ஆன்மிகம்

விவசாயத்தை மேம்படுத்தும் தெளிச்சேரி சிவாலயம் + "||" + Thulachery Shivalayam, which promotes agricultur

விவசாயத்தை மேம்படுத்தும் தெளிச்சேரி சிவாலயம்

விவசாயத்தை மேம்படுத்தும் தெளிச்சேரி சிவாலயம்
மூன்று வயதிலேயே ஞானப்பாலருந்தி ‘தோடுடைய செவியன்..’ என்று தேன் தமிழ்ப்பா இசைக்கத் தொடங்கிய ஆளுடைப்பிள்ளை திருஞான சம்பந்தர். பின்னர் அவர் திருக்கோவில்கள் தோறும் சென்று வழிபட்டுப் பண்ணிசைத்து வந்தார்.
திருக்கடவூர், திருவேட்டக்குடி ஆகிய தலங்களைத் தரிசித்து தேவாரம் பாடி விட்டு, காரைக்கால் நகரினை நோக்கி அவர் வந்தார்.

அங்கு சிவபெருமானால் ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரிய, காரைக்கால் அம்மையார் பிறந்த புனித பூமியினைக் கால்களால் மிதிக்கக்கூடாது என்று அஞ்சி, மண்ணைத் தொட்டு வணங்கி விட்டு, நகரின் வடபுறம் உள்ள திருத்தெளிச் சேரியிலேயே நின்றுகொண்டார்.

அங்கிருந்த சிவாலயத்தின் முன் உள்ள விநாயகரை வணங்கினார். எனவே அந்த விநாயகர் ‘ஞானசம்பந்த விநாயகர்’ என்றே அழைக்கப்படுகிறார். அதன் பிறகு, சம்பந்தர் பூஞ்சோலைகள் சூழ்ந்த கோவிலில் நுழைந்து, முக்கன் பரமனைப் பணிந்து இத்தலத்தைப் பற்றி, பதினோரு தேவாரப் பாக்களைப் பொழிந்தார்.

‘பூவலர்ந்தன கொண்டு, முப்போதுமும் பொற்கழல்
தேவர் வந்து வணங்கி மிகு தெளிச் சேரியீர்.
மேவருந் தொழிலாளொரு கேழற்பின் வேடனாம்
பாவ கங்கொடு நின்றது போலுறும் பான்மையே’ என்பது இந்த தலத்தில் அவரது முதல் பதிகம் ஆகும்.

அத்தகு தேவாரப்பாடல் சிறப்புடைய இந்த ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ஐந்துநிலை ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றதும், முன் மண்டபத்தில் ஸ்தம்ப விநாயகருடன் கொடிமரமும், பலிபீடமும், அமர்ந்த நிலையிலே நந்திய பெருமானும் காட்சி தருகின்றனர். உள்ளே நுழைந்ததும் மேற்கு பார்த்த தனி கருவறையில் சிவபிரான் ‘பார்வதீஸ்வரர்’ என்ற நாமம் தாங்கி காட்சி தருகிறார். தெற்கு நோக்கிய தனிக் கருவறையில் அம்பிகை ‘சுயம்வர தபஸ்வினி’ என்ற பெயரில் நின்ற கோலத்தில் அருள்கிறாள்.

அம்பாள் தவமிருந்து இறைவனைப் பூஜித்த தலமாதலால், இங்கே அம்மைக்கு இத்திருப்பெயர் வழங்கலாயிற்று. சுவாமியும் பார்வதி ஈஸ்வரர் என்றே போற்றப்படுகிறார். எனவே இத்தல அம்மையப்பர் தனது அன்பர்களின் திருமணம் கைகூட, கருணைபொழிபவர் என்பது ஐதீகம். அதனை மெய்ப்பிக்கும் வகையில் சுவாமி சன்னிதி சுவற்றிலும், உள் திருச்சுற்றிலும் அம்பிகை ஐயனை பூஜிக்கும் சிற்பங்கள் மிளிர்கின்றன.

