ஆடி மாதச் சிறப்பு


ஆடி மாதச் சிறப்பு
x
தினத்தந்தி 14 July 2020 11:41 AM IST (Updated: 14 July 2020 11:41 AM IST)
t-max-icont-min-icon

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்கள்தான் நம் கண்முன் வந்து போகும். இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெறுவதை காண முடியும்.

ஆடி மாதத்திற்கு நிறைய சிறப்புகள் இருக்கின்றன. தெய்வீக அம்சம் பொருந்திய இந்த மாதம், அம்மனுக்குரிய மாதமாக போற்றப்படுகிறது. ஒரு முறை சிவபெருமானை நோக்கி தவம் இருந்த பார்வதிதேவிக்கு காட்சி கொடுத்த ஈசன், ஆடி மாதத்தில் அம்மன் ஆலயங்களில் சிறப்பான விழாக்கள் நடை பெறும் என்பதான வரத்தை அருளினார்.

சிவபெருமானின் சக்தியை விட, ஆதிபராசக்தியின் சக்தி, இந்த மாதத்தில் பரிபூரணமாகத் திகழ்வதாக சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் சக்திக்குள், சிவபெருமான் ஐக்கியமாகி விடுவதாகவும் ஐதீகம். இந்த ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் அம்மனை வழிபடுவதற்கு உகந்த தினங்களாக கொண்டாடப்படுகிறது. இத்தகைய சிறப்புகொண்ட ஆடி மாதத்தில்தான், பூமாதேவியின் அம்சமாக தோன்றிய ஆண்டாள் நாச்சியாரின் அவதாரம் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மழை தெய்வமாக கிராமங்களில் வழிபடப்படும் அம்மனுக்கு, ‘மாரியம்மன்’ என்று பெயர். ‘மாரி’ என்றால் ‘மழை’ என்று பொருள். அந்த மாரியம்மனுக்கு ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகளில் கூழ் வார்த்து, அதை அம்மனுக்கு படைத்து பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் வழக்கம் ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. நாடு செழிப்பாக இருக்க மழை பெய்வதற்காகவும், வெப்ப நோய்களில் இருந்து மக்கள் விடுபடவும் இந்த கூழ் வார்க்கும் நிகழ்வு அம்மன் கோவில்களில் ஆடி மாதங்களில் நிகழ்த்தப்படுகின்றன. அப்போது விரதம் இருக்கும் பெண்கள், வேப்பிலை ஆடை உடுத்தி கோவிலை வலம் வந்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அந்த நாளில் அம்மனுக்கும், அவளது வாகனமாக விளங்கும் சிம்மத்திற்கும் ‘மஞ்சப்பால் அபிஷேகம்’ செய்யப்படும். மஞ்சள் பொடி கலந்த தண்ணீருக்கு ‘மஞ்சப்பால்’ என்று பெயர். கன்னிப்பெண்கள் மஞ்சப்பால் அபிஷேகம் செய்வதன் மூலம், அவர்களுக்கு விரைவில் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை.

ஆடி வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றி வழிபாடு செய்வதும், முக்கியமான ஒரு வழிபாடாக இருக்கிறது. பச்சரிசியை ஊற வைத்து இடித்து மாவாக்கி, அதில் இளநீர், வெல்லப்பாகு, ஏலக்காய், சுக்குத்தூள் கலந்து, காமாட்சி விளக்கு போல செய்து, எண்ணெய் ஊற்றி அம்மன் முன்பாக தீபம் ஏற்றி வைத்து வழிபடுவார்கள். அந்த விளக்கையே அம்மனாகக் கருதி வணங்கப்படுவதும் உண்டு. மாரி, காளி, துர்க்கை போன்ற பெண் தெய்வங்களுக்கு இந்த வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பான பலனைத் தரும். மாவிளக்கேற்றி வழிபடுவதால், நோய்நொடி நீங்கி ஆரோக்கிய வாழ்வு உண்டாகும்.

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியருக்கு ஆடிச்சீர் கொடுத்து, புதுமாப்பிள்ளையையும், பெண்ணையும் தாய் வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுப்பார்கள். அதன்பின் மாப்பிள்ளைக்கு ஆடிப்பால் என்னும் தேங்காய்ப்பால் கொடுத்து ஊருக்கு அனுப்பிவைப்பர். பெண் தாய் வீட்டில் தங்குவாள். ஆடியில் கருத்தரித்தால், கத்திரி வெயில் சுட்டெரிக்கும் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும் என்பதால் இந்தப் பழக்கம் நடைமுறைக்கு வந்ததாகவும் சொல்வார்கள்.

Next Story