குபேரன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட திருத்தலம்


குபேரன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட திருத்தலம்
x
தினத்தந்தி 23 Jan 2021 11:00 PM GMT (Updated: 20 Jan 2021 7:36 PM GMT)

மதுரை அருகே உள்ளது சிம்மக்கல் என்ற ஊர். இங்கு ஆதிசொக்க நாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது.

இங்குள்ள மூலவர், ‘சொக்க நாதர்’ என்றும், அம்பாள் ‘மீனாட்சி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். இங்குள்ள சிவலிங்கம், உலகத்தில் உள்ள செல்வங்களை எல்லாம் தன் வசம் வைத்துக் காத்து வரும் குபேரன் பிரதிஷ்டை செய்து வழிபட்டது என்பது சிறப்புக்குரியது. தன்னிடம் உள்ள செல்வம், மென்மேலும் பெருக வேண்டும் என்பதற்காக, குரேபன் இந்தப் பகுதிக்கு வந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக தல புராணம் சொல்கிறது. மேலும் இந்தக் கோவில் புதன் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. நவக்கிரகங்களில் ஒருவரான புதன், இந்தத் தலம் வந்து இறைவனை வழிபட்டு பேறுபெற்றுள்ளார்.

மதுரைப் பகுதியை, குசேல பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்தான். அவன் கல்வியில் மிகச் சிறப்பு படைத்தவனாக இருந்தான். இதைக் கேள்விப்பட்டு, தமிழ்சங்கத்தில் புலவராக இருந்த கபிலரின் நண்பரான இடைக்காடர், பாண்டியனின் அரண்மனைக்கு வந்தார். மன்னனின் முன்பாக நின்று தான் இயற்றி வந்த பாடலைப் பாடினார். ஆனால் கல்வி அறிவால் செருக்கு கொண்டிருந்த மன்னன், இடைக்காடரின் பாடலை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை. அதோடு இடைக்காடருக்கு உரிய மரியாதையையும் அவன் அளிக்கவில்லை.

இதனால் மன வருத்தம் அடைந்த இடைக்காடர், மதுரையில் வீற்றிருக்கும் இறைவன் முன்பாக அமர்ந்து வழிபட்டார். “இறைவா.. நான் மன்னனின் புலமை மேல் பற்று கொண்டு அவனிடம் என்னுடைய பாடலைப் பாடிக் காட்ட சென்றேன். ஆனால் அவன் என்னை அவமதித்து விட்டான். அவன் என்னை அவமதித்தானா, அல்லது உன்னை அவமதித்தானா என்பதை நீயே பார்த்துக் கொள்” என்று கூறிவிட்டு, தணியாத கோபத்துடன் வட திசை நோக்கி புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இடைக்காடரின் உள்ளக்குமுறலைக் கேட்ட சிவபெருமான், தன்னுடைய லிங்க வடித்தை மறைத்து, உமாதேவியருடன் கோவிலை விட்டு வெளியேறி, மதுரை ஆலயத்தின் நேராக, வைகை ஆற்றுக்கு தெற்கே உள்ள கோவிலில் எழுந்தருளினார். இடைக்காடருக்கும் காட்சி கொடுத்து, மன்னனுக்கு பாடம் புகட்டுவதாகக் கூறினார். மறுநாள் அதிகாலை மதுரையம்பதியில் உள்ள இறைவனை தரிசிக்க வந்த பக்தர்கள், அங்கு சிவலிங்கம் காணாததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த விஷயத்தை மன்னனிடம் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக கோவில் நிர்வாகிகள் அனைவரும், அரண்மனையை நோக்கிச் சென்றனர். வழியெங்கும் மதுரை நகரமே, பொலிவிழந்து இருப்பதையும் கண்டார்கள்.

மன்னனின் முன்பாகச் சென்றவர்கள் பதற்றத்துடன், “மன்னா.. கோவிலில் இறைவனைக் காணவில்லை. அம்பாளும் இல்லை. நகரமே பொலிவிழந்து காணப்படுகிறது” என்றனர்.

அதைக் கேட்டு மன்னன் மிகவும் வருத்தம் அடைந்தான். “இறைவா.. நான் செய்த தவறு என்ன? தாங்கள் உமாதேவியுடன் இங்கிருந்து எங்கு சென்றீர்கள்?” என்று புலம்பினான். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. “நீ என்னுடைய பக்தனான இடைக்காடரை அவமதித்து விட்டாய். அதனால்தான் இந்த அசம்பாவிதம் நடைபெற்றது” என்றது அந்தக் குரல்.

அப்போது சிலர் ஓடி வந்து, “மன்னா.. இறைவனும், இறைவியும் வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள ஆலயத்தில் எழுந்தருளியிருக்கிறார்கள்” என்று கூறினர். இதையடுத்து மன்னன் தன்னுடைய பரிவாரங்களுடன் அந்த ஆலயத்திற்குச் சென்றான்.

அங்கு எழுந்தருளியிருந்த இறைவன் முன்பாக மண்டியிட்டு, “சொக்கநாத பெருமானே.. தாங்கள் அங்கிருந்து இங்கே வந்து எழுந்தருளியிருப்பதன் காரணம் என்ன? நான் செய்த தவறை மன்னித்து மீண்டும் மதுரையில் எழுந் தருள வேண்டும்” என்று வேண்டினான். இறைவனை நினைத்து துதிப் பாடல் களையும் பாடினான்.

மன்னனின் வழிபாட்டால் மகிழ்ந்த இறைவன், “பாண்டியனே.. எல்லாத் தலங்களையும் விட, இந்த திருவாலவாயே உயர்ந்தது. மேலும் நான் இருக்கும் லிங்கங்களிலேயே, குபேரன் பூஜித்த இந்த லிங்கம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. எனவே இன்று முதல் இந்த தலம் ‘வடதிருவாலவாய்’ என்று அழைக்கப்படும் என்று கூறினார்.

மதுரையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் சிம்மக்கல் என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம், ‘ஆதிசொக்கநாதர் கோவில்’ என்றும், ‘பழைய சொக்க நாதர் கோவில்’ என்றும் அழைக்கப்படுகிறது.

Next Story