறார். ஜனவரி 26-ம் நாளை இவருடைய விழாவாக கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

சேவியர்

Next Story