மரம் அதனதன் கனியால் அறியப்படும்


மரம் அதனதன் கனியால் அறியப்படும்
x
தினத்தந்தி 29 Jun 2021 1:44 PM GMT (Updated: 29 Jun 2021 1:44 PM GMT)

இயேசு எல்லா நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் போய், அங்கிருந்த ஜெபக்கூடங்களில் கற்பித்தார். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கித்தார்.

இயேசு எல்லா நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் போய், அங்கிருந்த ஜெபக்கூடங்களில் கற்பித்தார். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கித்தார். எல்லா விதமான நோய்களையும் எல்லா விதமான உடல் பலவீனங்களையும் குணமாக்கினார். பெரும் திரளான மக்கள் கூட்டத்தைப் பார்த்தபோது அவருடைய மனம் உருகியது. மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் அதிகார வர்க்கத்தால் அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் இருந்தார்கள். அவர்கள் போலி இறைவாக்கினரிடமும் பணம் பிடுங்கும் சமயவாதிகளிடமும் மாட்டிக்கொண்டு தங்கள் துன்பங்கள் தீர்ந்துவிடாதா என்று ஏங்கினார்கள். அவர்களிடம் ‘போலிகள்’ குறித்த விழிப்புணர்வை இயேசு உருவாக்கினார்.

“போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள். ஒவ்வொரு மரமும் அதனதன் கனியால் அறியப்படும். போலி இறைவாக்கினரை அவர்களின் செயல்களைக்கொண்டே அறிந்துகொள்வீர்கள். நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும். மரம் அதன் கனியால் அறியப்படும். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியாது. அதைப் போல, செயல்களைக்கொண்டே அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள். நல்ல கனி கொடாத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும் என்று உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அதிகாரத் தொனியுடன் கற்பித்தார் இறைமகன்.

இறைமகன் இயேசு, கதைகளின் ஆற்றலை நன்கு உணர்ந்திருந்தார். எனவே, அவர் தந்தையாகிய கடவுளைப் பற்றி, அவருடைய அரசாங்கத்தைப் பற்றிப் புரியாத போதனைகள் செய்ய விரும்பவில்லை. கதைகள், உவமைகள் வழியே இறை உலகை அவர் எளிமையாக அறிமுகப்படுத்தினார்.

சீடர்கள் அவரிடம் வந்து, “ஏன் மக்களிடம் உவமைகளால் பேசுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “பரலோக அரசாங்கத்தைப் பற்றிய பரிசுத்த ரகசியங்களைப் புரிந்துகொள்ளும் பாக்கியம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இருக்கிறவனுக்கு அதிகமாகக் கொடுக்கப்படும், அவன் ஏராளமாகப் பெற்றுக்கொள்வான். ஆனால், இல்லாதவர்களிடமிருந்து இருப்பதும் எடுத்துக்கொள்ளப்படும். அவர்கள் பார்த்தும் பார்க்காதவர்களாகவும், கேட்டும் கேட்காதவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால்தான், நான் அவர்களிடம் உவமைகளின் மூலம் பேசுகிறேன். இந்த மக்கள் கண்களால் பார்க்காமலும் காதுகளால் கேட்காமலும் மனதால் உணராமலும் இருக்கும்படி, அவர்களுடைய இதயம் இறுகிப்போயிருக்கிறது. இவர்கள் தங்கள் காதால் மந்தமாய்க் கேட்கிறார்கள், தங்கள் கண்களை மூடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

Next Story