மங்கல வாழ்வருளும் மகா சிவராத்திரி


மங்கல வாழ்வருளும் மகா சிவராத்திரி
x
தினத்தந்தி 18 Feb 2020 8:59 AM GMT (Updated: 18 Feb 2020 8:59 AM GMT)

21-2-2020 மகா சிவராத்திரி. ம னிதன் தன் வாழ்வை செம்மையாக அமைத்துக் கொள்ள, 16 வகை செல்வங்கள் அவசியம். இத்தகைய செல்வங்கள் அனைத்தும் ஒரு மனிதனுக்கு, முன்வினை பயன் மற்றும் விடாமுயற்சி, கடின உழைப்பு போன்றவற்றால் கிடைக்கிறது.

பலருக்கு வாழ்வில் ஏதாவது ஒரு விதத்தில் தொடர் இழப்புகள், விரயங்கள் ஏற்படுகின்றன. இதனால் உடல் மற்றும் மனம் பாதிக்கப்பட்டு மேலும் கஷ்டங்கள் அதிகமாகின்றன. இவற்றையெல்லாம் போக்கும் வல்லமை பெற்றவர் சிவபெருமான்.

நம்மில் சிலருக்கு சிவபெருமான் அழித்தல் தொழிலைச் செய்பவர். அவரை வணங்கக்கூடாது என்ற மூட நம்பிக்கை நிலவி வருகிறது. அது தவறான கருத்து. சிவபெருமான் தன்னை வணங்குபவர்களின் மனதில் இருக்கும் தீய எண்ணக் கழிவுகளான காமம், கோபம், குரோதம், பேராசை, பொறாமை போன்ற கர்ம வினைக் கழிவுகளை அழிப்பவர். அவரை வழிபடுபவர் களின் வாழ்வில் நிலவும் நோய்கள், மனக் கவலைகள், வறுமை நிலை போன்றவற்றை அறவே அழிப்பவர். ஒருவர் தனது மூன்று பிறவியில் செய்த பாவங் களையும் அழிப்பவர் சிவபெருமான்.

‘சிவன்’ என்ற சொல்லுக்கு ‘மங்கலம்’, ‘இன்பம்’ என்று பொருள். எனவே சிவராத்திரியை, ‘ஒளிமயமான இரவு’, ‘இன்பம் தருகின்ற இரவு’ என்று அழைக்கிறோம். ஒருவர் தன் வாழ்வின் வினைப்பயனை அழிக்க, எட்டு விதமான சிவ வழிபாட்டு முறைகளை கடைப் பிடிக்கலாம் என சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அவற்றில் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதி அன்று வரும் ‘மகா சிவராத்திரி’ விரதமாகும்.

பகலில் திரயோதசியும், இரவில் சதுர்த்தசி திதியும் கூடும், சிவராத்திரியானது மிக விசேஷமானதாகும். ‘கவுரிசங்கர சம்மேளன சிவராத்திரி’ என்றும் இதைக் கூறுவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவராத்திரி வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கடைப்பிடிக்கப்பட உள்ளது.

விரதம் இருக்கும் முறை

எல்லோருக்கும் மகா சிவராத்திரி விரதம் இருக்கும் பாக்கியம் கிடைக்காது. ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்ற வாக்கியத்திற்கு ஏற்ப, அந்த சிவனின் அருள் இருந்தால் மட்டுமே இந்த மகா சிவராத்திரி விரத வாய்ப்பு கிடைக்கும்.

இந்த விரதத்தை மகா சிவராத்திரிக்கு முந்தைய தினமான வியாழக்கிழமையிலேயே தொடங்கிவிட வேண்டும். அன்றைய தினம் ஒரு வேளை மட்டுமே உணவருந்த வேண்டும். மறுநாள் மகா சிவராத்திரி அன்று காலையில் குளிர்ந்த நீரில் குளித்து, நெற்றியில் திருநீறு பூசி, இல்லத்தில் உள்ள இறைவனின் திருப்படம் முன்பாக விளக்கேற்றி விரதத்தைத் தொடங்க வேண்டும். சிவராத்திரி நாளில் சமைத்த உணவுகளை உண்ணாமல், சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும். தண்ணீர் மட்டும் அருந்தலாம்.

வெள்ளிக்கிழமை பகல் மற்றும் இரவு முழுவதும் எதுவும் சாப்பிடக்கூடாது. வயதானவர்கள் மற்றும் நோயாளிகள், சமைக்காத உணவுகளான பால், பழங்கள், அவல் சாப்பிடலாம்.

மகா சிவராத்திரி அன்று முழுவதும் மவுன விரதம் இருந்து, மனதிற்குள்ளேயே ‘பஞ்சாட்சரம்’ அல்லது ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரங்களை உச்சரித்து வந்தால் புண்ணிய பலன் மிகுதியாகும்.

வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை சிவன் கோவில்களில் நடைபெறும் 4 கால அபிஷேக பூஜைகளில் கலந்து கொண்டு சிவனை வழிபட வேண்டும். மறுநாள் காலையில் நீராடி சனிக்கிழமை பகல் முழுவதும் உறங்காமல் இருந்து விரதத்தை முடிக்க வேண்டும். சனிக்கிழமை பகலில் தூங்கினால் சிவராத்திரி பலன் முழுமையாக கிடைக்காது. இப்படி முழுமையாக விரதம் கடைப்பிடித்தால் சகல வினைகளும் நெருப்பில் விழுந்த தூசி போல் சாம்பலாகும்.

விரத பலன்கள்

மகா சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுடன், சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அதோடு அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும். உணவு உண்ணாமல் பசியை அடக்குவதன் மூலம், காமம், குரோதம், கோபம், பேராசை பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். வாழ்வில் செல்வம் வெற்றி ஆகியவற்றை பெற விரும்புவோர், அவசியம் சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும்.

- பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

மகா சிவராத்திரியில் நடந்த நிகழ்வுகள்

உலகம் முழுவதும் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்ட காலத்தில், அன்னை பார்வதி உலக உயிர்களுக்காக தவம் இருந்து இறைவனை பூஜித்தார். அந்த இரவே ‘சிவராத்திரி’ ஆகும்.

பார்வதிதேவி தவமிருந்து, சிவ பெருமானின் இடப்பாகத்தில் இடம் பெற்றது சிவராத்திரி தினமாகும்.

உமாதேவி சிவபெருமானிடம் ஆகம உபதேசம் பெற்றதும் சிவராத்திரி அன்றுதான்.

பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் தவம் செய்து, சிவபெரு மானிடம் இருந்து ‘பாசுபதம்’ என்னும் அஸ்திரத்தை பெற்றதும் இந்த சிவராத்திரி தினமே.

மார்க்கண்டேயனுக்காக, எமதர்மனையே சிவபெருமான் சம்ஹாரம் செய்த நாள் இது.

பகீரதன் ஒற்றைக் காலில் கடுந்தவம் புரிந்து, கங்கையை பூமிக்குக் கொண்டு வந்ததும் சிவராத்திரி தினத்தில்தான்.

கண்ணப்ப நாயனார், குருதி வடியும் லிங்க வடிவிலிருந்த ஈசனின் கண் மீது தன் கண்களைப் பொருத்தி முக்தி அடைந்ததும் இன்னாளே.

பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும், லிங்க ரூபமாக சிவபெருமானின் அருள் வழங்கிய நாள் மகா சிவராத்திரி.

நான்கு கால பூஜையும்.. பலன்களும்..

சிவராத்திரி அன்று 4 கால பூஜை என்பது விசேஷம். அந்த நான்கு ஜாமம் என்பது மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான காலகட்டமாகும். மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முதல் ஜாமம். இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இரண்டாம் ஜாமம். நள்ளிரவு 12 மணி முதல் முற்பகல் 3 மணி வரையானது, மூன்றாம் ஜாமம். அதைத் தொடர்ந்து காலை 6 மணி வரையான, மூன்று மணி நேரமும் நான்காம் ஜாமம் என்று பிரிக்கப்படுகிறது. இந்த நான்கு ஜாம பூஜை மற்றும் அதன் பலன்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

முதல் ஜாமம்

முதல் ஜாமத்தில் பிரம்மதேவன், சிவனை பூஜிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் சிவபெருமானை ரிக்வேத பாராயணம் செய்து வழிபட வேண்டும். இதனால் ஜனன ஜாதகத்தில் உள்ள கடுமையான விதிப்பயன்கள், ஜாதக ரீதியான தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பிறவா நிலையை அடைய முடியும்.

இரண்டாம் ஜாமம்

இந்த ஜாமத்தில் மகாவிஷ்ணு, சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். விஷ்ணுவுக்கு உகந்த திருவோணம் நட்சத்திரம், இந்த சிவராத்திரி நாளில் கூடி வருவது கோடி புண்ணியம் தரவல்லது. இந்த இரண்டாம் ஜாம வேளையில், யஜூர் வேத பாராயணம் செய்து சிவனை வழிபட வேண்டும். இதனால் வறுமை, கடன் தொல்லை, சந்திர தோஷம் நீங்கும். சந்திர தசை, சந்திர புத்தி நடப்பவர்களுக்கு மன உளைச்சல் குறையும். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு, இரண்டாம் ஜாம பூஜையின் அபிஷேக நீரை பருக கொடுத்தால் சித்த சுத்தி உண்டாகும் என்பது நம்பிக்கை.

மூன்றாம் ஜாமம்

மூன்றாம் கால பூஜையை சக்தியின் வடிவான அம்பாள் செய்வதாக ஐதீகம். மகா சிவராத்திரியின் உச்ச கட்ட வழிபாட்டு நேரம் இது. இதனை ‘லிங்கோத்பவ காலம்’ என்றும் கூறுவர். இரவு 11.30 மணி முதல் 1 மணி வரையான இந்த நேரத்தில்தான், அடிமுடியாக நின்ற ஈசன், மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் லிங்க ரூபமாக காட்சியளித்தார். மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் லிங்கோத்பவ காலத்தில் இறைவனுக்கு நெய் பூசி, வெந்நீரால் அபிஷேகம் செய்து, கம்பளி ஆடை அணிவித்து, மலர்களினால் அலங்கரிக்க வேண்டும். அதோடு சாமவேத பாராயணம் மற்றும் சிவ சகஸ்ர நாமம் உச்சரிக்க வேண்டும். தமிழ் வேதமான தேவாரத்தில் உள்ள ‘இருநிலனாய் தீயாகி..’ எனும் பதிகத்தையும் பாராயணம் செய்யலாம். இதனால் சகல பாவங்களும் நீங்குவதோடு, எந்த தீய சக்தியும் அண்டாது சிவசக்தியின் அருள் நம்மை காக்கும்.

நான்காம் ஜாமம்

முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்களும், மனிதர்களும், அனைத்து ஜீவராசிகளும் நான்காவது காலத்தில் சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். பொழுது புலரும் அதிகாலை வேளையில், அதர்வண வேத பாராயணம் செய்து சிவனை வழிபட வேண்டும். இதனால் நம் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். இல்லறம் நல்லறமாகும். பட்டங்களும், பதக்கங்களும், பதவியும் தேடி வரும்.


Next Story