சுந்தரருக்கு அமுது படைத்த வெள்விடைநாதர்
சீர்காழியில் இருந்து திருமுல்லைவாசல் செல்லும் பாதையில் சற்றே உள்ளடங்கி உள்ள கிராமம் திருக்குருகாவூர். இங்குள்ளது அருள்மிகு வெள்விடை நாதர் ஆலயம். இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ‘வெள் விடைநாதர்’ என்பதாகும்.
வெள்ளடை ஈஸ்வரர், வெள்ளடை நாதர், சுவேத ரிஷபேஸ்வரர் என்பன இறைவனுக்குள்ள பிற பெயர்கள். இறைவியின் பெயர் ‘காவியங்கண்ணி அம்பாள்’ என்பது. இறைவியின் இன்னொரு பெயர் ‘நீலோத்பவ விசாலாட்சி’ என்பதாகும்.
ஆலய முகப்பில் கோபுரமில்லை. முகப்பு வாசலைக் கடந்து உள்ளே சென்றால், வலதுபுறம் அம்மன் சன்னிதி உள்ளது. பிள்ளையார் பலிபீடம், நந்தி ஆகியவைகளும் எதிரே உள்ளன. அர்த்த மண்டப நுழைவு வாசலின் இடதுபுறமும் வலதுபுறமும் விநாயகர் திருமேனிகளும், துவாரபாலகர் திருமேனிகளும் உள்ளன. அடுத்துள்ள கருவறையில் இறைவன் வெள்விடைநாதர் லிங்கத்திருமேனியில் அருள்பாலிக்கிறார். சதுர ஆவுடையார் சிறிய பாணம் கொண்ட திருமேனியுடன் இறைவன் காட்சி தரு கிறார்.
இங்குள்ள அம்மனுக்கு நான்கு கைகள். மேல் இரண்டு கரங்களில் சங்கு, சக்கரத்தை ஏந்தியும், கீழ் இரண்டு கரங்களில் அபய, ஹஸ்த முத்திரைகளுடன் இளநகை தவழ நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள் அன்னை.
ஆலயத்தின் தலவிருட்சம் வில்வம். தீர்த்தம்-பால்கிணறு. இது ஆலயத்திற்கு வெளியே இருக்கிறது. ஒரு தை அமாவாசையின்போது இறைவன் - இறைவிக்கு தீர்த்தம் கொடுக்க, இந்த கிணற்றருகே வந்தபோது இந்த கிணற்று நீர், பால் நிறமாக மாறியதாம். அது முதல் இக்கிணறு ‘பால் கிணறு’ என்றே அழைக்கப்படுகிறது.
பண்டைய சோழநாட்டின் வடகரைத் தலம் இது. பசியோடு வந்த சுந்தரருக்கு இறைவனே முன் வந்து உணவும் தண்ணீரும் அளித்த தலம் இது.
ஆம்.. ஒரு முறை தன் பயணத்தின் போது சுந்தரமூர்த்தி சுவாமிகள், தன் அடியவர் திருக்கூட்டத்துடன் சீர்காழியில் இருந்து இத்தலம் நோக்கிப் புறப்பட்டார். தன்னை வழிபட வரும் பக்தரும், அவர்தம் கூட்டமும் பசியோடு வருவதை உணர்ந்த இத்தல இறைவன் மனம் நெகிழ்ந்தார். சுந்தரர் வரும் வழியில், ஒரு பந்தலை அமைத்து பொதி சோற்றுடனும் தண்ணீருடனும் காத்திருந்தார் இத்தல இறைவன். சுந்தரரும் அவரது அடியார்களும் களைப்புடனும் பசியுடனும் வந்தனர். சுந்தரர் அப்பந்தலில் தங்கி இளைப்பாற, முதியோர் உருவில் இருந்த இறைவன் அவரருகே சென்றார்.
‘ஐயனே, நீங்கள் மிகவும் பசியுடன் இருப்பதாக உணருகிறேன். நான் பொதி சோறு கொண்டு வந்துள்ளேன். இதை உண்டு பசியாறுங்கள். தண்ணீரும் கொண்டு வந்துள்ளேன். நீர் அருந்தி களைப்பாறுங்கள்’ என்றார் இறைவன்.
சுந்தரர் மனம் மகிழ்ந்து ‘சரி’ என்றார். இறைவன் கொண்டு வந்த பொதி சோற்றினை சுந்தரரும், அவரது அடியார்களும் வயிறார உண்டனர். பொதி சோறு குறையாது பெருகியது.
இறைவனை யாரென்று அறியாத சுந்தரர் அவருக்கு நன்றி கூறிவிட்டு இளைப்பாறி உறங்கத் தொடங்கினார். அடியவர்களும் உறங்கினர். உறக்கம் கலைந்த சுந்தரர் தனக்கு உணவளித்த அடியவரைக் காணாது தவித்தார். பின்னர் தனக்கு பொதிசோறு அளித்தது, குருகாவூர் இறைவனே என உணர்ந்தார். மனம் சிலிர்த்தார்.
‘இத்தனையா மாற்றை ...’ என்று திருப்பதிகம் பாடிக் கொண்டே ஆலயத்தினுள் சென்ற சுந்தரர், இறைவனை பதிகம் பாடி மனம் மகிழ்ந்தார்.
சம்பந்தராலும் பாடல் பெற்ற தலம் இது. இந்த ஆலயத்தில் ராசேந்திர சோழன், குலோத்துங்க சோழன், ராஜாதி ராஜ சோழன் ஆகியோர் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. குலோகத்துங்க சோழன் காலத்தில் மூவர் திருவுருவங்கள் இக்கோவிலில் எழுந்தருளிவிக்கப்பெற்றன.
சுந்தரருக்கும் அடியவர்களுக்கும் இறைவன் அமுதூட்டிய இடம் ‘வரிசைபற்று’ என்ற பெயரில், இத்தலத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன் கட்டமுதளித்த இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பவுர்ணமியில் மிகவும் சிறப்பாக இங்கு கொண்டாடப்படுகிறது.
இங்குள்ள அன்னைக்கு மூன்று வாரங்கள் தொடர்ந்து நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து புடவை வாங்கி அணிவித்தால் குழந்தை பேறு நிச்சயம் என பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந் திருக்கும்.
அமைவிடம்
நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்குருகாவூர் என்ற இந்த தலம்.
- மல்லிகா சுந்தர்
Related Tags :
Next Story