சிவலிங்க பூஜையும், பலன்களும்


சிவலிங்க பூஜையும், பலன்களும்
x
தினத்தந்தி 18 Feb 2020 9:50 AM GMT (Updated: 18 Feb 2020 9:50 AM GMT)

* பவள லிங்கத்தை வழிபட்டால் நோய்கள் தீரும் * ரத்தின லிங்கத்தை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உருவாகும். * உலோகத்தால் ஆன லிங்கத்தை வழிபட்டால் எதிர்ப்புகள் அகலும் * கல்லினால் ஆன லிங்கத்தை வழிபட்டால் கல்வி, கலைகளில் தேர்ச்சி கிட்டும்

ஜோதிர் லிங்கங்கள்

ராமநாதர், மல்லிகார்ஜுனர், பீமசங்கரர், த்ரயம்பகேஸ்வரர், குஷ்மேஸ்வரர், சோமநாதர், நாகேஸ் வரர், சம்காரேஸ்வரர், மஹா காளேஸ்வரர், வைத்யநாதர், விஸ்வேஸ்வரர், கேதாரநாதர்.

ஆச்சரியம் மிகு வாழ்வுதரும் அபிஷேகம்

தெய்வங்களுக்கு சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய்தால், நினைக்கின்ற காரியங்கள் நிறைவேறும். சிவ வழிபாட்டில் ஒற்றைப் படையிலும், விஷ்ணு வழிபாட்டில் இரட்டைப் படையிலும் தண்ணீர் குடம் அமைவது சிறப்பானது. வாழ்க்கை சுகமாகவும், சுவையாகவும் மாறவும், பாவங்கள் விலகவும் இறைவனுக்கு அபிஷேகம் செய்யலாம். பசுவின் பால், தயிர், நெய், கோமியம், சாணம் ஆகிய ஐந்தும் இணைந்த பஞ்ச கவ்யத்தால், இறைவனுக்கு அபிஷேகம் செய்தால் பாவங்கள் அகலும்.

சர்ப்ப தோஷத்திற்கு தீர்வு

ஆதிசேஷன் பூலோகத்தை தன் தலையில் சுமந்து, தன் பலம் அனைத்தையும் இழந்து தவித்தார். ஒருமுறை அவர் மகா சிவராத்திரி அன்று முதல் ஜாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமியையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரம் பாம்புரநாதரையும், நான்காம் ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் தரிசித்தார். அப்போது சிவபெருமான் பூமி முழுவதையும் தாங்கும்படியான வலிமையை அவருக்கு வழங்கினார். எனவே சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களிலும் வழிபாடு செய்தால், சர்ப்ப தோஷங்கள், ராகு- கேதுவால் ஏற்படும் திருமணத் தடை, குழந்தை பாக்கியமின்மை போன்ற பாதிப்புகள் நீங்கும்.

வில்வ மகிமை

சிவபெருமானுக்கு உகந்ததாக வில்வ இலை போற்றப்படுகிறது. சிவபெருமானுக்கு ஒரு வில்வ இலையை அர்ப்பணித்தால் சிவலோக பதவியும், இரண்டு இலை அர்ப்பணம் செய்தால் சிவன் அருகிலேயே இருக்கும் பாக்கியமும், மூன்று இலையை அர்ப்பணித்தால் அந்த ஈசனின் உருவத்தையும், நான்கு இலை அர்ப்பணம் செய்தால், சிவனுக்குள் ஐக்கியமாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. வில்வ இலையால் சிவனை பூஜிப்பதால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். பஞ்ச மகா பாதகங்கள் நீங்கும்.

குத்து விளக்கில் வைக்கப்படும் பொட்டு

குத்துவிளக்கு வழிபாட்டின்போது விளக்கில் எட்டுப் பொட்டுகள் வைக்க வேண்டும். விளக்கின் உச்சியில் ஒரு பொட்டு, பீடத்தில் 3 பொட்டு, நடுத்தண்டில் 2 பொட்டு, அடிப்பகுதியில் 2 பொட்டு, மொத்தம் 8 பொட்டுகள் வைக்க வேண்டும். கலக்கத்தைப் போக்குவது குத்து விளக்கு வழிபாடுதான்.

Next Story