துபாயில் உருவாகிவரும் பிரமாண்ட இந்து ஆலயம்
பொதுவாக வளைகுடா நாடு என்றதும், அரபு நாட்டு கலாசாரம் மற்றும் பாரம்பரியம் மட்டுமே நினைவிற்கு வரும். ஆனால் அமீரகம் அதில் விதிவிலக்காக, மத நல்லிணக்கத்திற்கு மிகப்பெரிய சான்றாக விளங்கி வருகிறது. இந்த நாட்டில் மற்ற மதங்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இந்து கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், சீக்கிய குருத்துவார் மற்றும் புத்தர் கோவில் உள்ளிட்ட பலவற்றிற்கு உரிய அனுமதி வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.
200 நாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழும் இந்த நாட்டில், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட மத நம்பிக்கைகளுக்கு மதிப் பளித்து வருவது சிறப்பாகும்.
இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, அபுதாபியில் பிரமாண்ட இந்து ஆலயம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதியையும், இடத்தையும் வழங்கியிருக்கிறது அமீரகம். அந்த இந்துக் கோவிலானது சாதாரணமாக அல்லாமல், சிறப்பான கட்டிடக்கலையில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் உருவாகும் விதம் மற்றும் அதன் கட்டு மானத்தில் உள்ள வியப்பூட்டும் தகவல்களை இங்கு பார்ப் போம்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த பாப்ஸ் (போச்சசன்வாசி ஸ்ரீ அக்ஷார் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா) என்ற அமைப்பு சார்பில் பல்வேறு வெளிநாடுகளில் இந்து கோவில்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்தியா உள்பட இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் மொத்தம் 1,200 கோவில்களை இந்த அமைப்பு கட்டி நிர்வகித்து வருகிறது.
தற்போது இந்த அமைப்பு சார்பில் அரபு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் முதல் முறையாக, அபுதாபியில் பிரமாண்டமான இந்து கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமீரகத்திற்கு முதல் முறையாக வருகை புரிந்தார்.
அப்போது அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக மோடியின் வேண்டு கோளுக்கு இணங்க அபுதாபியில் இந்து கோவில் ஒன்று கட்டுவதற்கு அமீரக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் துபாய்- அபுதாபி, ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 27 ஏக்கர் இடம், அபுதாபி அரசு சார்பில் கோவில் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பிறப்பித்தார்.
இந்த கோவிலின் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கும், நிர்வாகம் செய்வதற்கும் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரைச் சேர்ந்த பாப்ஸ் அமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது. அபுதாபிக்கு கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் வருகை புரிந்த இந்திய பிரதமர் மோடி, பாப்ஸ் அமைப்பின் நிர்வாகிகளை சந்தித்து கோவில் கட்டுமான திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த நிலையில் அதன் அடிக்கல் நாட்டு விழாவானது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ந் தேதி அபுதாபியில் நடைபெற்றது. இந்த கோவிலின் அடிக்கல் நாட்டு விழாவை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் அந்த கோவில் கட்டுமானத்திற்கான மாதிரி வடிவத்தை, பிரதமர் மோடி துபாய் ஒபெரா ஹவுஸ் அரங்கத்தில் நடைபெற்ற இந்தியர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் திறந்து வைத்தார். இதே தோற்றத்தில் அமெரிக்காவின் நியூஜெர்சி நகரத்திலும் ஒரு இந்து கோவில் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அபுதாபியில் கட்டப்படும் ஆலயமானது, இந்திய பாரம்பரிய முறைப்படி கட்டமைக்கப்பட உள்ளது. எனவே இதற்காகஇந்தியாவில் இருந்து கைதேர்ந்த 3 ஆயிரம் சிற்பக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கூடுதலாக இன்னும் சில நாட்களில் கோவில் கட்டுமான பணிகளை பற்றி அறிந்துகொள்ளும் விதத்தில் பிரத்யேக இணையதளம் ஒன்று உருவாக்கப்பட இருக்கிறது. இதில் பொதுமக்கள் அனைவரும், கோவில் கட்டுமான பணிகளின் வளர்ச்சியை பார்த்து அறிந்து கொள்ள வசதி செய்து தரப்பட இருக்கிறது. இந்த இணையதளத்தில் மந்திர் லிமிடெட் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று இந்த கோவிலுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நிதி வசூல் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த கோவில் நிதிக்கு வாட் வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடல் கடந்து தேசம் கடந்து மனித உணர்வுகளை மதநல்லிணக்கத்தோடு உருவாக்கப்படும் இந்த இந்துக் கோவில் வளாகம், அமீரகத்தின் சகிப்புத்தன்மைக்கு சான்றாக வரலாற்றில் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.
கட்டிட அமைப்பு
இந்த பிரமாண்ட இந்து கோவிலின் கட்டுமான பணிகள் இந்த மாதம் (பிப்ரவரி) தொடங்கியது. இந்த கட்டிடத்தின் சிறப்பம்சமாக 3 ஆயிரம் கன மீட்டர் அளவில் கான்கிரீட் கலவை பயன்படுத்தப்படுகிறது.
இதில் துருபிடிக்கும் இரும்பு கம்பிகள் மற்றும் தளவாடங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதிலாக பிளை ஆஷ் எனப்படும் நவீன சிமெண்ட் போன்ற பொருளுடன் கலந்து கான்கிரீட் தயார் செய்யப்படுகிறது. இந்த கோவிலில் 5 ஆயிரம் டன் எடையுள்ள இத்தாலி கராரா மார்பிள் சலவை கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல கட்டிட வெளிப்புற தோற்றத்திற்காக 12 ஆயிரத்து 250 டன் எடையுள்ள இளஞ்சிவப்பு கற்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த பிரமாண்ட கோவில் கட்டிடமானது 10 அடுக்குகளாக பிரிக்கப்பட்டு, அதில் 300 உயர்தரத்திலான உணரும் கருவிகள் பொருத்தப்பட உள்ளது. இந்த கருவிகள் புவிசார் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கக்கூடியது. இந்தக் கருவியைக் கொண்டு, அந்த கட்டிடத்தின் அடுத்த 50 ஆண்டுகளில் ஏற்படும் அழுத்தம், தட்பவெப்பநிலை, கட்டிட உறுதித்தன்மை, விரிசல்கள் உள்ளிட்ட அனைத்தும் கண்காணிக்கப்படும். இந்த தொழில்நுட்ப ஏற்பாடுகளை அபுதாபி கலீபா பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கோவில் வளாகத்தில் பார்வையாளர்கள் மையம், பிரார்த்தனை கூடங்கள், கண்காட்சி அரங்குகள், கற்றல் பகுதி, இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு திடல்கள், அழகிய பூங்காக்கள், தண்ணீர் பூங்காக்கள், உணவு அருந்தும் கூடங்கள், புத்தகங்கள் மற்றும் அன்பளிப்பு விற்பனை கடைகள் உள்பட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. பிரமாண்டமான வாகனங்கள் நிறுத்தும் இடம் இந்த வளாகத்தின் முன்னால் அமைக்கப்பட உள்ளது. இந்த வளாகத்தில் அனைத்து இந்து விழாக்களையும் கொண்டாடலாம்.
- மர்யம்.சா
Related Tags :
Next Story