இனிய வாழ்வு தரும் இறை நம்பிக்கை: திருமணம் முடிப்பது நபிமார்களின் வழிமுறை
இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘திருமணம் முடிப்பது நபிமார்களின் வழிமுறை’ குறித்த தகவல்களை காண்போம்.
இஸ்லாம் ஆதரிக்கும் நற்கருமங்களில் ஒன்று திருமணம் முடிப்பது ஆகும். இறைவனை அடைவதற்கு திருமணம் தடையேதும் இல்லை. அனைத்து நபிமார்களும், இறைநேசர்களும் திருமணம் புரிந்து, அழகான குழந்தைகளை பெற்றெடுத்து, இல்லறத்தை நல்லறமாகவும், இறைவணக்கத்தை திருப்திகரமாகவும் அரங்கேற்றி வந்திருக்கிறார்கள்.
திருமணம் என்பதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதி என்பதால்தான் முதல் நபி ஆதம் (அலை) அவர்களிலிருந்து, இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வரைக்கும் திருமணம் புரிந்து பூரண இறைநம்பிக்கையுடன் வாழ்ந்து சென்றுள்ளார்கள்.
திருமணத்தை இஸ்லாம் உடல்சார்ந்த இறைநம்பிக்கையாக பாவிக்கிறது. உள்ளத்தால் தியானிப்பது மட்டுமே இறைநம்பிக்கை அல்ல. உடலாலும் கட்டுக்கோப்பாக, ஒழுக்கமாக இருப்பதும் இறைநம்பிக்கைதான்.
மனிதன் தமது ஒவ்வொரு உறுப்புகளுக்கும் செய்ய வேண்டிய கடமையும், உரிமையும் உண்டு. அந்தந்த உறுப்புகளுக்கு அதன் கடமையையும், உரிமையையும் நிறைவேற்றியே ஆக வேண்டும்.
‘நல்லதை ஏவுதலும் தர்மமே; தீயதைத்தடுத்தலும் தர்மமே; உங்களில் ஒருவர் தமது பாலுறுப்பி(னைப் பயன்படுத்துகின்ற விதத்தி)லும் தர்மம் உண்டு’ என்று நபி (ஸல்) கூறினார்கள். அப்போது மக்கள், ‘இறைவனின் தூதரே, எங்களில் ஒருவர் தம் மனைவியிடம் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் நன்மை கிடைக்குமா?’ என்று கேட்டனர். அதற்கு நபிகளார் ‘நீங்களே சொல்லுங்கள்: தடை செய்யப்பட்ட வழியில் அவர் தமது இச்சையைத் தீர்த்துக் கொண்டால் அவருக்குக் குற்றம் உண்டல்லவா. அவ்வாறே அனுமதிக்கப்பட்ட வழியில் அவர் தமது இச்சையை நிறைவேற்றிக் கொள்ளும்போது அதற்காக அவருக்கு நன்மை கிடைக்கவே செய்யும்’ என்று விடையளித்தார்கள்’. (அறிவிப்பாளர்: அபூதர் (ரலி), நூல்: முஸ்லிம்)
‘ஒருவர் திருமணம் புரிந்தால், அவர் இஸ்லாமிய மார்க்கத்தின் பாதியை பரிபூரணமாக்கிவிட்டார். மீதி பாதியில் அவர் இறைவனை அஞ்சிக்கொள்ளட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்: பைஹகீ)
‘எவர் திருமணம் புரிகிறாரோ அவர் இறைநம்பிக்கையின் பாதியை பரிபூரணமாக நிறைவேற்றிவிட்டார். மீதி பாதியில் அவர் இறைவனை பயந்து நடந்து கொள்ளட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்: தப்ரானீ)
திருமணத்தின் மூலமாக தகாத பார்வைகள் தவிர்க்கப்படுகிறது. கற்பும் பாதுகாக்கப்படுகிறது. இது இறைநம்பிக்கையின் முன்னேற்றமாகும்.
‘இளைஞர்களே, தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், அது தகாத பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். அதற்கு இயலாதோர் நோன்பு நோற்கட்டும். ஏனெனில், நோன்பு ஆசையைக் கட்டுப்படுத்தக்கூடியதாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி)
இஸ்லாமிய ஆன்மிகம் என்பது அதனுள் திருமணமும் அடங்கும். இதனால்தான் இஸ்லாம் துறவறத்தை வெறுக்கிறது. இல்லறத்தை ஆதரிக்கிறது.
‘உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) துறவறம் மேற்கொள்ள விரும்பி நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டபோது நபியவர்கள் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டார்கள்’. (அறிவிப்பாளர்: ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி), புகாரி)
திருமணம் நடைபெறாத பட்சத்தில், திருமணம் முடிப்பதற்கு திருமணக்கொடை ஏதும் இல்லாத நிலையில் ஒருவர் தவறான பாதைக்கு சென்று விடுவது சுலபமானது. இதிலிருந்து அவர் பாதுகாப்பு பெற சிறந்த வழி திருமணமே.
