கணவனைக் காக்கும் காரடையான் நோன்பு


கணவனைக் காக்கும் காரடையான் நோன்பு
x
தினத்தந்தி 10 March 2020 9:15 AM GMT (Updated: 10 March 2020 9:15 AM GMT)

திருமணமான பெண்கள் கடைசிவரை கற்புநெறி தவறாது வாழ்ந்து, கணவனுக்கு பணிவிடை செய்து அவனுக்கு முன்பாக இறைவனை அடையவேண்டும் என வேதம் உரைக்கின்றது.

திருமணமான பெண்கள் கடைசிவரை கற்புநெறி தவறாது வாழ்ந்து, கணவனுக்கு பணிவிடை செய்து அவனுக்கு முன்பாக இறைவனை அடையவேண்டும் என வேதம் உரைக்கின்றது. அதன்படி வாழ விரும்பிய ஒரு பெண், அற்ப ஆயுள் கொண்ட தன் கணவனின் உயிரை பறித்துச் சென்ற எமனிடம் வாதாடி, கணவனை உயிர்பிழைக்க வைத்து, தன் மாங்கல்ய பாக்கியத்தை நிலைநிறுத்திக் கொண்டாள்.

அவளைப் போற்றும் விதமாகவும், தங்களது கணவர்களுக்கு அதுபோன்ற இடையூறுகள் வராமல் இருக்கவும் ஒவ்வொரு பெண்களும் அனுஷ்டிக்கும் விரதமே ‘காரடையான் நோன்பு’ ஆகும். மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் தொடங்கும் வேளையில் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து, பங்குனி முதல் நாள் காலையில் இந்த விரதத்தை முடிப்பார்கள். இந்த நோன்பை ‘காமாட்சி நோன்பு’, ‘கேதார கவுரி விரதம்’, ‘சாவித்திரி விரதம்’ என்றும் சொல்வார்கள்.

சத்தியவான் சாவித்திரி ஆகிய இருவரும்தான், இந்த விரதத்தின் நாயகன், நாயகியர். நெடுநாட்கள் பிள்ளைப் பேறு இல்லாமல் இருந்த மந்திரதேசத்து மன்னன் அசுவபதி, மகப்பேறு கிடைப்பதற்காக தான தர்மங்கள் செய்து வந்தான். அதன் பயனாக அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. சகல சாமுத்திரிகா லட்சணங் களையும் கொண்டிருந்த அந்தக் குழந்தைக்கு ‘சாவித்திரி’ என்று பெயரிட்டு வளர்த்தான்.

அவளுக்கு எட்டு வயதானபோது அசுவபதியின் அரண்மனைக்கு வந்த நாரதர், தாய் - தந்தையரை தெய்வமாக மதிக்கும் ஒருவனை அவள் மணந்து கொள்வாள் என்றும்; அவளது கணவனாக வருபவன் 21 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வான் என்றும் கூறிச் சென்றார். ‘அழகிலும் வீரத்திலும் சிறந்த தன் மகளுக்கு இப்படியொரு நிலையா?’ என கவலைப்பட்ட மன்னன், இறைவனை சரணடைந்தான். பின்னர் எது நடந்தாலும் நடக்கட்டும் என உரிய பருவம் வந்ததும் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்தான். அவள் விருப்பத்திற்கு மணமகனை தேர்வு செய்ய அனுமதித்தான்.

சாவித்திரி தேரில் அமர்ந்து தன் தந்தை நியமித்திருந்த மெய்க்காப்பாளர், அரசவை பரிவாரம், முதியோர் ஆகியோர் புடைசூழ, பல இடங் களுக்குப் பயணம் செய்தாள். இடையிடையே பல அரசவைகளிலும் இறங்கி பல இளவரசர்களையும் கண்டாள். ஆனால் அவள் உள்ளம் கவரும் மணவாளனாக யாரும் இருக்கவில்லை. இறுதியாக கொடிய விலங்குகள் வசிக்கும் கானகத்தில் ஒரு ஆசிரமம் தென்பட அங்கு சென்றாள். மனிதர்களைக் கண்டு பயப்படாத விலங்குகள், மனிதன் தரும் இரையை நேரடியாக வந்து வாங்கித்தின்ற ஏரி மீன்கள், மனிதர்களின் தோளில் அமர்ந்த பறவைகள் என வித்தியாசமான காட்சியைக் கண்டாள். அந்த இடம் அவளுக்குப் பிடித்துப் போய்விட அங்கேயே சில நாட்களுக்கு முகாமிட எண்ணினாள்.

