திருமணத் தடை நீக்கும் கணபதி மாங்கல்ய பூஜை


பகவதி அம்மன்  -  கோவில் தோற்றம்
x
பகவதி அம்மன் - கோவில் தோற்றம்
தினத்தந்தி 20 March 2020 4:00 AM GMT (Updated: 19 March 2020 11:17 AM GMT)

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், அங்காடிபுரம் அருகில் உள்ளது, பெரிந்தல்மன்னா என்ற இடம். இங்கு அமைந்துள்ள பகவதியம்மன் கோவிலில் இருக்கும் கணபதி சன்னிதியில், திருமணத் தடை உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் மாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்கின்றனர்.

தல வரலாறு

சூரிய வம்சத்தைச் சேர்ந்த மந்தாதா எனும் மன்னர், மிகச் சிறந்த சிவபக்தர். நீண்ட காலம் அப்பகுதியை ஆட்சி செய்து வந்த அவர், தனது அரசப் பொறுப்புகள் அனைத்தையும் தனது மரபுரிமையினரிடம் ஒப்படைத்து விட்டு, சிவபெருமானை நினைத்துத் தவமியற்றுவதற்காகக் கயிலாய மலைக்குச் சென்றார்.

கயிலாய மலையில் ஓரிடத்தைத் தேர்வு செய்து கடுந்தவம் புரிந்தார். அவரது தவத்தினைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், அவர் முன்பாகத் தோன்றி, “என்ன வரம் வேண்டும்?” எனக் கேட்டார்.

சிவபெருமானை கண்டு மகிழ்ந்த மந்தாதா, ‘வழிபடுவதற்கு மிகவும் சக்தி வாய்ந்த லிங்கம் ஒன்றைத் தர வேண்டும்’ என்றும், ‘அந்த லிங்கத்தை வழிபடுபவர்கள் வேண்டுவது, அனைத்தும் அவர்களுக்குக் கிடைத்திட வேண்டும்’ என்றும் வேண்டினார்.

“மிகவும் சக்தி வாய்ந்த லிங்கம், பார்வதிதேவியிடம் இருக்கிறது. அந்தச் சிவலிங்கத்தையே நான் உனக்குத் தருகிறேன்” என்று சொல்லி, சிவலிங்கத்தை மந்தாதாவிடம் தந்தார். அதனைப் பெற்றுக்கொண்ட மன்னர், அந்தச் சிவலிங்கத்தைத் தலையில் சுமந்து கொண்டு அங்கிருந்து நாடு திரும்பினார்.

இந்நிலையில், வழக்கம் போல் சிவலிங்க வழிபாடு செய்வதற்காகச் சென்ற பார்வதிதேவி, அங்கு அவர் வழிபட்டு வந்த சிவலிங்கம் இல்லாததைக் கண்டு வருத்தமடைந்தார். சிவலிங்கம் எப்படி மாயமானது? என்று நினைத்தபடி கண்களை மூடித் தியானித்தார். அப்போது அவருக்கு, மன்னர் மந்தாதா அந்தச் சிவலிங்கத்தைத் தலையில் சுமந்து எடுத்துச் செல்வது காட்சியாகத் தோன்றி மறைந்தது.

உடனே பார்வதிதேவி, தனது பூதகணங்களை அழைத்து, மந்தாதா எடுத்துச் சென்ற சிவலிங்கத்தை மீட்டுக் கொண்டு வரும்படி கட்டளையிட்டார். பூதகணங்கள் அனைத்தும் மந்தாதாவிடம் இருந்து சிவலிங்கத்தை மீட்க முயன்றனர். ஆனால், அவர்களால் மந்தாதாவை நெருங்கவே முடியவில்லை. எனவே அவர்கள் தோல்வியுடன் திரும்பினர்.

அதன் பின்னர் பார்வதிதேவி, காளியை அழைத்து, மந்தாதாவிடம் இருந்து சிவலிங்கத்தை மீட்டுக் கொண்டு வரும்படி அனுப்பினார். பதினைந்து நாட்கள் போராடியும் அந்தச் சிவலிங்கத்தை மந்தாதாவிடம் இருந்து காளியால் மீட்க முடியவில்லை.

காளிதேவி, மந்தாதாவை சில ஆயுதங்களைக் கொண்டு தாக்கத் தொடங்கினார். அந்தத் தாக்குதல் எதுவும் மந்தாதாவைப் பாதிக்கவில்லை. அந்த ஆயுதங்கள் அனைத்தும் சிவபெருமானைத் தாக்கிவிட்டுத் திரும்பின. அதனைக் கண்ட காளிதேவி அதிர்ச்சியடைந்து, சிவபெருமானிடம் தன்னை மன்னிக்க வேண்டினார்.