பெண்களை மணந்து கொள்வதற்கு ஆண்மை மட்டும் போதாது. அவளுக்குரிய திருமணக்கொடையையும், அவளுக் குரிய செலவினங்களை கொடுப்பதற்கும் திராணி இருக்க வேண்டும். ஏதேனும் வேலை வாய்ப்பை பெற்றிருக்க வேண்டும். மணப்பெண்ணிடமிருந்தோ, மணப்பெண் வீட்டாரிடமிருந்தோ வரதட்சணை வாங்குவதை இஸ்லாம் தடை செய்கிறது. வரதட்சணை அது ரொக்கமாகவோ, நகையாகவோ, வாகனமாகவோ, வீடாகவோ... அவை எந்த ரூபத்தில் வந்தாலும் மணமகன் வாங்கவும் கூடாது; மணப்பெண் வீட்டார் வழங்கவும் கூடாது.
பெண்கள் என்பவர்கள் பெறுபவர்கள்; பெற்றுக் கொடுப்பவர்கள். ஆண்கள் கொடுப்பவர்கள். திருமண விஷயத்திலும் ஆண்களே மணப்பெண்களுக்கு ‘மஹர்’ எனும் திருமணக் கொடையை கொடுத்தே மணம் புரிய வேண்டுமென திருக்குர்ஆன் உத்தரவிடுகிறது.
‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள், அவர்களாக மனமுவந்து அதில் ஏதேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மனமகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்’. (திருக்குர்ஆன் 4:4)
‘மஹர்’ கொடுத்து நபி (ஸல்) அவர்கள் பெண்களை மணந்து கொண்டது, இந்த சமுதாயத்திற்கு சிறந்த ஒரு முன்மாதிரி ஆகும். மணமகன் ‘மஹர்’ கொடுக்காமல் ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடியாது என இஸ்லாம் தீர்க்கமான தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும், மணக்கொடை வழங்கிய மணமகன்தான், மணவிருந்தும் அளிக்க வேண்டும். இன்றோ திருமண விருந்தை மணமகன் வீட்டார், மணப்பெண் வீட்டாரின் தலையில் சுமத்துவதை காண்கிறோம். இதுவும் ஹராம் ஆகும்.
திருமணத்தை இஸ்லாம் ஒரு சடங்காக மட்டுமே பார்க்கவில்லை. அதை ஒரு வணக்கமாகவும், இறைநம்பிக்கையாகவும் வைத்து அழகு பார்க்கிறது. எனவேதான் திருமணத்தை இறையில்லங்களில் நடத்தும்படி விரும்புகிறது.
‘திருமணத்தை நீங்கள் பகிரங்கமாக அறிவிப்பு செய்யுங்கள். மேலும், அதனை பள்ளிவாசல்களில் நடத்திக் கொள்ளுங்கள். அதற்காக (சலங்கை இல்லாத) தப்பட்டம் அடித்துக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: திர்மிதி)
இறையில்லங்களில் நடக்கும் இஸ்லாமிய திருமணமாகட்டும், அல்லது திருமண மஹால்களில் நடக்கும் திருமணமாகட்டும் எளிமையாகவே நடத்திடும்படி இஸ்லாம் கேட்டுக்கொள்கிறது.
‘செலவில் குறைந்த திரு மணமே அபிவிருத்தியில் நிறைந்ததாக அமையும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: ஹாகிம்)
இஸ்லாமிய திருமணத்தை பொறுத்த அளவில் ஆடம்பரமோ, பிரமாண்டமோ, தடபுடலான விருந்தோ, சீர்வரிசையோ இவற்றில் எதுவுமே முக்கியமானது அல்ல. மணமகனும், மணப்பெண்ணும் இறைநம்பிக்கை உடையவர்களாகவும், மார்க்கப்பற்று நிறைந்தவர்களாகவும் இருப்பதே முக்கியம். இப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் இணையும் போது அவர்களால் வாழ்க்கையின் அனைத்து துன்பங்களையும் இன்பங்களாகவும், தடைக்கற்களை உயர செல்லும் படிக்கற்களாகவும் மாற்றமுடியும்.
‘இந்த உலகம் யாவும் சிற்றின்பமாகும். இந்த உலக சிற்றின்பத்தில் சிறந்தது நல்ல பெண் மனைவியாக வாய்ப்பதாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்பின் அம்ர்பின் ஆஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)
‘நான்கு பாக்கியங்கள் வழங்கப்பட்டவர், ஈருலகின் நன்மை யாவும் வழங்கப்பட்டவர் ஆவார். அவை: 1) நன்றி கூறும் உள்ளம், 2) இறைதுதி பாடும் நாவு, 3) சோதனையில் சகித்துக் கொள்ளும் உடல், 4) கணவனின் உடமைக்கும், தமது மானத்திற்கும் பங்கம் விளைவிக்காத மனைவி என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), பைஹகீ)
அழியும் உலகில் ஆனந்தமாக வாழ, அழகான துணையை தேர்ந்தெடுத்து, மனநிறைவுடன் வாழ, மனஅமைதி பெற வழி காண்போம்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
Related Tags :
Next Story