நடராஜரால் சிறப்பு பெற்ற ஐம்பெரும் சபைகள்


நடராஜரால் சிறப்பு பெற்ற ஐம்பெரும் சபைகள்
x
தினத்தந்தி 30 Dec 2020 6:50 PM GMT (Updated: 30 Dec 2020 6:50 PM GMT)

நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள், ‘பஞ்ச சபைகள்’ என்றும், ‘ஐம்பெரும் சபைகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய இந்த ஐந்து திருத்தலங்களும், முறையே பொற்சபை, வெள்ளிசபை, ரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. மேற்கண்ட ஐந்து சபைகள் உள்ள திருத்தலங்களை சிறிய குறிப்பாக பார்க்கலாம்.

வெள்ளி சபை : சிவபெருமானின் திருவிளையாடல்கள் பெரும்பாலும் நடைபெற்ற இடமாக மதுரை திருத்தலம் திகழ்கிறது. மீனாட்சி அம்மனின் அரசாட்சியும், அருளாட்சியும் நிறைந்திருக்கும் மதுரையில்தான் மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த ஆலயம்தான் நடராஜரின் திருநடனம் கண்ட ‘வெள்ளி சபை’யாக திகழ்கிறது. இதனை ‘வெள்ளியம்பலம்’, ‘வெள்ளி மன்றம்’ என்றும் அழைப்பார்கள். இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் நடராஜப் பெருமான், தன் பக்தனான பாண்டிய மன்னனின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, வலது காலை ஊன்றி, இடது காலை தூக்கி நடனம் புரியும் நிலையில் காட்சி தருகிறார். இங்கு இறைவனின் நடனம் ‘சந்தியா தாண்டவம்’ என்று அழைக்கப்படுகிறது. பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்களுக்கு, தில்லையில் காட்டியதுபோலவே இங்கும் இறைவன் தனது திருநடனத்தை காட்டி அருள் செய்தார்.

சித்திர சபை : தென்காசி மாவட்டம் திருக்குற்றாலத்தில் அமைந்திருக்கிறது, குற்றாலநாதர் திருக்கோவில். இது அகத்திய முனிவர் வழிபாடு செய்த திருத்தலம் ஆகும். இங்கு சிவபெருமான் நடனம் புரிந்த இடம், ‘சித்திர சபை’ என்று வணங்கப்படுகிறது. இங்கு எமனை காலால் எட்டி உதைத்த ஈசன் தன் மனைவி பார்வதியுடன், மார்கண்டேயருக்கு அருளியபடி சித்திர வடிவில் காட்சியளிக்கிறார். இங்கு இறைவன் ஆடிய நடனத்திற்குப் பெயர் ‘திரிபுர தாண்டவம்’ என்பதாகும். இந்த தாண்டவத்தை கண்டுகளித்த பிரம்மதேவன், தானே இறைவனின் திருநடனத்தை ஓவிய வடிவில் வடித்ததாக கருதப்படுகிறது. அந்த இடமே சித்திர சபை. இதனை ‘சித்திர அம்பலம்’, ‘சித்திர மன்றம்’ என்றும் அழைப்பார்கள்.

பொற்சபை : கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ளது, திருமூலட்டநாதர் ஆலயம். இப்படிச் சொன்னால் பலருக்கும் தெரியாதுதான். சிதம்பரம் நடராஜர் கோவில் என்று சொன்னால்தான் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். இங்கு அருள்பாலிக்கும் ஆடல் அரசனான நடராஜர் வீற்றிருக்கும் இடமே, ‘பொற்சபை’ என்று அழைக்கப்படுகிறது. இதனை ‘பொன்னம்பலம்’, ‘கனக சபை’, ‘பொன் மன்றம்’ என்ற பெயர்களாலும் அழைப்பார்கள். இறைவன் தனது திருநடனத்தை, பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்களுக்கு காட்டி அருளிய தலம் இதுவாகும். இந்த தலத்தில் நடராஜர், தனது இடது காலை ஊன்றி, வலது காலைத் தூக்கி நடனம் ஆடுகிறார். இத்தல இறைவன் ஆடும் நடனம் ‘ஆனந்தத் தாண்டவம்’ ஆகும்.

தாமிர சபை : திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் முக்கியமான திருத்தலங்களில் ஒன்று, காந்திமதி உடனாய நெல்லையப்பர் திருக்கோவில். இங்கு நடராஜர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கும் இடத்திற்கு ‘தாமிர சபை’ என்று பெயர். இதற்கு ‘தாமிர அம்பலம்’, ‘தாமிர மன்றம்’ என்ற பெயர்களும் உண்டு. இந்த சபையில், இறைவன் தன் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி திருநடனம் புரிகின்றார். இந்த நடனத்திற்கு ‘திருத் தாண்டவம்’ என்று பெயர்.

ரத்தின சபை : திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ளது, வடாரண்யேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்தில் காளியுடன் போட்டி நடனம் ஆடிய சிவபெருமான், முடிவில் தன்னுடைய ஒரு காலை தலைக்குமேல் தூக்கி ஆடி, காளிதேவியை வெற்றிகொண்டார் என்று தல புராணம் சொல்கிறது. இந்த ஆலயத்தின் இறைவன் - வடாரண்யேஸ்வரர், இறைவி - வண்டார்குழலி அம்மை. இங்கு இறைவன் நடனம் ஆடிய இடம் ‘ரத்தின சபை’ எனப்படுகிறது. ‘ரத்தின அம்பலம்’, ‘மணி மன்றம்’ என்ற பெயர்களும் இதற்கு உண்டு. இங்குள்ள இறைவன் எட்டு கரங்களுடன், வலது காலை தரையின் ஊன்றி இடது காலால் காதணியை மாட்டும் தோரணையில் காட்சியளிக்கின்றார். காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து சென்று, இங்குள்ள நடராஜரின் திருவடியில் அமர்ந்து, அனுதினமும் அவரது திருநடனத்தைக் காணும் பேறு பெற்றார். இங்கு இறைவன் ஆடும் நடனம் ‘ஊர்த்துவ தாண்டவம்’ என்று போற்றப்படுகிறது.

Next Story