இஸ்லாம்: இனிய வாழ்வு தரும் இறை நம்பிக்கை : குழந்தைகளை அழகியமுறையில் வளர்ப்போம்


இஸ்லாம்: இனிய வாழ்வு தரும் இறை நம்பிக்கை : குழந்தைகளை அழகியமுறையில் வளர்ப்போம்
x
தினத்தந்தி 11 Feb 2020 10:37 AM GMT (Updated: 11 Feb 2020 10:37 AM GMT)

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது.

ஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அந்த இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘குழந்தைகளை அழகியமுறையில் வளர்ப்போம்’ என்பது குறித்த தகவல்களை இங்கு காண்போம்.

மனிதனுக்கும், மிருகங்களுக்கும் இடையே வித்தியாசம் பல உண்டு. அவற்றில் மிக மிக முக்கியமான வித்தியாசம் வாரிசுகளை வளர்த்தெடுப்பது. மிருகங்களின், பறவைகளின், கடல்வாழ் உயிரினங்களின் குட்டிகள், குஞ்சுகள் தானாக வளர்கின்றன. ஆனால், மனிதக்குழந்தைகள் அவ்வாறல்ல. குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள்.

மீன்குஞ்சுகளுக்கு நீந்த தாய் கற்றுக்கொடுப்பதில்லை. குஞ்சுகள் தானாகவே நீந்த கற்றுவிடுகின்றன. குஞ்சு பறவைக்கு பறக்க தாய் கற்றுக் கொடுப்பதில்லை. அவை தானாகவே பறக்க கற்றுவிடுகின்றன. மிருகங்களின் குட்டிகள் நடப்பதற்கு, உண்ணுவதற்கு தாய் கற்றுக் கொடுப்பதில்லை. அவை தானாகவே நடக்கவும், ஓடவும், உண்ணவும், பருகவும் கற்று கரை சேர்ந்துவிடுகின்றன.

பகுத்தறிவு இல்லாத இவைகள் தமது தேவைகளை தாமே நிறை வேற்றுகின்றன. பகுத்தறிவு உள்ள மனிதன் குழந்தையாக இருக்கும் போது தமது தேவைகளை தாமே நிறைவேற்ற முடி யாமல் பெற்றோரை சார்ந்தே இருக்கிறது. குழந்தைகள் தானாக வளர்வதில்லை. அவர்கள் வளர்க்கப் படுகிறார்கள்.

அந்த வளர்ப்பு அழகிய முறையில் அமைவதை அன்னையின் வளர்ப்பிலும், சுற்றுச்சூழலும்தான் தீர்மானிக் கிறது. மனைவியை மார்க்கப் பற்றுள்ளவராக தேர்ந் தெடுத்தால் குழந்தை வளர்ப்பு சரியாகி விடும். குழந்தைகள் பெற்றோரின் குணநலன்களை தன்னுள் உணர்ந்து கொண்டு, தமது சிந்தனையில் உள்வாங்கிக் கொண்டு வளர்கிறார்கள்.

குழந்தை பாக்கியம் வேண்டுவோர், ‘இறைவா, எனக்கொரு நற்பாக்கியமுள்ள குழந்தையை நீ வழங்குவாயாக’ என்று தான் கேட்க வேண்டும். நபி இப்ராகீம் (அலை) அவர்கள் இறைவனிடம் குழந்தை வரம் வேண்டியதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

‘என் இறைவா, ஒரு மகனை எனக்கு நீ வழங்குவாயாக; அவர் உத்தமரில் ஒருவராக இருக்கவேண்டும்’. (திருக்குர்ஆன் 37:100)

‘(இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு) சாந்த குணம் கொண்ட ஒரு மகனைப் பற்றி நாம் அவருக்கு நற்செய்தி அறிவித்தோம்’. (திருக்குர்ஆன் 37:101)

அதுபோல நபி ஸகரிய்யா தனக்கு ஒரு வாரிசு தருமாறு இறைவனிடம் வேண்டியது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

“ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார்: இறைவனே, உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக. நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள் வோனாக இருக்கின்றாய்”. (திருக்குர்ஆன் 3:38)

இரு பெற்றோரின் அழகான பிரார்த்தனையால் அவ்விருவருக்கும் நற்பாக்கியமுள்ள குழந்தைபாக்கியம் கிடைத்தது அதிசயம் அல்ல. அவ்விரு குழந்தைகளுமே நபியாக தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் என்பதுதான் வியப்பில் ஆழ்த்தக்கூடியது.

