மனிதனின் தேடல்கள்


மனிதனின் தேடல்கள்
x
தினத்தந்தி 21 Dec 2020 10:30 PM GMT (Updated: 21 Dec 2020 7:52 PM GMT)

மனிதன் சுபிட்சமாக வாழ, அவனுக்காகவே இந்த உலகத்தை அல்லாஹ் படைத்தான்.

இந்த உலக வாழ்வு சிலருக்கு அருள் வளமும், பொருள் வளமும் நிரம்பியதாக அமைந்துள்ளது. சிலருக்கு அவை குறைவாக கொடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் பெற்றவர்கள் அதற்கு பயப்பட வேண்டும். ஏனென்றால் அது சோதனைப் பொருளாகவும் கூட இருக்கலாம். நாளை மறுமையில் கேள்வி கணக்குகளை அது கடினமாகவும் ஆக்கலாம். குறைவாக பெற்றவர்கள் வாழ்வாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக திருப்தி கொள்ள வேண்டும்.

அதிகமாகவோ, குறைவாகவோ எது கொடுக்கப்பட்டாலும் அதனை ‘போதும்’ என்ற திருப்தியோடு மனிதன் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும், அதன் மூலம் மற்றவர்களுக்கு என்ன நன்மைகளை செய்ய முடியும் என்று சிந்தித்து செயல்பட வேண்டும். அப்படிப்பட்ட மனிதன் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்.

இதனை ஏற்றத்தாழ்வுகள் என்ற கண்ணோட்டத்தில் காணக்கூடாது. வெளிப்படையாக தெரிவதை கொண்டு ஒரு முடிவுக்கும் வந்துவிடக்கூடாது. ஏதாவது சிறப்பு இருந்தால், இன்னும் ஒரு சிறப்பு இல்லாமல் இருக்கலாம். அல்லது குறை தென்படலாம்.

பணம் இருந்தால் உடல் ஆரோக்கியம் குறைவாக இருக்கலாம், உடல் பலம் இருந்தால் வாரிசுகள் இல்லாமல் இருக்கலாம். அறிவு இருந்தால் ஆற்றல் இல்லாமல் இருக்கலாம். இவ்வாறு ஏதோ ஒன்றைக் கொண்டு மற்றதை மிக நேர்த்தியாக அத்தனையையும் சமன் செய்து இருக்கிறான் அல்லாஹ்.

இதற்கெல்லாம் மேலாக, அல்லாஹ் விதித்ததை மட்டுமே மனிதனால் அடைய முடியும். அவன் தருவதை தடுக்கும் சக்தியோ, கிடைக்காததை கொடுக்கும் சக்தியோ இவ்வுலகில் யாருக்கும் கிடையாது. இதை முழுமையாக நம்பும் போது இவ்வுலகில் நடக்கும் அத்தனை பாவங்களும் இல்லாமல் போய்விடும் என்பது நிதர்சனம்.

உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது, மனிதன் பொருள் சேர்ப்பதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் செலவழித்துக் கொண்டிருக்கின்றான். அந்த பயணத்தில் அவன் அதனை அனுபவிப்பதை கூட மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றான். ஒரு காலகட்டத்தில் அவன் திரும்பிப் பார்த்தால் அவன் வாழ்வில் வெறுமையையே உணர்கின்றான். ஏன்? எதற்கு? எப்படி? என்று புரியாது, கேள்விக்கு பதில் தெரியாமல் தவிக்கின்றான். இதைத்தான் அருள்மறை திருக்குர்ஆன் இப்படி கூறுகின்றது:

“ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். (எனினும்) உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவதெல்லாம் மறுமை நாளில்தான். ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுவர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை”. (திருக்குர்ஆன் 3:185)

அடுத்து சொல்கிறது, “(நம்பிக்கையாளர்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் (நஷ்டம் இழைக்கப்படுவதன் மூலம்) நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்”. (திருக்குர்ஆன் 3:186)

மனிதன் முன்பு அல்லாஹ் இரண்டு வழிகளை வைத்துள்ளான். நல்ல வழியில் சென்றால் இம்மையிலும் மறுமையிலும் நன்மை கிடைக்கும். தீயவழியில் சென்றால் இம்மையிலும், மறுமையிலும் அவனை கைசேதப்படும் நிலையில் தள்ளிவிடும். இதை அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு படம் பிடித்துக் காட்டுகின்றான்:

“அவர்கள் செய்வதை நிச்சயமாக நாம் பதிவு செய்து கொண்டு இருக்கின்றோம். மறுமையில் அவர்களை நோக்கி எரிக்கும் வேதனையை நீங்கள் சுவைத்துப் பாருங்கள் என்று நாம் கூறுவோம்”. “அன்றி நீங்கள் உங்கள் கைகளால் தேடிக்கொண்டது தான் இதற்கு காரணமாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு சிறிதும் அநியாயம் செய்வதில்லை”. (திருக்குர்ஆன் 3:181, 182)

“உங்களிடையே ஒருவர் மற்றவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள். உங்கள் வாதம் பொய்யானது என நீங்கள் அறிந்திருந்தும் இதர மனிதர்களின் பொருட்களில் எதையும் பாவமான வழியில் அநியாயமாக லஞ்சம் கொடுத்து அபகரித்துக் கொள்ள அதிகாரிகளிடம் செல்லாதீர்கள்”. (திருக்குர்ஆன் 2:188)

அல்லாஹ் அருளியது நிச்சயமாக நமக்கு கிடைக்கும். அதற்காக நல்ல வழியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள், ஈருலகிலும் ஈடேற்றம் பெறுவீர்கள்.

அல்லாஹ் தொடர்ந்து சொல்கிறான்:

“அல்லாஹ்விற்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். இதனால் நீங்கள் வெற்றியடையலாம்”. (திருக்குர்ஆன் 2:189)

“நீங்கள் எல்லைகளைக் கடந்து விடவேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அத்துமீறல்களை நேசிப்பதில்லை”. (திருக்குர்ஆன் 2:190)

நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். எனவே இந்த கொடிய பாவத்தை தவிர்ந்து அல்லாஹ் நிர்ணயித்த நேர்வழியைப் பின்பற்றி வாழ்வோம். 

Next Story