அப்போதுதான் சாளுவதேசத்து மன்னன் துயமத்சேனன் என்பவனின் மகனும், இளவரசனுமான சத்தியவானைப் பார்த்தாள். துயமத்சேனன் சாளுவதேசத்தில் சிறந்த ஆட்சியைத் தந்தார். ஆனால் வயதானவுடன் கண்பார்வை குறைய, எதிரிகள் அவரைத் தோற்கடித்து நாட்டை கைப்பற்றிக் கொண்டனர். துயமத்சேனன் தன் மனைவி, இளவயது மகன் ஆகியோருடன் காட்டில் வாழத் தொடங்கினார்.

சத்தியவானுக்கு தந்தை இழந்த நாட்டைத் திரும்பப் பெற்று அரசாளவேண்டும் என்ற ஆசை இருந்தாலும், வயதான பெற்றோர்களை தனித்து விட்டு செல்ல முடியாமல, அவர்களுக்கு பணிவிடை செய்தவாறு காட்டி லேயே காலத்தைக் கழித்தான். சத்தியவானின் செயல் சாவித்திரியைக் கவர, அவன்மீது காதல் கொள்கிறாள். அவனையே திருமணம் செய்வதென்று முடிவும் செய்கிறாள்.

இதை அறிந்ததும் தன் மகளின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார், அசுவபதி. அதற்கு முன்னதாக நாரதர் மூலமாக உண்மையை சாவித்திரியிடம் கூறச் செய்கிறார். சாவித்திரியோ, சத்தியவானை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தாள். வேறுவழியின்றி திருமணம் நடைபெறுகிறது. அரண்மனைவாசியான அவள், காட்டிற்குச் சென்று பல சிரமங்களை அனுபவித்தாலும் அதை ஏற்றுக் கொண்டாள். தன் கணவனின் வாழ்நாள் அதிகரிக்க பல விரதங்களையும், நோன்பு களையும் அனுஷ்டித்தாள்.

இருப்பினும் நாரதர் கூறியிருந்தபடி சத்தியவானின் இறுதிநாள் வந்தது. அன்று சாவித்திரி தடுத்தும் கேளாமல் அவன் விறகு சேகரிக்க காட்டுக்குப் புறப்பட்டான். சாவித்திரியும் உடன் சென்றாள். நண்பகல் வேளையில் சாவித்திரியின் மடியில் தலைவைத்து படுத்திருந்த சத்தியவானின் உயிரை, எமதர்மன் பறித்துச் சென்றார்.

சாவித்திரியின் கற்புத் திறத்தால், எமதர்மரின் உருவம் அவள் கண் களுக்குத் தெரிந்தது. அவள் தன் கணவனின் உடலைக் கீழே கிடத்தி விட்டு, எமனைப் பின்தொடர்ந்தாள். அவளது காலடி ஓசை கேட்டுத் திரும்பிய எமன், அவள் தலை சிறந்த கற்புக்கரசி என்பதாலும், கணவன் இறப்பான் என்று தெரிந்தும், தைரியத்துடன் அவனை திருமணம் செய்து கொண்டதாலும், பார்வையற்ற முதியவர்களுக்கு தளராத சேவை செய்தவள் என்பதாலும் அவளுக்குக் காட்சி தந்து, அவளை திரும்பிப் போகச் சொன்னார்.

எமதர்மரின் பாதங்களில் விழுந்து சாவித்திரி வணங்கினாள். அவளை “தீர்க்க சுமங்கலி பவ” என்று எமன் வாழ்த்தினார்.

அதற்கு சாவித்திரி “நீங்கள் வாழ்த்தியது உண்மையானால் அதன்படி நான் வாழ அருள்புரியுங்கள். நான் என் கணவருடன் வாழ விரும்புகிறேன். நான் பதிவிரதை என்பது உண்மையானால், அவரது உயிரைத் திருப்பித்தர வேண்டும்” என்று கேட்டாள்.

சாவித்திரியின் புத்திசாலித்தனத்தை ரசித்த எமதர்மர், “இறப்புக்குப் பிறகு யாருக்கும் வாழ்வு கிடையாது. எனவே நீ கேட்பதை என்னால் செய்ய இயலாது. அதற்குப் பதிலாக வேறு எந்த வரம் கேட்டாலும் தருகிறேன்” என்றார்.

சாவித்திரி சமயோசிதமாக, “என் மாமனார், மாமியார் மீண்டும் கண் பார்வை பெறவேண்டும். இழந்த நாட்டை திரும்பப் பெற்று ஆட்சிபுரிய வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும்” என்றாள்.

