இஸ்லாம்: இனிய வாழ்வு தரும் இறை நம்பிக்கை; ‘புனித கஅபாவை வலம் வருவோம், இறையருள் பெறுவோம்’


இஸ்லாம்: இனிய வாழ்வு தரும் இறை நம்பிக்கை; ‘புனித கஅபாவை வலம் வருவோம், இறையருள் பெறுவோம்’
x
தினத்தந்தி 17 March 2020 9:57 AM GMT (Updated: 17 March 2020 9:57 AM GMT)

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70 -க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அதில் ஒன்றான ‘புனித கஅபாவை வலம் வருவோம், இறையருள் பெறுவோம்’ என்பது குறித்த தகவல்களை காண்போம்.

புனித இறையில்லமான கஅபாவை வலம் வருவது உடல் சார்ந்த இறைநம்பிக்கையின் ஓர் அங்கமாக உள்ளது.

புனித ஹஜ், புனித உம்ரா பயணம் மேற்கொள்ளும்போது அதன் ஆரம்ப நிலையான கடமை புனித கஅபாவை ஏழு தடவை வலம் வருவது ஆகும். இது அரபி மொழியில் ‘தவாப்’ என்று அழைக்கப்படுகிறது.

புனித ஹஜ் பயணமும், புனித உம்ரா பயணமும் இறைநம்பிக்கையின் உடல் சார்ந்த அங்கங்களாக இருந்தும், அவற்றில் புனித கஅபாவை வலம் வருவதும் ஒரு வணக்கமாக இருந்தும், தனியொரு அம்சமாக இங்கே குறிப்பிடப்படுவதற்குரிய காரணம் யாதெனில் அதனுள் அடங்கியுள்ள அற்புதமான, பிரத்தியேகமான தனித்தன்மைகள் நிறைந்து காணப்படுகின்றன என்று சொன்னால் அது மிகையாகாது.

உலகில் எழுப்பப்பட்ட முதல் இறையில்லம் கஅபா தான். அந்த கஅபாவை மட்டுமே சுற்றிவர இஸ்லாத்தில் அனுமதியுண்டு. அதைத்தவிர வேறெந்த இறையில்லங்களையும், கட்டிடங்களையும், கல்லறை களையும், மரங்களையும் சுற்றிவர மார்க்கத்தில் அனுமதி இல்லை.

கஅபா எனும் புனித ஆலயம் எழுப்பப்பட்டதற்கு அடிப்படையான மூன்று முத்தான காரணங்கள் உண்டு. 1) அதை வலம் வருதல், 2) அதில் தங்கி (இஃதிகாப்) இருத்தல், 3) அதில் தொழுகையை நிலை நிறுத்துதல். இத்தகைய காரணிகளை இறைவன் இவ்வாறு திருக்குர்ஆனில் விவரிக்கின்றான்:

‘(இதையும் எண்ணிப் பாருங்கள்; ‘கஅபா எனும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும், இன்னும் பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராகீம் நின்ற இடத்தை தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்’ (என்றும் நாம் சொன்னோம்). ‘இன்னும் என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஉ, சுஜூது (தொழுகை) செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்’ என்று இப்ராகீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம்’. (திருக்குர்ஆன் 2:125)

மற்றொரு வசனத்தில்:

‘நாம் இப்ராகீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து ‘நீர் எனக்கு எவரையும் இணை வைக்காதீர்; எனது இந்த ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும், அதில் தொழுவோருக்கும் அதைத் தூய்மையாக வைப்பீராக’ என்று கூறியதை (நபியே! நினைவு கூறுவீராக!)’ (திருக்குர்ஆன் 22:26)

வலம் வரும் முறை

கஅபாவிற்குள் நுழைந்ததும் அதன் தென்கிழக்கு மூலையில் ‘ஹஜருல் அஸ்வத்’ எனும் கருங்கல் பதிக்கப்பட்டிருக்கும். அந்தக்கல் அவரின் வலப்புறம் இருக்கும் வண்ணம் கஅபாவை முன்னோக்கியவாறு அவரது வலது பாகமாக நகர்ந்து வலம் வரவேண்டும். இவ்வாறு அந்தக் கல் இருக்கும் இடத்தை அடைந்ததும் ஒரு சுற்று முடிந்து விடுகிறது. இவ்வாறு ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும். இந்த ஏழு சுற்றுக்கள் நிறைவானதுதான் ஒரு ‘தவாப்’ என்று கூறப்படும்.