குழந்தை பாக்கியம் கிடைத்த பிறகு ‘இறைவா, எனது குழந்தைகளிடமிருந்து எனக்குக் கண்குளிர்ச்சியான, மனநிறைவான வாழ்க்கையைத் தருவாயாக’ என பிரார்த்திக்க வேண்டும். இது அழகிய குழந்தை வளர்ப்பின் அடுத்த நிலையாக உள்ளது. இது இறைநம்பிக்கையாளர்களின் வேண்டு தலாகவும் அமைந்துள்ளது.

குழந்தை பிறந்தவுடன் செய்யவேண்டிய கடமைகளில் தலையாயக் கடமை யாதெனில் குழந்தையின் வலது காதில் தொழுகையின் பக்கம் அழைப்பு வாசகங்களை (பாங்கு) கூறவேண்டும். அதன் இடது காதில் தொழுகையை நிலைநிறுத்தும் வாசகங்களை (இகாமத்) கூறவேண்டும்.

இதுகுறித்த தத்துவத்தை அறிஞர் இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுவதாவது:

பிறந்த குழந்தை அது முதன்முதலாக உலகில் கேட்கும் வாசகங்கள் இறை வல்லமையையும், இறைவனின் மகத்துவத்தையும், இறைவன் ஒருவன் எனும் சாட்சியத்தையும், இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களே ஆவார்கள் எனும் உறுதிமொழியையும், தொழுகையின் பக்கம் கொடுக்கப்படும் அழைப்பிதழையும், வெற்றி நோக்கி வருவதையும் இவ்வாறாக அமைய வேண்டும். இவ்வாறு கூறப்படும் வாசகங்களை செவிமடுக்கும் சைத்தான் வெருண்டோடுகின்றான். சைத்தானின் அழைப்புக்கு முன்பு இறைவனின் அழைப்பு முந்திவிட வேண்டும். பிறகு, உடனே அர்த்தமுள்ள அழகான பெயரை சூட்ட வேண்டும்.

‘மறுமையில் உங்களின் பெயரைக் கொண்டும், உங்களின் தந்தை பெயரைக் கொண்டும் அழைக்கப்படுவீர்கள். எனவே, உங்கள் குழந்தைகளுக்கு அழகிய பெயரினைச் சூட்டுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்: அபூதாவூத்)

நல்ல பெயர் வைப்பது குழந்தையின் நன்நடத்தையையும், நல்ல எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது. பெயர் என்பது மனிதனுடைய குணநலன்களில் தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்பது உளவியல் ரீதியான உண்மை. இந்த உண்மையை அன்றே உலகிற்கு உணர்த்தியவர்தான் உத்தம நபி (ஸல்) அவர்கள்.

குழந்தைக்கு பெயர் சூட்டும் போது பெரியவர்கள் தேன் போன்ற இனிப்பு வகைகளை வாயில் தடவி துஆ செய்ய வேண்டும்.

குழந்தை பிறந்த ஏழாவது தினத்தில் ஆண் குழந்தையாக இருந்தால் இரண்டு ஆடுகளையும், பெண் குழந்தையாக இருந்தால் ஒரு ஆட்டையும் அறுத்து தானும் சாப்பிட்டு, அடுத்தவருக்கும் தானம் செய்ய வேண்டும். இதற்கு ‘அகீகா’ என்று பெயர்.

குழந்தை பிறந்த தினத்திலிருந்தே குழந்தைக்கு நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும்.