அப்போது அங்கு தோன்றிய சிவபெருமான், “இந்தச் சிவலிங்கத்தை நானே, மந்தாதாவுக்கு வழங்கினேன். அவர் வேண்டுதலை ஏற்று, அந்தச் சிவலிங்கத்தின் வழியாக நானும் அவருடன் சென்று கொண்டிருக்கிறேன்” என்றார்.

அதனைக் கேட்ட பார்வதிதேவி, தங்களைப் பிரிந்து தனியாக என்னால் இருக்க இயலாது என்று கூறி, தானும் அந்த சிவலிங்கத்துடன் இணைந்தார்.

சிவலிங்கத்தைத் தனது ஆட்சிப்பகுதிக்குக் கொண்டு சென்ற மந்தாதா, அங்கிருந்த மலைப்பகுதி ஒன்றில் நிறுவி, அங்கு கோவிலைக் கட்டுவித்து, பல ஆண்டுகள் தவமியற்றி முக்தி அடைந்தார் என்று இந்தக் கோவில் அமைந்த தல வரலாறு தெரிவிக்கப்படுகிறது.

கோவில் அமைப்பு

ஆலய கருவறையில் சிவபெருமான், லிங்க வடிவில் கிழக்கு நோக்கிய நிலையில் காட்சி தருகிறார். இங்கு பார்வதிதேவி, பகவதியாக மேற்கு நோக்கிய நிலையில் இருக்கிறார். இங்கிருக்கும் பகவதியை, ‘பத்ரகாளி’ என்றும் அழைப்பார்கள். இக்கோவில் சிவபெருமானுக்குரியது என்றாலும், இங்கிருக்கும் அம்மனே மிகவும் சக்தி வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். இந்த அம்மனை, ‘திருமந்திலம்குன்னிலம்மா’ என்று அழைக்கிறார்கள். கோவில் வளாகத்தில் சப்தமாதர்களுடன் பகவதி, காளிதேவி, வீரபத்திரன், கணபதி ஆகியோருக்கு வடக்கு நோக்கிய நிலையில் தனிச்சன்னிதிகள் அமைந்திருக்கின்றன.

இக்கோவிலில் சிவபெருமான், பார்வதி ஆகியோருக்கான சிறப்பு நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இங்கு பக்தர்களின் வசதிக்கேற்ப, 107 வகையான வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் உரிய கட்டணத்தைக் கோவில் அலுவலகத்தில் செலுத்திச் சிறப்பு வழிபாடுகளைச் செய்து கொள்ளலாம்.

மாங்கல்ய பூஜை

இக்கோவிலில் உள்ள விநாயகர் சன்னிதியில் மலையாள நாட்காட்டியின்படி துலாம் (ஐப்பசி) மாதம் முதல் வெள்ளிக் கிழமை நாளில், திருமணமாகாத இளைஞர்கள், இளம்பெண்கள் மாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. முன்பு ஆண்டுக்கொரு முறை நடைபெற்று வந்த இந்த மாங்கல்ய பூஜையானது, பூஜை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றதால், தற்போது ஒவ்வொரு வாரமும், செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்று வாரத்திற்கு மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

இத்தலத்தில் மலையாள நாட்காட்டியின்படி, விருச்சிகம் (கார்த்திகை) மாதம் முதல் நாளில் தொடங்கி மீனம் (பங்குனி) மாதம் ரோகிணி நட்சத்திர நாள் வரை, நாள்தோறும் ‘களம்பாட்டு’ எனப்படும் நிகழ்வு தொடர்ந்து நடைபெறுகிறது. முதல் களம்பாட்டு நாள், கோவிலுக்குரியதாக இருக்கிறது. அடுத்த எட்டு நாட்கள், இக்கோவில் அம்மனைக் குலதெய்வமாகக் கொண்ட, எட்டுவீட்டில் அச்சன் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மண்டல பூஜை நாட்களில் இந்த நாட்கள் தவிர்த்து, மீதமிருக்கும் 32 நாட்கள் உரிமையுடையவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு வரும் நாட்கள் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

