முடிவில்லாத வாழ்வு பெறுவது எப்படி?


முடிவில்லாத வாழ்வு பெறுவது எப்படி?
x
தினத்தந்தி 31 May 2021 6:18 PM GMT (Updated: 31 May 2021 6:18 PM GMT)

கலிலேயாவில் இருந்து புறப்பட்டு, யோர்தான் நதியைக் கடந்து, யூதேயாவின் எல்லைப் பகுதிகளுக்குப் போய் மக்கள் மத்தியில் போதனை செய்தார் இயேசு.

அவரது புகழ் ஏற்கனவே பரவியிருந்ததால் மக்கள் கூட்டம் கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்து போனார்கள். தன்னை நாடிவந்த அனைவரையும் அவர் குணமாக்கினார். இயேசுவின் பின்னால் திரளான மக்கள் செல்வதைக் கண்ட யூத மத அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த பரிசேயர்கள், மக்களின் முன்பாக இயேசுவின் வார்த்தைகளைக் கொண்டே அவரைத் தவறானவர் என நிறுவ முயன்றுவந்தனர்.

ஒரு கிராமத்தில் இயேசு மக்கள் மத்தியில் இருந்தபோது, பரிசேயர்கள் அவரிடம் வந்தனர். அவர்களில் ஒருவர் இயேசுவிடம், “தன் மனைவியை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒருவர் விவாகரத்து செய்வது சரியா?” என்று கேட்டார்கள்.

அதற்கு இயேசு, “கடவுள், தொடக்கத்தில் மனிதர்களைப் படைத்தபோது அவர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார் என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா? அதன் காரணமாகவே, மனிதன் தன்னுடைய தாய், தந்தையை விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே உடலாக இருப்பார்கள் என்று இறவைன் சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா? அதன்படி, அவர்கள் இரண்டு பேராக இல்லாமல், ஒரே உடலாக இருப்பார்கள். அதனால், கடவுள் இணைத்து வைத்ததை எந்த மனிதனும் பிரிக்காமல் இருப்பாராக” என்று கூறினார்.

உடனே அந்தப் பரிசேயர், “அப்படியானால், விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுத்து மனைவியை விவாகரத்து செய்யலாம் என மோசே ஏன் கூறினார்?” என்று கேட்டு இயேசுவை மடக்கினார்.

அதற்கு இயேசு, “உங்களுடைய இதயம் இறுகிப்போயிருந்த காரணத்தால்தான் உங்கள் மனைவியை விவாகரத்து செய்ய அவர் அனுமதித்தார். ஆனால், தொடக்கத்திலிருந்து அவ்வாறு இல்லை. நான் உங்களுக்குச் சொல்கிறேன், பாலியல் முறைகேட்டைத் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறவன், முறைகேடான உறவுகொள்கிறான்” என்று சொன்னார். இயேசு இப்படிக் கூறியதும் பதில் ஏதும் கூறாமல், அவரைத் தொடர்ந்து சோதிக்க முடியாமல் பரிசேயர்கள் கிளம்பிச் சென்றனர்.

பரிசேயர்கள் நகர்ந்து சென்றதும் சீடர்கள் இயேசுவிடம், “திருமண பந்தம் இப்படித்தான் இருக்க வேண்டுமென்றால், திருமணம் செய்யாமல் இருப்பதே நல்லது” என்று கூறினார்கள்.

அதற்கு இயேசு, “திருமணம் செய்யாமல் இருக்கும் வரம் பெற்றவர்களைத் தவிர வேறு யாராலும் நீங்கள் கூறுவதுபோல் நடக்க முடியாது. சிலர் பிறவிக் குறைபாட்டால் திருமணம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள்; வேறு சிலர் மனிதர்களால் அந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்; இன்னும் சிலர் பரலோக அரசாங்கத்துக்காகத் தங்களையே அர்ப்பணித்து, திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்க முடிந்தவர்கள் அப்படி இருக்கட்டும்” என, துறவறம் குறித்துத் தெளிவாக எடுத்துக் கூறினார்.

அப்போது அவ்வூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் இயேசுவிடம் ஓடிவந்து, “போதகரே, முடிவில்லாத வாழ்வைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.

அதற்கு இயேசு, “முடிவில்லாத வாழ்வைப் பெற விரும்பினால், கட்டளைகளைத் தொடர்ந்து கடைப்பிடி” என்று அவனிடம் கூறினார்.

“எந்தக் கட்டளைகளை?” என்று அவன் ஆவலுடன் கேட்டான்.

இயேசு அவனிடம், “கொலை செய்யக்கூடாது, மனைவிக்குத் துரோகம் செய்யக்கூடாது, திருடக்கூடாது, பொய்சாட்சி சொல்லக்கூடாது, உன் தாய், தந்தைக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும், உன்னை நீ நேசிப்பதுபோல மற்றவர்களையும் நேசி ஆகிய கட்டளைகளை” என்று கூறினார்.

அதற்கு அந்த இளைஞன், “இவை அனைத்தையும் நான் ஏற்கனவே கடைப்பிடித்து வருகிறேன்; என்னிடம் இன்னும் என்ன குறை இருக்கிறது?” என்று இயேசுவை நோக்கி தன் கரங்களைக் குவித்துக் கேட்டான்.

அதற்கு இயேசு, “நீ குறையில்லாதவனாக இருக்க விரும்பினால், போய் உன் சொத்துகளையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, என்னைப் பின்பற்றி வா. அப்போது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் சேரும்” என்று கூறினார். இதைக் கேட்டு அந்த இளைஞன் துக்கத்தோடு திரும்பிப் போனான். ஏனென்றால், அவனிடம் நிறைய சொத்துகள் இருந்தன.

இயேசு தன் சீடர்களிடம் திரும்பி, “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன். கடவுளுடைய அரசாங்கத் துக்குள் ஒரு பணக்காரன் நுழைவதைவிட, ஊசியின் காதுக்குள் ஒரு ஒட்டகம் நுழைவது சுலபம்” என்றார்.


Next Story