வெற்றி தரும் சமூக நல்லிணக்கம்


வெற்றி தரும் சமூக நல்லிணக்கம்
x
தினத்தந்தி 14 Feb 2020 9:39 AM GMT (Updated: 14 Feb 2020 9:39 AM GMT)

உலகில் தோன்றியுள்ள அனைத்துச் சமயங்களின் அசல் நோக்கமும் நாம் ஒழுக்கமாக, ஒற்றுமையாக, ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பது தான். அதற்கு இஸ்லாமும் விதிவிலக்கல்ல. இதுகுறித்து திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:

“மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக் கொள்கின்றீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) ரத்தக் கலப்பு உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கின்றான்”. (திருக்குர்ஆன் 4:1)

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக்கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன். (திருக்குர்ஆன் 49:13)

இவ்விரு வசனங்களும் நாம் எங்கிருந்து வந்தவர்கள், எப்படி இருக்க வேண்டியவர்கள் என்பதை தெள்ளத்தௌிவாக சொல்லிக்காட்டுகிறது. குறிப்பாக, ஜாதி, குலம், கோத்திரம் என்பதெல்லாம் ஒருவர் இன்னொருவரை இன்னாரென்று அடையாளம் காண்பதற்கே தவிர சண்டை, சச்சரவுகளுக்கல்ல என்று கூறுவதிலிருந்தே இஸ்லாம் கூறும் பொதுமைப் பண்பை நாம் நன்கு அறிந்து கொள்ளலாம்.

“(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் (இறைவன் என) அழைக்கின்றார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள். அதனால் அவர்கள் அறியாமையின் காரணமாக வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு வகுப்பினருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக்கி வைத்திருக்கின்றோம். பின்னர் அவர்கள் தங்கள் இறைவனிடமே செல்வார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்த செயலைப்பற்றி (அவற்றில் நன்மை எவை, தீமை எவை என்பதை) அவன் அவர்களுக்கு அறிவித்து விடுவான்”. (திருக்குர்ஆன் 6:108)

நீங்கள் மட்டும் தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் இருக்காதீர்கள். சக சகோதர சமயத்தவர்களையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அவர்களை, அவர்களது தெய்வங்களை, அவர்களது வழிபாடுகளைத் திட்டாதீர்கள். உங்களுக்கு வணக்க வழிபாடுகள் இருப்பதைப் போலவே அவர்களுக்கும் பற்பல வணக்க வழிபாடுகள் உண்டு என மிக எதார்த்தமாகக் குறிப்பிடுகிறது மேலே உள்ள திருக்குர்ஆன் வசனம்.

நாம் நம்மைச் சுற்றி குடியிருப்பவர்களோடு, நமது தொடர்பில் இருப்பவர்களோடு என்றைக்கும் ஜாதி, மத, இன, நிற, மொழி வேறுபாடுகள் பார்க்கக்கூடாது. எல்லோரும் ஒருதாய் மக்கள் என்ற உயர்ந்த சிந்தனையோடு தான் பேசிப் பழகவேண்டும். நபிகள் நாயகம் அப்படித்தான் அனைவரிடமும் பழகினார்கள்.

நபிகளார் மக்காவில் வாழமுடியாத நிலை ஏற்பட்டு மதீனா வந்தபோது, மதீனாவைச் சுற்றி பல சமயத்தவர்களும் வாழ்ந்தனர். அவர்கள் அனைவரோடும் நபிகளார் முதன் முதலில் உள்ளூர் வளர்ச்சிக்காக சமாதான ஒப்பந்தம் செய்தார்கள் என்ற செய்தி ஒன்றே போதும் நாம் நம்மைச் சுற்றியிருப்பவர்களோடு நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்வதற்கு.

ஒருமுறை இறந்துபோன யூதர் ஒருவரின் சடலம் வீதி வழியே வந்த போது நபிகளார் எழுந்து நின்றார்கள். இதைக் கண்ட நாயகத்தின் தோழர்கள், நாயகமே! அவர் யூதராயிற்றே நீங்கள் எப்படி? என்று ஆச்சரியமாய் வினவியபோது “அவரும் நம்மைப் போன்று உயிருள்ளவர் தானே” என்றார்கள். (நூல்: மிஷ்காத்)

இன்னொரு முறை தன்னிடம் பணி புரிந்த யூதச்சிறுவன் ஒருவன் உடல் நலமில்லாமல் இருந்த போது அந்தச்சிறுவனின் வீட்டுக்குச் சென்று உடல் நலம் விசாரித்தார்கள். (நூல்: மிஷ்காத்)

நபிகளார் தமது இருபத்தைந்தாம் வயதில் அல்அமீன் (நன்னம்பிக்கைக்குரியவர்) என்ற சிறப்புப் பெயரை ஊர் மக்களால் சூட்டப்பெற்றார்கள் என்பதிலிருந்தே அவர்கள் எந்த அளவுக்கு பொது மக்களுக்கு சேவை செய்திருக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது.

இப்படியாக நபிகளார் அனைத்து மத சகோதரர்களிடமும், தொப்புள் கொடி உறவுகளிடமும் நல்லிணக்கத்தோடு தான் நடந்திருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல நபிகளாரிடமும் மற்ற சமுதாய மக்கள் அவ்வாறு தான் நடந்திருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத் தக்கதாகும்.

இன்றைக்கு நாம் செய்ய வேண்டியதும், கடைப்பிடிக்க வேண்டியதும் இந்த அற்புதமான பல் சமய நல்லிணக்க, சகோதரத்துவ தத்துவம் தான். இதுதான் என்றைக்கும் நிலையானது, நீடிக்கத்தக்கது, அதுதான் மெய்யானதும் கூட.

நாம் நம்மைச் சுற்றியிருப்பவர்களை மதித்து நடக்கும் போதுதான் நம்மையும் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் மதித்து நடப்பார்கள். இதில் நாம் வேறுபாடு காட்டுவதற்கு என்று ஒன்றும் இல்லை. இஸ்லாம் அப்படி எந்தவொரு இடத்திலும் சிறுவேறுபாட்டை கூறவும் இல்லை. சமூக நல்லிணக்கத்துடன் இருக்கும் எந்தச் சமுதாயமும் தோல்வியை சந்தித்ததாக வரலாறு இல்லை.

வாருங்கள் தீய பிரிவினைகளை அகற்றுவோம், தூய இணைப்புகளை போற்றுவோம்.

- மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.

Next Story