களம்பாட்டுக்கு அடுத்த நாளான மகாயிரம் (மிருகசீருடம்) நட்சத்திர நாளிலிருந்து 11 நாட்கள் வரை ‘ஆறாட்டு விழா’ நடைபெறுகிறது. இந்நாட்களில் அம்மன் சிலை கோவிலில் இருந்து யானையில் எடுத்து செல்லப்பட்டு, அருகிலுள்ள ஏரியில் ஆறாட்டு செய்து மீண்டும் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படும். தினமும் இரு வேளை நடைபெறும் ஆறாட்டு, பத்தாம் நாளில் மட்டும் ஒரு வேளையாக நடைபெறுகிறது. இப்படி 11 நாட்களில் 21 முறை ஆறாட்டு நடத்தப்பெறும் இத்திருவிழா, இக்கோவிலின் முதன்மைத் திருவிழாவாக இருக்கிறது.

மண்டல பூஜை நாட்களில் கடைசி 7 நாட்கள், ரிக்வேத மந்திரங்களை ஒலிக்கும் லட்ச அர்ச்சனை நிகழ்வு நடைபெறுகிறது. சிங்ஙம் (ஆவணி) மாதத்தில் பருவமழையில் சிறிது மழை பெய்த பிறகு, நெல் விதைகள் அல்லது தாவரங்களை நடவு செய்யும் சடங்கு நடத்தப்படுகிறது. இதனை இங்கிருப்பவர்கள், ‘வல்லிய கண்டம்’ அல்லது ‘பகவதி கண்டம்’ என்று அழைக்கின்றனர். மிதுனம் (ஆனி) முதல் கர்க்கடகம் (ஆடி) வரையிலான நாட்களில் ‘சந்தாட்டம்’ எனும் நிகழ்வு நடைபெறுகிறது.

கர்க்கடகம் (ஆடி) அமாவாசை நாளில் இருந்து முதலில் வரும் ஞாயிற்றுக்கிழமை நாளில் ‘நிரவு’ எனும் விவசாய அறுவடை நாள் கொண்டாடப்படுகிறது. இவை தவிர, பிரசாதம் ஊட்டு, பூரம் திருவிழா, அட்டெங்கயேறு, சங்கீதோத்ஸவம் போன்ற சில நிகழ்வுகளும் கொண்டாடப்படுகின்றன.

இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், அங்காடிபுரம் என்ற இடத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரிந்தல்மன்னாவில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. திருச்சூரில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலும், குருவாயூரில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்காட்டில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும், காடம்புழாவில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் இருக்கிறது. மேற்கண்ட ஊர்களில் இருந்து அங்காடிபுரம் சென்று, பின்னர் அங்கிருந்து கோவிலுக்குச் செல்லலாம். அங்காடிபுரம் செல்லவும், அங்கிருந்து பெரிந்தல்மன்னாவிற்குச் செல்லவும் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

களம்பாட்டு

‘களம்பாட்டு’ என்பது கேரளா மாநிலத்தின் வடக்குப் பகுதியைச் சார்ந்த நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றாகும். 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கலை பத்ரகாளி, ஐயப்பன், வேட்டைக்கொரு மகன், நாக தெய்வங்கள் என்று, குறிப்பிட்ட சில கோவில்களில் ஐந்து முதல் பதினைந்து நபர்களைக் கொண்டு நிகழ்த்தப்படுகிறது.

அரிசி மாவு (வெள்ளை நிறம்), கரிப்பொடி (கருப்பு நிறம்), மஞ்சள் பொடி (மஞ்சள் நிறம்), பச்சை இலைகளின் பொடி (பச்சை நிறம்), மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்புக் கலவை (சிவப்பு நிறம்) என்று இயற்கையான ஐந்து நிறங்களைப் பயன்படுத்தித் தரையில் இறை உருவம் வரையப்படுகிறது. இந்த ஓவியம் கோப உணர்ச்சியை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. குரூப், தெய்யம்பாடி நம்பியார், தீயாடி நம்பியார், தீயாடி உன்னிகள் எனப்படும் சில சமூகக் குழுவினர் மட்டுமே இப்படங்களை வரைகின்றனர்.

இப்படி வரையப்பட்ட இறை உருவத்திற்கு, பூஜை செய்து வழிபடுகின்றனர். இதனை ‘களபூஜை’ என்கின்றனர். அதன் பின்பு, அந்த இறைவன் - இறைவியை வாழ்த்தி களத்தின் நான்கு மூலைகளிலும் அமர்ந்து பாடுவர். இதனையே ‘களம்பாட்டு’ என்கின்றனர்.

- தேனி மு.சுப்பிரமணி

Next Story