ஆண்டிற்கு ஒருமுறை அபிஷேகம் காணும் மரகத நடராஜர்


ஆண்டிற்கு ஒருமுறை அபிஷேகம் காணும் மரகத நடராஜர்
x
தினத்தந்தி 30 Dec 2020 6:46 PM GMT (Updated: 30 Dec 2020 6:46 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருஉத்திரகோசமங்கை மங்களநாதர் திருக்கோவில்.

சிவபெருமான் அருள்பாலிக்கும் திருக்கோவில்களில் மிகவும் புனிதத்துவம் வாய்ந்ததாக இந்தக் கோவில் கருதப்படுகிறது. திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பார்கள். அந்த வரிசையில், திருஉத்திரகோசமங்கை திருத்தலத்தில் கால் வைத்தாலே முக்தி என்று சொல்லப்படுகிறது.

உலகில் முதன்முதலாக தோன்றிய சிவன் கோவில் இதுதான் என்றும், இங்குதான் முதன் முதலாக ஆருத்ரா தரிசனம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. பொதுவாக அனைத்து சிவாலயங்களிலும் நவக்கிரகங்கள் இருப்பதை காணலாம். ஆனால் நவக்கிரகங்களும் முழுமையாக அறியப்படாத காலத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே வழிபாட்டில் இருந்தபோது உருவானதாக இந்தக் கோவிலைச் சொல்கிறார்கள். அதனால்தான் இங்கு நவக்கிரகங்களில், சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டும் காணப்படுகிறது.

சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும். ருத்திரன் என்னும் சிவன், மங்கையான பார்வதிக்கு உபதேசம் செய்த இடம் என்பதாலேயே இது ‘உத்திரகோசமங்கை’ என்று பெயர் பெற்றது. `உத்திரம்' என்றால் `உபதேசிப்பது' என்று பொருள், `கோசம்' என்றால் `ரகசியம்' என்றும், மங்கை என்பது பார்வதியை குறிக்கும். பார்வதிக்கு வேதத்தின் ரகசியத்தை உபதேசித்த இடம் என்பதால் இப்பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த ஆலயம் மிகவும் பழமையானது என்பதற்கு சான்றாக, இந்தக் கோவிலில் ராணவனின் மனைவியான மண்டோதரி வழிபாடு செய்திருக்கிறாள். மிகச்சிறந்த சிவ பக்தனையே திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக பல காலம் காத்திருந்த அவள், தொடர்ந்து இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டிருக்கிறாள். இதையடுத்து ராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம், இந்த ஆலயத்திலேயே, இறைவனின் முன்னிலையிலேயே நடைபெற்றதாகவும் ஒரு செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது.

இந்தக் கோவிலின் மூலவர் ‘மங்கள நாதர்.’ சுயம்பு மூர்த்தியான இவர் இலந்தை மரத்தடியில் தோன்றியவர்.

அம்பிகையின் திருநாமம், ‘மங்கள நாயகி’ என்பாதாகும். ஆலய தல விருட்சம் ‘இலந்தை மரம்’ ஆகும். ஆலய தீர்த்தம் ‘அக்னி தீர்த்தம்.’ இந்த ஆலயத்தில் மாணிக்கவாசகர், வேதவியாசர், காகபுஜண்ட மகரிஷி, மிருகண்டு முனிவர், வாணாசுரன் ஆகியோர் வழிபட்டு பேறுபெற்றுள்ளனர். கோவிலின் முதல் பிரகார வாயு மூலையில், வள்ளி- தெய்வானை யுடன் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இரண்டாம் பிரகார வாயு மூலையில், வள்ளி-தெய் வானையுடன் ஆறுமுகமும், பன்னிரு கரமுமாக மயில் மீது அமர்ந்த கோலத்தில் முருகப்பெருமான் வீற்றிருக்கிறார்.

ஒரு முறை மகாவிஷ்ணுவும், பிரம்மனும், சிவபெருமானின் அடி முடியைக் காண முயன்று தோற்றுப்போயினர். ஆனால், முடியைக் கண்டதாக பிரம்மன் கூறிய பொய்க்கு, ``ஆமாம்'' என்று பொய் சாட்சி சொன்னது தாழம்பூ. இதனால் ‘`நீ என்னுடைய வழிபாட்டில் இருக்க மாட்டாய்’' என்று சாபமிட்டார் சிவன். எனவே பெரும்பாலான சிவாலயங்களில், தாழம்பூ கொண்டு ஈசனுக்கு வழிபாடு செய்யப்படுவதில்லை. ஆனால், திருஉத்திரகோசமங்கை திருத்தலத்தில் இறைவனுக்கு தாழம்பூவால் அர்ச்சனை, அலங்காரம் செய்யப்படுகிறது. இதற்கு இந்தக் கோவில், பிரம்மனும் பெருமாளும் அடி முடி தேடிய யுகத்திற்கும் முற்பட்டது என்றும், பொய் கூறியவர்களையும் மன்னித்து அருளும் மனம் படைத்தவர் இத்தல மங்களநாதர் என்றும் சொல்கிறார்கள்.