‘எவர் கஅபாவை ஏழு முறை சுற்றி வலம் வந்து, மகாமே இப்ராகீமில் (இப்ராகீம் (அலை) நின்ற இடம்) இரண்டு ரகஅத்கள் தொழுதாரோ அவருக்கு ஒரு அடிமையை விடுதலை செய்தது போன்ற நன்மை கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: அஹ்மது)

‘எவர் கஅபாவை சுற்றி வலம் வர, ஒரு காலை முன் வைத்து, அடுத்த காலை உயர்த்துவதற்குள் அவருக்கு பத்து நன்மைகள் எழுதப்படுகின்றன; பத்து பாவங்கள் அழிக்கப்படுகின்றன; பத்து அந்தஸ்துகள் உயர்வாக வழங்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: அஹ்மது, திர்மிதி)

கஅபாவை வலம் வருவது தொழுகையில் ஈடு படுவதற்கு நிகரானது. தொழுகை விஷயத்தில் பேணவேண்டிய உடல் சுத்தம், உடை சுத்தம் போன்ற ஒழுக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். எனினும், தொழுகையில் ஈடுபடும் போது பேசக்கூடாது. ஆனால், வலம் வரும்போது பேச அனுமதியுண்டு. அதில் நல்லதையே பேசி வர வேண்டும். இது குறித்து நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறி வருவதை பார்க்க முடிகிறது:

‘கஅபாவை வலம் வருவதெல்லாம் தொழுகை போன்றதுதான். எனவே நீங்கள் வலம் வந்தால், பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்’ (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: நஸயீ).

மற்றொரு நபிமொழியில் வருவதாவது:

‘கஅபாவை சுற்றி வலம் வருவது தொழுகையைப் போன்றதாகும். எனினும், வலம் வரும்போது நீங்கள் பேசிக் கொள்கிறீர்கள். எனவே, எவர் அதில் பேசுவாரோ அவர் அதில் நல்லதைத் தவிர பேச வேண்டாம் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: திர்மிதி)

‘கஅபாவைச் சுற்றியும், ஸபா-மர்வா இடையேயும் (தவாப்) வலம் வருதல் ஏற்படுத்தப்பட்டதெல்லாம் இறைவனை நினைவு கூர்வதை நிலை நிறுத்துவதற்காகத்தான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: சுயூதி)

வலம் வருதல் (தவாப்) பல வகைகள் உண்டு. அவை:

1) உம்ராவுக்கான வலம் வருதல் ‘தவாபுல் உம்ரா’ ஆகும்,

2) உம்ராவையும், ஹஜ்ஜையும் ஹஜ் காலங்களில் நிறைவேற்றும் போது, மக்கா வந்து இறங்கியதும் நேராக புனித கஅபாவுக்கு வந்து, தமது வருகைக்கான காணிக்கையாக கஅபாவை வலம் வரவேண்டும். இதற்கு ‘தவாபுல் குதூம்’ என்று பெயர்.

3) ஹஜ்ஜூக்குரிய கடமையான வலம் வருதல் ஆகும். இதை நிறைவேற்றாமல் போனால் ஹஜ் எனும் கடமை நிறைவேறாது. இது ஹஜ்ஜூடைய கிரியைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இதற்கு ‘தவாபுல் இபாளா’ என்று பெயர்.

