இறைவனிடம் சரணடைவோம்


இறைவனிடம் சரணடைவோம்
x
தினத்தந்தி 31 May 2021 6:51 PM GMT (Updated: 31 May 2021 6:51 PM GMT)

இஸ்லாம், மனிதர்களுக்கு செய்யும் சேவையை மாபெரும் அறச்செயலாக கருதுகிறது. அது கடமைகளை இரண்டாக பிரிக்கிறது.

ஒன்று படைத்த இறைவனுக்கு நன்றிக்கடனாக ஆற்ற வேண்டிய கடமைகள், மற்றொன்று இறைவனின் படைப்புகளுக்கு ஆற்ற வேண்டிய சேவை, ஒத்துழைப்பு மற்றும் உதவிகள்.

தற்போதைய தலைமுறை சந்திக்காத ஓர் அச்சுறுத்தல்தான் கோவிட்-19 என்கின்ற சர்வதேச தொற்று நோய் பரவல். ஒரு வருடத்திற்கு அதிகமாக இந்த நோயின் வீரியம், கவலை, பீதி, மக்களிடையே அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இப்போராட்டத்தில் மருத்துவர்களின், செவிலியர்களின் கடுமையான பங்களிப்புடன், சமூக சேவகர்கள், பொதுமக்களும் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு மருத்துவ வசதி வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவதும், மனதால் பாதிக்கப்பட்டவர்களை மனநல ஆலோசகர் களுடன் இணைப்பதும் நமது பணிகளில் ஒன்றாகும். வெகுஜன மக்களுக்கு விழிப்புணர்ச்சி உண்டாக்குதல், தடுப்பூசி போட வழிகாட்டுதல் போன்றவை பொறுப்புள்ள மனிதர்களின் கடமையாகும். இவை அனைத்தும் நாம் பாதுகாப்பு எல்லைக்குள் இருந்து அரசு வழிக்காட்டல், ஆதரவுடன் பணிபுரியலாம்.

நபிகள் நாயகம் கூறினார்கள்: “யார் மக்களுக்குக் கருணை காட்டுவதில்லையோ அவருக்கு இறைவனும் கருணை காட்டுவதில்லை”.

“பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச் சிறந்த தர்மமாகும்”.

பல நெருக்கடிகளுக்குக்கிடையே இந்த தொற்று நோய் பல்வேறு மனதை தொடும் மனிதநேய சம்பவங்களை பதித்து இருக்கிறது. தனது உயிரையே பணயம் வைத்து இறந்தவர்களின் இறுதிச்சடங்குகளை நிறைவேற்றும் தியாகிகளை அடையாளம் காட்டியிருக்கிறது. நிராசையான இந்த காலத்தில் ஓர் நம்பிக்கை ஒளியை ஜொலிக்க வைத்திருக்கிறது.

இத்தருணத்தில் நோய்க்கு நிவாரணமாக, மனதிற்கு ஆறுதலாக, இன்னொரு முக்கியமான அம்சத்தின் பக்கமும் நாம் கவனம் செலுத்த கடமைப்பட்டிருக்கின்றோம். மருத்துவ உலகம் மிக உச்சத்தில் இருக்கும் காலத்தில் இந்த நோய்க்கிருமி மனிதனுக்கு மிகப்பெரிய சவாலை விட்டிருக்கிறது. மனித இயலாமை மற்றும் பலவீனங்களை சுட்டிக்காட்டும் மிகப்பெரிய பாடத்தை இத்தலைமுறை பயின்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மனித இழப்புகளுக்கும், சோகங்களுக்கும் அருமருந்தாக மனிதன், தன்னைப் படைத்த இறைவனின் பக்கம் திரும்ப வேண்டும். ஆன்மிக பலத்தை பெற முயற்சிக்க வேண்டும்.

படைத்தவனை மறந்து அல்லது மறுத்து வாழ்வது மனிதன் தன் வாழ்வில் செய்யும் மிகப்பெரிய பிழை ஆகும். இறைவன் கேட்கின்றான்: “மனிதனே! அருட்கொடையாளனாகிய உன் இறைவனைக் குறித்து உன்னை ஏமாற்றத்தில் வீழ்த்தியது எது?” (திருக்குர்ஆன் 82:6)

வாருங்கள், படைத்தவனின் பக்கம் திரும்புவோம். நோய் கொடுமையில் இருந்து நம்மை பாதுகாக்க, ஏக இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்த்திப்போம். நசீர் அதாவுல்லாஹ், சென்னை.


Next Story