‘குழந்தைகள் ஏழு வயது எட்டும் வரை அவர்களுடன் விளையாடுங்கள். அடுத்த ஏழு வயதில் அவர்களுக்கு கல்வியைக் கொடுங்கள். அடுத்த எழு வயதில் அவர்களுடன் இணக்கமாகி விடுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்: நஸயீ, அஹ்மது)

‘உங்கள் குழந்தைகள் ஏழு வயதை அடைந்தால், தொழும்படி ஏவுங்கள்; பத்து வயதை அடைந்தால், தொழுகையை விட்டுவிடுவதின் மீது மிருதுவாக அடியுங்கள்; மேலும், குழந்தைகளுக்கிடையில் படுக்கைகளை பிரித்து வையுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்’ (அறிவிப்பாளர்: அம்ர்பின் சுஅய்ப் (ரலி), அபூதாவூத்)

குழந்தையை அடித்து, ஏவி, சீர்திருத்தமாக வளர்ப்பதெல்லாம் ஏழு வயதிலிருந்து பத்து, பன்னிரெண்டு வயது வரைக்கும் தான். பன்னிரெண்டு வயதை தாண்டிய குழந்தைகள் ‘டீன்ஏஜ்’ பருவத்தை அடையும்போது சுயமுடிவை எடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதற்குள் குழந்தைகளை நல்லொழுக்கமுள்ளவர்களாக சீர்படுத்தி வளர்த்து ஆளாக்கி விட வேண்டும்.

பருவ வயதை அடைந்த குழந்தைகளுக்கு ஒழுக்கம், உடல் ஆரோக்கியம், மனவளர்ச்சி, எழுத்தாற்றல், பேச்சாற்றல், ஞாபகத்திறன், அறம், கல்வியறிவு, நுண்ணறிவு, தகவல் தொழில் நுட்பம், அறிவியல், அரசியல், பொருளியல், மருத்துவம், வரலாறு, கலை, இலக்கியம், ஆன்மிகம், விவசாயம், உழைப்பின் உன்னதம், வீரவிளையாட்டு, மனிதநேயம் போன்ற உன்னதமான அம்சங்களை குழந்தை விரும்பும் துறைகளில் அவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக வளர்த்து ஆளாக்கி விடுவது பெற்றோரின் தார்மீகக் கடமையாகும். மனிதனுக்கும் மிருகங்களுக்கும் வேறுபாடே கற்றலும், கற்பித்தலும் ஆகும். இதைவிட மேலானது நல்லொழுக்கம்.

‘தந்தை தன் தனயனுக்கு வழங்கும் அன்பளிப்புகளில் நல்லொழுக்கக் கல்வியை விட வேறு எந்த சிறந்த அன்பளிப்பையும் வழங்கிட முடியாது என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அய்யூப்பின் மூஸா (ரலி), திர்மிதி)

‘எவருக்கு குழந்தை பிறக்கிறதோ அவர், அந்த குழந்தைக்கு அழகான பெயர் சூட்டி, ஒழுக்கமும் கற்றுக்கொடுக்க வேண்டும். மேலும், குழந்தை பருவ வயதை அடைந்து விட்டால், அவனுக்கு அவர் திருமணத்தையும் நடத்திவைக்க வேண்டும். இவ்வாறு செய்யாத பட்சத்தில் அந்தக்குழந்தை கேட்டில் விழும்போது, அதன் பாவம் குழந்தையின் தந்தையின் மீதும் சரிசமமாக போய் சேரும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: பைஹகீ)

பெற்றோர் இறந்த பிறகும் பெற்றோருக்காக பிரார்த்திக்கும் அழகான குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும். இவ்வாறு வளர்ப்பதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதிதான். குழந்தைகளை கொஞ்சி மகிழவேண்டும். அவர்களை கெஞ்சும் அளவுக்கு தறுதலையாக வளர்த்து விடக்கூடாது.

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.

Next Story