அம்மன் சன்னிதியில் திருநீறு


அம்மன் சன்னிதியில் திருநீறு
x
தினத்தந்தி 1 March 2021 10:29 PM GMT (Updated: 1 March 2021 10:29 PM GMT)

தொடர்ந்து 6 வாரங்கள், தேங்காய் உடைத்து, அதில் நெய் விளக்கேற்றி வேண்டிக்கொண்டால், நினைத்த காரியம் நிறைவேறும்.

* திருவாரூர் அருகில் மணக்கால் அய்யம்பேட்டையில் அமைந்துள்ளது, ஸ்ரீதேவி - பூதேவி உடனாய வைகுண்ட நாராயணப் பெருமாள் கோவில். இந்த ஆலயத்தில் யோக நரசிம்மருக்கு தனிச்சன்னிதி உள்ளது. இவருக்கு தொடர்ந்து 6 வாரங்கள், தேங்காய் உடைத்து, அதில் நெய் விளக்கேற்றி வேண்டிக்கொண்டால், நினைத்த காரியம் நிறைவேறும்.

* வேலூர் மாவட்டத்தில் உள்ளது காவேரிப்பாக்கம். இதன் அருகே உள்ள ரங்கநாதர் ஆலயத்தில் திருமணம் ஆகாத ஆண்கள், 116 விரலி மஞ்சளால் கோர்க்கப்பட்ட மாலை, 5 தேங்காய், ஒரு கிலோ நெய், ஒரு கிலோ நல்லெண்ணெய் சமர்ப்பித்து அர்ச்சனை செய்தால் திருமணம் கை கூடும். பெண்கள், ரங்கநாயகி தாயாருக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் மணப்பேறு வாய்க்கும். குழந்தை வரம் வேண்டுபவர்கள், தாயாருக்கு பால் அபிஷேகம் செய்வதோடு, வாசல்படியில் நெய்யால் மெழுகி, சர்க்கரையால் கோலமிட்டு வணங்க வேண்டும்.

* நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது ஆச்சாள்புரம். இங்கு திருவெண் ணீற்று உமையம்மை உடனாய சிவலோகத் தியாகர் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில்தான் தனது மனைவி தோத்திரப் பூர்ணாம்பிகை (சொக்கியார்) மற்றும் உறவினர்களுடன் திருஞானசம்பந்தர் தன்னுடைய 16-வது வயதில் சிவஜோதியில் ஐக்கியமானார். இந்த திருமணத்திற்கு வந்த அனைவருக்கும், இத்தல அம்பாள் பாரபட்சமின்றி திருநீறு கொடுத்து ஜோதியினுள் புகச் செய்ததால், இந்த ஆலய அம்மன் சன்னிதியில் விபூதியே முதன்மை பிரசாதமாக உள்ளது.

* தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது, பரக்கலக் கோட்டை. இங்கு பொது ஆவுடையார், மத்தியபுரீஸ்வரர் என்ற பெயர் கொண்ட இறைவனின் தலம் உள்ளது. இங்கே வெள்ளால மரமாகவே இறைவன் காட்சி தருகிறார். சோமவாரத்தில் முனிவர்களுக்கு உபதேசித்ததால் அன்று பூஜை நடக்கிறது. சிதம்பரத்தில் அர்த்தஜாம பூஜை முடிந்த பிறகு ஈசன் இங்கு வந்தால், இரவு 10.30 மணி முதல் 12 மணி வரை பூஜை நடக்கும். திங்கட்கிழமை இரவில் மட்டும் நடைதிறந்து வழிபாடு செய்யப்படும் இந்தக் கோவிலில், வருடத்திற்கு ஒரு முறை மட்டும் பகலில் நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெறும். அது தைப் பொங்கல் திருநாள்.

* மதுரை அடுத்த உசிலம்பட்டிக்கு அருகில் உள்ளது கோவிலாங்குளம். இங்கு பட்டசாமி தொண்டியாபிள்ளைசாமி கோவில் உள்ளது. இங்கு மாட்டுப் பொங்கல் அன்று வாழைப்பழத் திருவிழா நடைபெறும். அன்று வாழைப்பழம் சமர்ப்பிப்பார்கள். சோழவந்தான் என்ற ஊரில் இருந்து வாழைப்பழம் வாங்கி அங்கிருந்து தலைச்சுமையாக கோவிலுக்கு கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். வீட்டுக்கு ஒருவர் வாழைப்பழம் எடுத்துவர வேண்டும். வழிபாட்டிற்கு பின்னர், வாழைப்பழம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.


Next Story