4) ஹஜ் கடமையை முழுமையாக நிறைவேற்றிய பின்பு, மக்காவிலிருந்து தாயகம் திரும்புவதற்கு முன்பு நேராக கஅபா சென்று அதைச் சுற்றி வலம் வரவேண்டும். கஅபாவிற்கு பிரியாவிடை கொடுப்பதற்காக நிறைவேற்றும் இந்த வலம் வருதலுக்கு ‘தவாபுல் விதாஆ’ என்று பெயர்.

5) ஒருவர் ஏதேனும் நேர்ச்சை செய்து, அது நிறைவேறும்பட்சத்தில், கஅபாவை வலம் வரவேண்டும் என மனதில் உறுதிபூண்டிருந்தார். அவரின் தேவை நிறைவேறியதும் புனித கஅபாவை வலம் வரவேண்டும். அதற்கு ‘தவாபுன் நத்ர்’ என்று பெயர்.

6) மேலும், உபரியான முறையில் எவ்வளவு வேண்டுமானாலும் புனித கஅபாவை வலம் வரலாம். இதற்கு ‘தவாபுத் ததவ்வுயி’ என்று பெயர்.

மேற்கூறப்பட்ட இரண்டு வலம் வருதலும் ஹஜ், மற்றும் உம்ரா அல்லாத காலங்களிலும் நிறைவேற்றலாம். இவ்விரண்டையும் நிறைவேற்றுவதற்கு ‘இஹ்ராம்’ எனும் தைக்கப்படாத இரு உடைகளை அணிய வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறான ஆறு வகையான வலம் வருதல் உண்டு. இத்தகைய வலம் வருதல் சிறப்பு வேறு எங்கும் காண முடியாது. வேறு எங்கும் நிறைவேற்றவும் முடியாது.

வலம் வரும் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் முன்மாதிரியாக உள்ளார்கள்.

‘நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்து, முதலாவதாக வலம் வரும்போது ‘ஹஜருல் அஸ்வத்’ எனும் கருப்புக் கல்லை முத்தமிடுவார்கள். ஏழு சுற்றுக்களில் முதல் மூன்று சுற்றுகளில் தோள்களை குலுக்கி வேகமாக ஓடுவார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)

‘நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜிலும், உம்ராவிலும் முதல் மூன்று சுற்றுக்களில் ஓடுவார்கள்; மீதமுள்ள நான்கு சுற்றுக்களில் நடந்து செல்வார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)

கஅபாவை சுற்றி வலம் வரமுடியாதவர், நடக்க முடியாதவர் சக்கர நாற்காலியில் அமர்ந்து, ஒருவரின் உதவியுடன் நிறைவேற்றலாம். இதில் எந்தக் குற்றமும் இல்லை.

‘நபி (ஸல்) அவர்கள் தம் இறுதி ஹஜ்ஜில் ஒட்டகத்தின் மீது அமர்ந்து கஅபாவை வலம் வந்தார்கள். அப்போது தலை வளைந்த கம்பால் ‘ஹஜருல் அஸ்வத்’ எனும் கருப்புக் கல்லைத் தொட்டார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)

உலக அழிவு நாள் ஏற்படும் வரைக்கும் புனித கஅபாவில் வலம் வருதல் நடந்து கொண்டேதான் இருக்கும். கஅபாவில் வலம் வருவது இறைநம்பிக்கையை வெளிப்படுத்தும் இன்றியமையாத செயல் ஆகும். அது ஒரு இறைநம்பிக்கையின் அடையாளமாகவும், நினைவுச் சின்னமாகவும் காட்சித் தருகிறது.

‘ஒவ்வொரு நாளும் புனித கஅபாவை ஹஜ் செய்பவர்களின் மீது இறைவன் தமது 120 நற்கிருபைகளை இறக்கி வைக்கிறான். அவற்றில் 60-ஐ வலம் வருபவர்களுக்கும், 40-ஐ அதில் தொழுபவர்களுக்கும், 20-ஐ அதைக் கண்கூடாக காண்பவர்களுக்கும் கிடைக்கிறது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: பைஹகீ)

- மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.

Next Story