சுவாமி சன்னிதியை பார்த்தபடி எதிரில் வடபுறம், ஐந்துகரப் பெருமான் அருள்பாலிக்கிறார். தென்புறம் நின்ற திருக்கோலத்தில் வள்ளி - தெய்வானை சமேத வேலவன் காட்சி தருகிறார். அதையடுத்து யானைகள் துதிக்கும் கஜலட்சுமி அருள்கிறார். அம்பாள் சன்னிதியின் பக்கத்தில், தென்திசை நோக்கியபடி சிவகாமி அம்மை உடனிருக்க தில்லை நடராசர் தனிச் சன்னிதியில் ஆடிக்கொண்டிருக்கிறார்.

மேற்கு பார்த்த கோவிலாதலால் துர்க்கை அம்மனும், அதை அடுத்து கோமுகமும், அதன் மேலே நான்முகனும் காட்சி தருகின்றனர். சண்டிகேசர் சற்று தள்ளி தனியே வீற்றிருப்பது மாறுபாடான நிலையாகும். வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்களும், மேற்கு நோக்கிய கால பைரவரும் தோற்றம் தருகின்றனர். சனீஸ்வரர் இங்கே, காகத்தின் மேல் வலது காலை மடித்து வைத்து இடக்காலை தொங்க விட்டபடி அமர்ந்திருப்பது வித்தியாசமான காட்சியாகும். சனீஸ்வரனுக்குரிய திருநள்ளாறு கோவிலோடு இணைந்த கோவில் என்பதால், இங்கும் சனீஸ்வரருக்கு சிறப்பு உள்ளதெனவும், சனீஸ்வரருக்கு உற்சவமூர்த்தி உள்ளதெனவும் தெரிவிக்கின்றனர்.

ஏர் ஏந்திய சிவன், மேற்கு நோக்கி தனிச்சன்னிதியில் சுவாமி, அம்பாள் ஐம்பொன் திருமேனிகள் கண்ணைக் கவருகின்றன. சுவாமி கையில் ஏர்கலப்பை ஏந்தியுள்ளது தான் பெருஞ்சிறப்பு. சிவபெருமான் ஒரு ஆனி மாத நன்னாளில் இவ்வூரில் உள்ள நிலத்தை உழுது விதை தெளித்து, முன்னோடி விவசாயியாக காட்சி தந்தார் என்கிறது தல புராணம். இதனால் தான் இவ்வூர் ‘தெளிச்சேரி’ என்றாயிற்று.

இறைவன் திருத்தினை நகரிலும், திருநாட்டியத்தான் குடியிலும், கோவை பேரூரிலும் விவசாயியாக அம்பிகையுடன் வயலில் வேலை செய்த செய்திகள் நம்மைச் சிலிர்க்கச் செய்கின்றன. இக்கோவிலின் உள் சுற்றின் தென்புறம் தட்சிணாமூர்த்தி சுவாமி, சிங்கங்கள் தாங்கி நிற்கும் சிம்மாசனத்தின் மீது அமர்ந்துள்ளார். எனவே இவர் அரசனைப் போல அள்ளித்தருவார் என்பது நம்பிக்கை. தெற்கு சுவரோரம் அறுபத்து மூன்று நாயன்மார்களும் வரிசையாக வீற்றிருப்பது அற்புதமான தோற்றமாகும்.

இந்த சிவாலயத்தில் பங்குனி மாதம் 13-ந் தேதியில் இருந்து 19-ந் தேதி வரை 7 நாட்கள் தினமும் மாலை 5.30 மணியளவில் சூரியக் கதிர்கள் லிங்கத்தைத் தழுவி அவரை பூசிப்பது அரிய காட்சியாகும். இதனால் இறைவன் ‘பாஸ்கரேஸ்வரர்’ எனவும் புகழப்படுகிறார். வெளிச்சுற்றில் வன்னி மரம் அசைந்தாடிக் கொண்டிருக்கிறது. இது தல விருட்சமாக விளங்குவதால் இத்தலத்துக்கு ‘சமீவனம்’ என்றொரு பெயரும் உள்ளது.

இந்த ஆலயத்தில் சிவராத்திரி, நவராத்திரி உட்பட அனைத்து விழாக்களும் உரிய முறைப்படி நடத்தப்படுகின்றன. ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

அமைவிடம்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பேருந்து நிலையத்தின் அருகில் கோவில்பத்து என்றழைக்கப்படும் இடத்தில் இந்த திருத்தெளிச்சேரி - பார்வதீஸ்வரர் கோவில் உள்ளது.

- டாக்டர் ச.தமிழரசன்