மங்கல வாழ்வளிக்கும் ‘உடையவர் லிங்கம்’


மங்கல வாழ்வளிக்கும் ‘உடையவர் லிங்கம்’
x
தினத்தந்தி 23 March 2021 5:15 PM GMT (Updated: 23 March 2021 5:15 PM GMT)

தெய்வ திருமணங்கள், பங்குனி உத்திர நாளில் நடைபெற்றதாக, தமிழர்களிடையே காலம் காலமாக நம்பிக்கை நிலவி வருகிறது.

குறிப்பாக பரமசிவன்-பார்வதி திருமணம் பங்குனி உத்திர நாளில் நடைபெற்றதாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன. எமனிடம் இருந்து கணவரை மீட்க போராடி, அதில் வெற்றியும் பெற்ற சாவித்ரி கடைப்பிடித்த காரடையான் நோன்பு கடைப்பிடிக்கப்படுவதும் பங்குனி மாதத்தில்தான். இப்படி சாவித்ரி தன்னுடைய கணவரின் மரணத்தை வென்ற இந்த மாதத்தில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ காண வேண்டிய வழிபாடு ஒன்று நடைபெறுகிறது. இதுபற்றி பலரும் அறிந்திருக்க வாய்பில்லை. அந்த வழிபாட்டைப் பற்றி இங்கே பார்ப்போம்.

சிவ பூஜையில் 2 வகை உண்டு. ஒன்று- தன்பொருட்டு செய்யப்படும் ‘ஆத்மார்த்த பூஜை’, மற்றொன்று -பிறர் பொருட்டு செய்யப்படும் `பரார்த்த பூஜை' ஆகும்.பெரிய சிவாலயங்களிலும் கூட பரார்த்த பூஜா மூர்த்தியான மூலவர் உறையும் கருவறைக்குள், ஆத்மார்த்த பூஜைக்கென சிறிய லிங்கங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுவது வழக்கம். பல கோவில்களில் இந்த வகை ஆத்மார்த்த பூஜைக்கான லிங்கங்கள் மரகதத்தால் செய்யப்பட்ட லிங்கங்களாகவே இருக்கின்றன. உண்மையில் இந்த ஆத்மார்த்த பூஜைக்கான லிங்கங்களின் அருளாற்றல் அளப்பரியது. இதன் பெருமையைச் சொல்லும் 
வகையில்தான் ‘மூர்த்தி சிறியது ஆனாலும் கீர்த்தி பெரியது’ என்ற சொல்லே உருவானது.

இந்த லிங்கங்கள் பண்டைய மன்னர்களால் பூஜிக்கப்பட்ட லிங்கங்கள் ஆகும். அந்த மன்னர்களால் கோவிலுக்கென்று எழுதிவைக்கப்பட்ட சொத்துக்கள் அனைத்துக்கும் இந்த லிங்கங்களே ‘உடையவர்’ (உரிமையானவர்) என்பதால், இவ்வகை லிங்கங்கள் ‘உடையவர் லிங்கம்’ என அழைக்கப்படுகின்றன. நெல்லையப்பர் கோவிலிலும் ஆத்மார்த்த பூஜைக்கென வைக்கப்பட்டிருக்கும் மிகச்சிறிய லிங்கம், ‘உடையவர் லிங்கம்’ என்றே அழைக்கப்படுகிறது. இந்த உடையவர் லிங்கம் கருவறைக்குள் இருந்து வெளிவந்து பக்தர்களுக்கு காட்சி தருவது, பங்குனி உத்திர திருவிழா காலங்களில் மட்டுமே. 10 நாள் நடைபெறும் பங்குனி உத்திர பெருவிழாவின் 2-வது நாளில் இருந்து 9-வது நாள் வரை, தினமும் மாலை 6.30 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் உற்சவர்கள் வைக்கப்பட்டிருக்கும் உற்சவர் மண்டபத்தில் வைத்து இந்த உடையவர் லிங்கத்துக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த அபிஷேகத்தை காணும் பெண்கள் தீர்க்க சுமங்கலியாய் நீண்ட காலம் வாழ்வார்கள் என்ற ஐதீகம் உள்ளது.

தன் பக்தனான சுவேத கேது மகராஜாவுக்காக, காலனை காலால் கடிந்த காலசம்ஹார மூர்த்தியாக வீற்றிருப்பவர் நெல்லையப்பர். இவரது ஆலயத்தில் உள்ள உடையவர் லிங்கத்தை, தெய்வீக திருமணமாம் பரமசிவன்-பார்வதி திருமணம் நடைபெற்றதும், சாவித்ரி தனது கணவனை எமனிடம் இருந்து மீட்டு வந்த காரடையான் நோன்பு இருக்கும் காலமுமான பங்குனி மாதத்தில் தரிசித்தால் மங்கல வாழ்வு மங்கையருக்கு அமையும்.

Next Story