ஆன்மிகம்

மூன்று சக்கரத்தாழ்வார்கள் அருளும் ராஜகோபால சுவாமி ஆலயம் + "||" + The Chakraththaazhvaar grace Rajagopala Swamy Temple

மூன்று சக்கரத்தாழ்வார்கள் அருளும் ராஜகோபால சுவாமி ஆலயம்

மூன்று சக்கரத்தாழ்வார்கள் அருளும் ராஜகோபால சுவாமி ஆலயம்
தஞ்சாவூர் வடக்கு வீதி அருகே ராஜகோபால சுவாமி திருக்கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தை ‘மதனகோபாலப் பெருமாள் கோவில்’ என்றும் அழைப்பார்கள்.
கோவில்கள் நிறைந்த மாவட்டமாக, தஞ்சாவூர் மாவட்டம் திகழ்கிறது. இங்கு தஞ்சாவூர் வடக்கு வீதி அருகே ராஜகோபால சுவாமி திருக்கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தை ‘மதனகோபாலப் பெருமாள் கோவில்’ என்றும் அழைப்பார்கள். இந்த ஆலயத்தில் மூலவராக இருப்பது, சக்கரத்தாழ்வார். சுதர்சனவல்லி- விஜயவல்லி உடனாய சக்கரத்தாழ்வாராக, இறைவன் வீற்றிருக் கிறார்.

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்டு 88 திருக்கோவில்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான், இந்த ஆலயம். பொதுவாக பெருமாள் கோவில்களில் மூலவராக பெருமாள்தான் வீற்றிருப்பார். சக்கரத்தாழ்வார், தனிச்சன்னிதியில் எழுந்தருளியிருப்பார். அவருக்கு பின்புறம் நரசிம்மரின் உருவம் இடம்பெற்றிருக்கும்.

ஆனால் இங்கு சக்கரத்தாழ்வார், மூலவராக இருக்கும் காரணத்தால், கோவில் ராஜகோபுரத்தின் பின்புறம் வலது பக்கத்தில் யோக நரசிம்மரும், இடதுபக்கத்தில் கல்யாண நரசிம்மரும் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார்கள். இந்த இரண்டு நரசிம்ம மூர்த்திகளும், நேர் பார்வையாக மூலவரான சக்கரத்தாழ்வாரை பார்த்தபடி இருப்பது ஆலயத்தின் தனித்தன்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. இத்தல சக்கரத்தாழ்வாருக்கு, ‘சுதர்சனர்’, ‘சக்கரபாணி’ ஆகிய பெயர்களும் உண்டு.

இந்த ஆலயத்தில் மூன்று சக்கரத்தாழ்வார்கள் இருப்பது சிறப்புக்குரியது. மூலவரான சக்கரத்தாழ்வார் 16 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். அவரைப் போலவே, உற்சவரான சக்கரத்தாழ்வாரும் கூட, 16 திருக்கரங்களுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இது தவிர அஷ்டபுஜம் எனப்படும் 8 கரங்களுடன் கூடிய சக்கரத்தாழ்வாரும் இந்த ஆலயத்தில் இருக்கிறார். ஆலயத்தின் உட்புறத்தில் நடத்தப்படும் சுவாமி புறப்பாட்டுக்காக மட்டுமே இந்த சக்கரத்தாழ்வாரை பயன்படுத்துவது சிறப்புக்குரியதாக இருக்கிறது.

இந்தக் கோவிலின் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், அங்கு மற்றொரு சிறிய கோபுரம் இருக்கிறது. அந்தக் கோபுரத்தையும் கடந்து சென்றால், பலிபீடம், கருடாழ்வார் சன்னிதிகள் காணப்படுகின்றன. கருடாழ்வார், சக்கரத்தாழ்வாரை நோக்கியபடி இருக்கிறார். கருவறையில் எங்கும் இல்லாத வகையில், இரண்டு தாயார்களுடன் சக்கரத்தாழ்வார் வீற்றிருக்கிறார். இது அரிதிலும் அரிதான காட்சி என்று சொல்லப்படுகிறது.

இங்கு அருளும் சக்கரத்தாழ்வாரை வழிபாடு செய்தால், நவக்கிரக தோஷங்கள் விலகும் என்கிறார்கள். மேலும் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே, இத்தல இறைவனை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்பதும் பலரது கருத்தாக இருக்கிறது. சக்கரத்தாழ்வார் சன்னிதியின் முன்பாக நின்று, அவருக்கான காயத்ரி மந்திரத்தை ஒன்பது முறை பாராயணம் செய்தால், நவக்கிரக தோஷம் விலகுமாம்.

நவக்கிரக தோஷம் இருப்பவர்கள், தொடர்ச்சியாக 9 மாதங்கள் சித்திரை நட்சத்திரம் அன்றோ அல்லது 9 வியாழக்கிழமைகளோ அல்லது 9 சனிக்கிழமைகளோ வருகை தந்து, 9 அகல் விளக்கு ஏற்றிவைத்து, 9 முறை சக்கரத்தாழ்வாரை வலம் வந்து வழிபட வேண்டும். மேலும் சிவப்பு மலர்களால் ஆன மாலையை, சக்கரத்தாழ்வாருக்கு சூட்டி, அதோடு கற்கண்டு மற்றும் உலர்ந்த திராட்சையை நைவேத்தியமாக படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால், தோஷம் நீங்கும் என்கிறார்கள். நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். முற்பிறவி, இந்த பிறவியில் உண்டான பாவங்கள் நீங்கும். திருமணத்தடை விலகும். கல்வியில் இருந்த தடை அகன்று, ஞானம் பெருகும். இந்தக் கோவிலின் தல விருட்சமாக ‘அத்தி மரம்’ உள்ளது.

அமைவிடம்

தஞ்சாவூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திலும், தஞ்சை பெரிய கோவிலில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் இருக்கிறது.

சிவேந்திரர் கோவில்

சக்கரத்தாழ்வார் ஆலயத்தின் உள்ளே மேற்கு புறமாக அமைந்துள்ள ஒரு மண்டபத்தில், சிவேந்திரர் கோவில் அமைந்திருக்கிறது. இது மராட்டியர்களின் வழிபாட்டு தெய்வமாக இருந்திருக்கிறது. இந்தக் கோவிலில் சிவேந்திரர், தனது தேவியருடன் அருள்புரிகிறார். இங்குள்ள ஒவ்வொரு சிற்பத்திற்கு பின்னாலும், மிகப்பெரிய அறுங்கோணம் உள்ளது.

பகுளாமுகி அம்மன்

ராஜகோபால சுவாமி ஆலயத்தின் ராஜகோபுரத்திற்கும், இரண்டாவது கோபுரத்திற்கும் இடையே, ‘பகுளாமுகி அம்மன்’ ஆலயம் அமைந்திருக்கிறது. இந்த அன்னையை ‘காளியம்மன்’ என்றும் அழைப்பார்கள். இந்த அம்மன், மராட்டியர்களின் இஷ்ட தெய்வமாக இருந்திருக்கிறாள். இந்த அம்மனை, செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலத்தில் வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். இந்த கோவிலில் மூலவரான பகுளாமுகி அம்மனைத் தவிர, கஜலட்சுமி, பைரவர், மார்த்தாண்ட பைரவர், சிவ துர்க்கை, கோலாப்பூர் மகாலட்சுமி, விஷ்ணு துர்க்கை, சப்த கன்னியர் திருமேனிகள் உள்ளன.