இத்தலத்தின் நடராஜர் மரகதத்தால் ஆனவர். நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு அலங்காரத்திலேயே இருப்பார். திருவாதிரை திருநாளுக்கு முந்தைய தினம் சந்தனக் காப்பு களையப்பட்டு அபிஷேகம், ஆராதனை செய்யப்படும். அன்றைய தினம் மரகத நடராஜருக்கு 32 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். பின்னர் மீண்டும் சாத்தப்படும் சந்தனக்காப்பு, அடுத்த திருவாதிரை திருநாள் வரை இருக்கும். சந்தக்காப்பு இல்லாத, அபிஷேகத்தை ஏற்றுக்கொள்ளும் மரகத நடராஜரை தரிசிக்க வேண்டும் என்றால், நாம் திருவாதிரை திருநாளுக்கு முந்தைய தினம் ஆலயத்திற்குச் செல்ல வேண்டியது அவசியம். இங்கு தினமும் மதியம் 12.45 மணி அளவில் மரகத லிங்கத்திற்கும், ஸ்படிக லிங்கத்திற்கும் அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும். இதில் மரகத லிங்கம் மரகத நடராஜரையும், ஸ்படிக லிங்கம் மூலவரான மங்களநாதரையும் குறிக்கும்.

இந்தக் கோவிலில் தினமும் காலை 5.30 மணிக்கு உஷத் காலம், 8 மணிக்கு கால சாந்தி, 10 மணிக்கு உச்சிக் காலம், மாலை 5 மணிக்கு சாயரட்சை, இரவு 7 மணிக்கு இரண்டாம் காலம், இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜைகள் என்று ஆறு கால பூஜைகள் நடத்தப்படுகிறது. மங்களநாதருக்கு தினமும் காலை 6 மணி, பகல் 12.30 மணி, மாலை 5.30 மணி என மூன்று முறை அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த ஆலயம், தினமும் அதிகாலை 5 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

மதுரை - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரத்தை அடைவதற்கு 10 கிலோமீட்டர் முன்பாக வலதுபுறம் ஒரு பாதை பிரிந்து செல்லும். அது தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையாகும். இந்தச் சாலையில் 7 கிலோமீட்டர் சென்றால், உத்திரகோசமங்கை திருத்தலத்தை அடையலாம்.

மீனவருக்கு அருள் செய்த ஈசன்

ராமேஸ்வரம் செல்லும் வழியில் மண்டபம் என்ற இடம் உள்ளது. இங்கு ஒரு மீனவர் வறுமையின் பிடியில் இருந்தாலும், தினமும் மங்களநாதரை வழிபடுவதை தவறாது செய்து வந்தார். ஒரு நாள் அவர் தனது பாய்மரப் படகில் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றார். அன்றைய தினம் சூறாவளிக் காற்று வீசியதால், அவரது படகு காற்றின் திசைக்கு இழுத்துச் செல்லப்பட்டது. பின்னர் கடலுக்குள் இருந்த ஒரு பாறையில் மோதி நின்றது. சற்றுநேரத்தில் அந்தப் பாறையின் மேற்பகுதி உடைந்து அப்படியே சரிந்து படகின் மேல் விழுந்தது. மறு நொடியே சூறாவளி நின்றுபோனது. மீனவர், தன்னுடைய பலத்தை எல்லாம் கூட்டி, கரையை நோக்கி படகை செலுத்தினார். பல நாட்களுக்குப் பிறகு மண்டபம் பகுதிக்கு வந்து சேர்ந்தார்.

அவரைக் காணாது பரிதவித்துப் போய் இருந்த குடும்பத்தினர், அப்போதுதான் மன நிம்மதி அடைந்தனர். கரைக்கு வந்ததும் தன் படகில் இரண்டு சிறிய பாறைகளும், ஒரு பெரிய பாறையுமாக இருந்த கற்களை எடுத்து தனது வீட்டின் முன்பாக படிக்கட்டு போல் போட்டார். மீனவரின் வீட்டிற்கு வந்து சென்றவர்களின் பாதங்கள் படப்பட, கற்களின் மீது இருந்த பாசிகள் அனைத்தும் அகன்று அந்த கற்கள் பச்சை வண்ணத்தில் ஒளி வீசத் தொடங்கியது. அது மரகதம் என்பதை உணர்ந்த மீனவர், தன்னுடைய வறுமையைப் போக்க இறைவன் அளித்த பரிசு என்று நினைத்தார். பின்னர் அதை அரசவையில் சேர்த்தார். அதற்கு மன்னன் பெரும் பரிசை மீனவருக்கு அளித்தான்.

அந்த மரகதப் பாறையைப் பார்த்த மன்னன், அதில் நடராஜரின் சிலையை வடிக்க நினைத்தான். ஆனால் அவ்வளவு பெரிய மரகதப் பாறையில் நடராஜரின் உருவத்தைப் பொறிக்க பல சிற்பிகளும் தயங்கினர். அப்போது சித்தர் சண்முக வடிவேலர் என்பவர், மரகத நடராஜரை வடிக்க முன்வந்தார். அதன்படி ஐந்தரை அடி உயர நடராஜரை, ஒன்றரை அடி உயர பீடத்துடன் ராஜ கோலத்தில், திருக்கரங்களில் உள்ள நரம்பு தெரியும் அளவிற்கு மிகவும் நுணுக்கமாக வடித்தார், சித்தர் சண்முக வடிவேலர். நடராஜருக்கு பால் அபிஷேகம் செய்யும்போது, அந்த நரம்புகளை நாம் காண முடியும்.

Next Story