எண்ணியதை நிறைவேற்றும் எட்டுக்குடி முருகன்


எண்ணியதை நிறைவேற்றும் எட்டுக்குடி முருகன்
x
தினத்தந்தி 21 April 2020 6:40 AM GMT (Updated: 21 April 2020 6:40 AM GMT)

இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி, மிகவும் விசேஷமான முறையில் நடைபெறும்.

எட்டி மரங்கள் அதிகம் நிறைந்த ஊர், எட்டு குடிகள் மட்டுமே இருந்த ஊர், பறந்து சென்ற மயிலை ‘எட்டிப்பிடி’ என்ற வார்த்தையால் உருவான ஊர், எட்டு லட்சுமிகளும் நித்தம் வந்து பூஜை செய்த ஊர், பால் காவடிகளுக்கு பெயர் பெற்ற புண்ணிய நகரம் என பல்வேறு சிறப்பு களைக் கொண்டது ‘எட்டுக்குடி’ திருத்தலம். இங்கு முருகன்- வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கும் எட்டுக்குடி முருகன் ஆலயம் இருக்கிறது.

இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி, மிகவும் விசேஷமான முறையில் நடைபெறும். மாலை தொடங்கும் இந்த நிகழ்வு, மறுநாள் அதிகாலை வரை நடக்கும். அப்போது விடிய, விடிய பல்வேறு அபிஷேகங்களால் முரு கனுக்கு வழிபாடுகள் செய்யப்படும். இந்த மானிடப் பிறவியின் நோக்கமே, இந்த அரிய அபிஷேகக் காட்சிகளைக் கண்டு ரசிப்பதில்தான் இருக்கிறது என்ற ஆன்ம திருப்தியை தருவதாக இந்த அபிஷேகங்கள் இருக்கின்றன.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கச்சனம் என்ற பகுதியில் புண்ணிய திருத்தலமாக விளங்கும் இந்த ஆலயத்தில், வான்மீகி என்ற மகா சித்தர், முருகப்பெருமானை நாள்தோறும் வழிபட்டு ஜீவ சமாதி அடைந்துள்ளார்.

முருகப்பெருமான், ஒரு காலை ஊன்றி நிற்கின்ற அழகு மயில் மீது அமர்ந்த நிலையில் அருள்காட்சி தருகிறார். அவரது இடமும்- வலமும் வள்ளி- தெய்வானை தேவியர் புன்னகை சிந்தியபடி, கணவனின் அழகை ரசித்தபடி உள்ளனர்.

எட்டுக்குடி முருகன், எண்கண் முருகன், பொருள்வைத்த சேரி என்ற சிக்கல் முருகன் ஆகிய மூன்று சிலைகளையும் ஒரே சிற்பிதான் வடிவமைத்துள்ளார் என்று புராண வரலாறுகள் பலவும் எடுத்துரைக்கின்றன.

வந்த வினைகளையும், வருகின்ற வல்வினை களையும் வடிவேலன் வேரறுப்பான். நம் வாழ்வு முழுவதும் துணை நிற்பான். அப்படிப்பட்ட முருகப்பெருமானை மூன்று வேளையும் வணங்கி, நம் ஆயுளை வளர்ப்போம்.

Next Story