சற்றும் யோசிக்காத எமதர்மன் அவள்கேட்ட அனைத்து வரங்களையும் தருவதாக வாக்களித்தார். அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சாவித்திரி, “எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே. ஆகவே அவரது உயிரை திரும்பக் கொடுங்கள்” என்று யாசித்தாள்.

சாவித்திரியின் பதிபக்தியை மெச்சிய எமன், “இதுவரை என்னை யாரும் பார்த்ததும் இல்லை. உன் கற்பின் மகிமையால் நீ, என்னைப் பார்த்தது மட்டுமின்றி, என்னிடமே வாதம் செய்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டாய். நீ என்னிடம் கேட்டுப் பெற்ற வரங்கள் அனைத்தும் கிடைக்கும். மாசியும் பங்குனியும் சேரும் சமயத்தில், உன் கணவன் பிழைப்பான். உலகம் உள்ளளவும், உன்னை நினைத்து விரதம் இருப்பவர்களுக்கு உன் ஆசி கிடைக்கட்டும். அந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்கள், மனமொத்த தம்பதியராக வாழ்வார்கள்” என்று அருளாசி கூறி மறைந்தார்.

சாவித்திரி காட்டில் கணவனை விட்டுச் சென்ற இடத்திற்குத் திரும்பி வந்து, அவன் உடலைத் தன் மடியில் கிடத்தினாள். சிறிது நேரத்தில் தூக்கத்தில் இருந்து விழிப்பதுபோல் சத்தியவான் விழித் தெழுந்து, “உன்னைப் போன்ற பெண் ஒருத்தி, என்னை மீட்டு வந்ததாகக் கனவு கண்டேன்'' என்று கூறினான்.

அவன் உயிரை எமன் எடுத்துச் சென்றதையும்; எமனுடன் போராடி அவன் உயிரையும், மேலும் பல வரங்களையும் பெற்று வந்த விவரத்தையும் சாவித்திரி கூறினாள். சாவித்திரியும் சத்தியவானும் தங்கள் குடிலுக்குத் திரும்பி வந்தனர். சாவித்திரி எமனிடம் பெற்ற வரத்தின்படி சத்தியவானின் பெற்றோர் கண்பார்வை பெற்றதுடன் இழந்த நாட்டையும் திரும்பப் பெற்றனர்.

எமனுடன் வாதாடி இறந்த தன் கணவனின் உயிரை மீட்ட சாவித்திரியின் பதிவிரதத்தைப் போற்றவும், உயிருடன் இருக்கும் தங்கள் கணவர்கள், சத்தியவான் போல எவ்வித குறைவுமின்றி நீடூழி வாழ்ந்து தங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அருளவேண்டும் என்பதற்காகவும் பெண்கள் அனுஷ்டிக்கும் விரதமே காரடையான் நோன்பாகும்.

நெய்வாசல் நெடுஞ்செழியன்

காரடையான் நோன்பு இருப்பது எப்படி?

விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு சொம்பில் மாவிலை, தேங்காய் வைத்து, அதற்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்டி, அருகில் இஷ்டமான அம்பாள் படம் வைத்து, அவளை காமாட்சியாக அல்லது சாவித்திரியாக ஆவாஹாகனம் செய்துகொள்ள வேண்டும். கார் அரிசியும், காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனமாக வைத்து வழிபடவேண்டும். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து, கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். பூஜை முடிந்த பிறகு, எருமை மாட்டிற்கு தீவனம் அளிக்க வேண்டும்.

சாவித்திரி அனுஷ்டித்து வந்த நோன்பு, அவளது காலம் வரை ‘கவுரி நோன்பு’ எனக் கூறப்பட்டது. அதன் பின்னர் ‘சாவித்திரி நோன்பு’ என்ற பெயர் பெற்றது. ‘மாசிக்கயிறு பாசி படியும்’ என்பது சொல் வழக்கு. எனவே பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக் கொள்வது விசேஷமானதாகக் கருதப்படுகிறது. திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க, கணவரை நோய் நொடி யின்றி காக்க, இந்த நோன்பு கவசமாக இருக்கிறது. இந்த நோன்பை நோற்பதன் பலனாக சாவித்திரி நூறு பிள்ளைகளுடன் சவுபாக்கிய வசதியாக பல்லாண்டு காலம் வாழ்ந்தாள் என்கிறது புராணம். நாமும் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து சகல சவுபாக்கியங்களும் பெறலாம்.

Next Story
  • chat